புலிகள் இயக்கத்தை மீண்டும் மீளமைக்க முயற்சி செய்த கோபி என்பவருக்கு ஆதரவு அளித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப் பத்திரிகை எதுவும் தாக்கல் செய்யப்படாமல் 362 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த கிளிநொச்சி பாலேந்திரன் ஜெயகுமாரி நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்றுக் காலை ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 2 இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்ததுடன், வெளிநாடு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தான் வசிக்கும் பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் இரண்டு வாரத்திற்கு ஒரு தடவை கையொப்பமிட வேண்டும் என்றும் நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார்.

நேற்று 10ம் திகதி காலை 9.40 மணியளவில் வெலிக்கடை சிறையிலிருந்து ஜெயகுமாரி உட்பட 13 பேர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்களில் மூன்று பெண்கள் உட்பட ஏழு பேர் விடுதலையானார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பாலேந்திரா ஜெயகுமாரி, மகாலிங்கம் பத்மாவதி, ரேகன் சுபானி, அருளம்பலம் பிரபாகரன், முத்துலிங்கம் கஜவர்மன், கிருஷ்ணராஜ் ஸ்ரீதரன், ரேகன் ரவீந்திரன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர்.

ரேகன் என்பவரும், ரேகன் சுபானி என்பவரதும் ஒரு வயதும் 4 மாதமும் நிரம்பிய குழந்தையும் பிணையில் விடுதலை செய்யப்பட்டவர்களில் அடங்குவர்.

நெல்லியடி ஆயித்தியமலையைச் சேர்ந்த ரேகன் – சுபானி தம்பதிகளும் குழந்தையுடன் புலிகள் அமைப்பை மீள அமைக்க ஆதரவளித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தனர்.

நீதிமன்றத்துக்கு முன்பாக நேற்றும் மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் என்பன அமைதி போராட்டம் ஒன்றையும் நடத்தினர்.

நேற்று பிற்பகல் சுமார் 1.40 மணியளவில் ஜெயகுமாரி சட்டத்தரணி மங்களா சங்கருடன் நீதிமன்றத்துக்கு வெளியே வந்த போது அவரை ஆரத் தழுவி வரவேற்றதுடன் மலர்மாலை, மலர்ச் செண்டு கொடுத்தும் வரவேற்றனர்.

சிறையில் தவித்துக் கொண்டிருந்த தன்னை வெளியே கொண்டுவர அரும்பாடுபட்ட அனைத்து அமைப்புகள், புலம்பெயர் தமிழர்கள், பெண்கள் அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள், சகல அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு கரம் கூப்பி நன்றிகளை தெரிவித்துக் கொண்டார்.

காணாமற் போன என் பிள்ளை கிடைக்க வேண்டும் என்றுதானே கேட் டேன். அதைத்தவிர வேறு எந்த பிழையும் குற்றமும் நான் செய்யவில்லையே!

ஒரு குற்றமும் செய்யாத என்னை ஒரு வருஷம் சிறையில் அடைத்தார்கள். இன்று என் ஒரே ஒரு பெண் பிள்ளையுடன் ஆனாதரவாக நிற்கிறேனே.

தனியாக தவித்து நிற்கிறேனே! இன்றும் என் பிள்ளையை தாருங்கள் என்றுதான் கேட்கிறேன் என கண்ணீர் வற்றிய நிலையில் அழுது புலம்பியவாறே நீதிமன்றத்துக்கு வெளியே வந்தார்.

சிறுவர் இல்லத்தில் தன்னந் தனியே நிற்கும் தன் பெண் குழந்தையை சந்திக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி ஒரு புறம் இன்னும் தன் மகன் கிடைக்கவில்லை என்ற ஏக்கம் மறுபுறம் இருக்க சட்டத்தரணிகளுடன் வாகனத்தில் ஏறிச் சென்றார்.

இன்று கிளிநொச்சி புறப்பட்டுச் செல்லும் ஜெயகுமாரியுடன் அவரது மகள் இணைக்கப்பட்டு விடுவார் என சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

கிளிநொச்சி ஜெயகுமாரி மற்றும் மகாலிங்கம் பத்மாவதி ஆகியோரின் விடதலை சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கே.எஸ். ரத்னவேல் மற்றும் சட் டத்தரணிகளான மங்களா சங்கர், சுஜீவ தஹநாயக்கா, சுரேன் பர்னாண்டோ ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

ஏனையோரின் விடுதலைக்காக மனித உரிமைகள் இல்லம் சார்பாக சட்டத்தரணிகள் செந்தில் அகிலன், நேரு கருணாகரன் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

பிணையில் விடுதலை செய்யப் பட்டவர்களுக்கான வழக்கு மீண்டும் எதிர்வரும் ஜுலை மாதம் 7ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட வுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version