“எமது பிள்ளைகளுக்கு வீடு என்றால் அது எப்படி இருக்கும் என்றே தெரியாது. நாம் கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இவ்வாறு நிர்க்கதியான நிலையில் அகதி வாழ்க்கை வாழ்கிறோம்.
இங்கு வரும் அரசியல்வாதிகள் தொடக்கம் தொண்டர் ஸ்தாபனங்கள் வரை பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிச் செல்கிறார்கள். ஆனால், எதுவுமே நடந்தபாடில்லை.
நாம் விரக்தியின் உச்சத்தில் உள்ளோம். எமது குழந்தைகள் போஷாக்கற்றவர்களாக, அடிப்படை வசதிகள் அற்றவர்களாக காணப்படுகின்றனர். எம்மை ஆதரிக்க எவருமே இல்லை”
இவ்வாறு வேதனையுடன் கூறுகிறார்கள் வவுனியா பூந்தோட்ட அகதி முகாமில் (வாடும்) வாழும் அகதிகள்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடமைப்புத் தொடர்பிலும் பேசப்பட்டு வரும் நிலையில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் இன்றி வாழும் இந்த மக்கள் தொடர்பில் எவரது பார்வையும் படாதிருப்பது மிகவும் கவலைக்குரியதாகும்.
1983ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட கலவரம் காரணமாக மலைநாட்டில் பல்வேறு இடங்களில் இருந்தும் இடம் பெயர்ந்த இந்த மக்களின் சந்ததியினர் கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா ஆகிய பிரதேசங்களில் வாழ்ந்து வந்தனர்.
அன்றாடம் கூலி வேலை செய்தும், கமம் செய்தும் வாழ்ந்து வந்த இந்த மக்கள் 1996ஆம் ஆண்டு வரையும் சுமார் 13 ஆண்டு காலம் எவ்வித பிரச்சினையும் இன்றி தங்கள் வாழ்க்கையை நகர்த்திச் சென்றனர்.
இந்த நிலையில் தான் 1995 – 1996 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக இவர்கள் அங்கிருந்தும் இடம்பெயர வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது.
அன்று ஆரம்பித்த அகதி வாழ்வும் துயரமும் இன்றுவரை தொடர்கதையாகவே தொடர்ந்து வருவதாக ஆதங்கப்படுகின்றனர் குறித்த மக்கள்.
பூந்தோட்டம் அகதி முகாமில் தற்பொழுது 108 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் அவ்வாறு எந்தவித செயற்பாடுகளையும் தம்மால் காணமுடியவில்லை என்று கவலை தெரிவிக்கின்றனர் இந்த மக்கள்.
வவுனியா பூந்தோட்டம் அகதி முகாமில் வாழும் மக்களைச் சந்திப்பதற்காக கடந்த புதனன்று வீரகேசரி வாரவெளியீடு சார்பில் சென்றிருந்தபோது அந்த மக்கள் தங்கள் சோகக் கதையை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்கள்.
கணவன்மார் ஆங்காங்கே தொழிலுக்குச் சென்ற நிலையில், அங்கிருந்த இளம் தாய்மார் பலர் தங்கள் ஆதங்கத்தை பெரும் மன்றாட்டமாக கொட்டித் தீர்த்தார்கள்.
அவர்களில் இளம் தாய் ஒருவர் கூறுகையில்,
‘எங்கள் பரிதாப நிலையை எல்லோரும் வந்து கேட்டுச் செல்கிறார்கள். நாங்களும் கடந்த 30 வருட காலமாக எங்கள் துயரங்களைக் கொட்டித் தீர்த்து வருகின்றோம்.
ஆனால் எந்தவித மாற்றத்தையும் காணமுடியவில்லை. எமது பிள்ளைகளுக்கு வீடு என்றால் எப்படி இருக்கும் என்றே தெரியாது. எந்தவித சுகபோகங்களையும் அவர்கள் அனுபவித்ததில்லை. குச்சுகுடில், ஓட்டை வீடு என்று ஆதிவாசிகளைப் போன்று நாம் வாழ்கின்றோம்.
இந்தப் பூந்தோட்ட முகாமில் சுமார் 6 ஆயிரம் குடும்பங்கள் வரை முன்னர் இருந்தார்கள். அவர்கள் படிப்படியாகக் குடியேற்றப்பட்டு இப்போது நாம் தான் எஞ்சியுள்ளோம்.
சுமார் 108 குடும்பங்கள் இங்கு உள்ளன. ஏலவே இங்கிருந்த அகதி முகாம்கள் எரிந்து போன நிலையில் இருக்கும் கொட்டில்களிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். காற்று, மழை, வெயில் என அனைத்துக்கும் ஈடுகொடுத்து எமது வாழ்க்கை தொடர்கிறது.
அப்போது எனக்கு 3 வயதிருக்கும். இப்போது 3 வயதில் எனக்கு குழந்தையும் உள்ளது. ஆனால் எமது துயர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி கிட்டவில்லை. இந்த நிலைதான் எங்கள் குழந்தைகளுக்கும் தொடருமோ என்ற அச்சம் காணப்படுகின்றது.
