ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தினால் 2013 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவில் மாலைதீவில் 4.5 கிலோமீற்றர் தூரமளவிலான வீதி நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார்.
அத்துடன் மேற்படி நிர்மாணப்பணிகளுக்கென இலங்கையிலிருந்து சட்டத்துக்கு முரணாகவே கப்பல் மூலம் கருங்கல் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மாலைதீவில் வீதி நிர்மாணப்பணிகள் மற்றும் கப்பல் மூலம் கருங்கல் கொண்டு சென்றமை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை காலை 9.30க்கு சபாநாயகர் சமல் ராஜபக் ஷ தலைமையில் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகளின் பின்னர் வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணியின் பாராளுமன்றக் குழுத்தலைவர் அனுரகுமார திசாநாயக்கவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
முன்னதாக கேள்வி எழுப்பிய அனுரகுமார திசாநாயக்க எம்.பி. கடந்த ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தினால் மாலைதீவுக்கு செய்துள்ள நிதி உதவிகள், கருத்திட்டங்கள் அவற்றின் பெறுமதி உள்ளிட்ட விடயங்கள் குறித்து கேட்டார்.
இக்கேள்விகளுக்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகையில் மாலைதீவு எமது அயல் நாடாகும்.அந்நாட்டுக்கு எமது நாட்டிலிருந்து பல்வேறு ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைத்தியர்கள், ஆசிரியர்கள் போன்ற மனிதவள உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவது தடவையாக அந்நிய நாட்டில் வீதி நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
4.5 கிலோ மீற்றர் தூரத்திலான மேற்படி வீதி நிர்மாணப்பணிகளுக்கென இலங்கையிலிருந்து 99 இலட்சம் டொலர் அதாவது இலங்கை ரூபாவின் படி 13 ஆயிரம் இலட்சம் ரூபா இதற்கென ஒதுக்கீடு செய்து செலவிடப்பட்டுள்ளது என்றார்.
இதன் போது பிறிதொரு கேள்வியைத் தொடுத்த அனுரகுமார திசாநாயக்க எம்.பி. கருங்கல்லானது ஏற்றுமதி செய்ய முடியாத பொருட் தொகுதியாகும். ஆனால் இலங்கையிலிருந்து கப்பல் மூலமாக கருங்கல் ஏற்றிச் செல்லப்பட்டே மாலைதீவில் வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.இது சட்டத்தை மீறிச்செயற்பட்ட பாரதூரமான செயற்பாடாகும்.
எனவே இது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுமா எனக்கேட்க விரும்புகிறேன் என்றார்.கப்பல் மூலம் கருங்கல் கொண்டு சென்றமை சட்டத்துக்கு முரணானது. கடந்த காலங்களில் மக்கள் ஆட்சி இருக்கவில்லை. தற்போது அது ஏற்படுத்தப்பட்டுள்ளது.
எனவே 13 ஆயிரம் இலட்சம் ரூபா செலவிட்டு மாலைதீவில் வீதி நிர்மாணித் தமை கருங்கல் ஏற்றுமதி செய்யப்பட்டமை தொடர்பாக விசாரணைகள் மேற்கொள் ளப்படும் என்றார்.