எமக்கு சின்ன அடம்பனில் காணி வழங்கி குடியேற்றுவதாகக் கூறினார்கள். அதுவும் வெறும் பேச்சளவில்தான். அங்கு அடிப்படை வசதிகள் இல்லை என்று அறிகிறோம்.
அதுமட்டுமல்ல, யானைக்காடு என்றும் அறிகின்றோம். இங்கு மாங்குளம் வரை யானை புகுந்து அட்டகாசம் செய்யும் நிலையில் எங்கள் குழந்தைகளுடன் நாம் எப்படி வாழ்வது என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்களேன்.
எமக்கு கடந்த இரண்டு வருடமாக எந்தவிதமான நிவாரணமும் இல்லை. அன்றாட உழைப்பில் கிடைக்கும் வருமானத்தில் வாழ்கிறோம்.
வவுனியாவில் எமக்கு வாக்குரிமையுள்ளது. 350 பேர் வரையில் கடந்த தேர்தலில் வாக்களித்தோம். எமக்கு குறைந்த பட்சம் சிதம்பரபுரத்தில் காணி வழங்கி வீடமைத்துக் கொடுத்தால் பெரும் புண்ணியமாக அமையும். அல்லது எம்மை இந்தியாவுக்காவது அனுப்பி வையுங்கள் அதுபோதும்.
இவ்வாறு நாம் அன்றாடம் அனுபவிக்கும் துயரத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும்.
அவ்வப்போது யாராவது வந்து பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகளை வழங்கி விட்டு சென்று விடுவார்கள். படுக்கப் பாயோ, குடிக்கக் கோப்பையோ கூட எமக்கில்லை.
கடந்த தேர்தலின் போதும் எமக்குப் பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால், இதுவரை எதுவுமே நிறைவேறவில்லை.
எம்மை மீள்குடியமர்த்துங்கள். எமக்கு ஒரு துண்டு காணியை வழங்கி வீடமைக்க உதவுங்கள் என்று மனிதாபிமானக் கோரிக்கைகளையே விடுத்து வருகின்றோம். ஆனால், அவை யாவும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கின்றன.
இதனிடையே, நாங்கள் மீள்குடியேற விருப்பம் கொள்ளவில்லை என்றும் இந்த இடத்தில்தான் இருப்போம் என்றும் அடம்பிடிப்பதாகவும் அதிகாரிகள் சிலர் கூறுவதாக அறிகிறோம்.
அது உண்மைக்கு மாறான தகவலாகும். நாம் பொருத்தமான இடத்தில் குடியேறி நிம்மதியாக வாழவே ஆசைப்படுகின்றோம்.
இந்த பூந்தோட்ட அகதி முகாமை நீங்கள் பார்த்தாலே புரியும். மலசலகூட வசதியோ, தூய குடிநீரைப் பெறும் வசதியோ எதுவுமே கிடையாது. பற்றை நிறைந்த காடுகளுக்குள், பூச்சி புழுக்களுக்கு மத்தியில் நாங்களும் ஒரு ஜீவனாக வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
மின்சார வசதியையும் துண்டித்து விட்டார்கள். எமது வாழ்க்கை மாத்திரமல்ல, எம்மை சூழவுள்ள சூழலுமே இருண்டதாகியுள்ளது. இந்த நிலையை மாற்றுவது மனிதாபிமானமுள்ள அனைவரதும் கடமை என்பதை தாழ்மையுடன் எடுத்துக் கூற விரும்புகின்றோம்.
கடந்த பல தடவைகள் வவுனியா கச்சேரியில் இருந்தும் அதிகாரிகள் பலர் வந்து எம்மைச் சந்தித்து எமக்கு புதிய இடம் வழங்கி குடியமர்த்துவதாகக் கூறிச் சென்றார்கள். ஆனால், எதுவுமே நடந்தேறவில்லை. சதா துன்பத்தில் துவண்டு கொண்டிருக்கின்றோம்,
எமது நிலையறிந்து உதவ எவரும் முன்வருவார்களேயானால் அவர்களுக்கு நாம் மிகவும் கடமைப்பட்டவர்களாகவுள்ளோம். கடந்த கால யுத்தத்தால் பெரும் பாதிப்புக்களுக்குள்ளானவர்கள் நாங்கள்.
ஆனால், இன்று நாம் அனைவராலும் கைவிடப்பட்ட மக்களாக வாழ்கிறோம். எமது துயரங்களைக் கூறிக் கூறியே விரக்தியடைந்து விட்டோம். நாம் இன்னும் எவ்வளவு காலத்திற்கு வாழ்வோம் என்றே தெரியாது.
அந்த அளவுக்கு துன்பத்தை அனுபவித்து விட்டோம். இனிவரும் காலத்திலேனும் நாம் நிம்மதியாக இருக்க வழிசெய்யுங்கள். இதற்கு மேல் கூறுவதற்கு எதுவுமே இல்லை.’
இவ்வாறு பூந்தோட்ட அகதி முகாமில் வாழும் மக்களின் சோகக் கதை அமைந்துள்ளது. இவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தை யும் மக்கள் பிரதிநிதிகளையும் சார்ந்த தாகும்.
சந்திப்பு: ஆர்.பிரபா படப்பிடிப்பு: எம்.எஸ்.சலீம்