கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்துள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டில் 40 நாட்கள் விசாரணை நடைபெற்றுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரின் வாதமும் விசாரணையும் இன்று முடிவடைந்தது. இதையடுத்து, தீர்ப்பை ஒத்திவைப்பதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்துவரும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அறிவித்தார்.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ஜெயலலிதாவும் அவரது தரப்பினரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர்.

இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி சி.ஆர். குமாரசாமி விசாரித்துவந்தார்.

இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பு, அரசுத் தரப்பு ஆகியோரின் வாதங்கள் முடிவடைந்த நிலையில், பாரதீய ஜனதாக் கட்சியின் மூத்த தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தனது எழுத்துபூர்வமான வாதத்தை இன்று காலையில் தாக்கல் செய்தார்.

14 பக்கங்களைக் கொண்ட அவரது வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கும், ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞரும் பிற்பகலில் தங்கள் இறுதி வாதத்தை முன்வைக்க வேண்டும் என்று கூறி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார். அதன் படி பிற்பகலில் இருதரப்பினரும் தங்கள் வாதங்களை அளித்தனர்.

இதையடுத்து, இந்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக நீதிபதி சி.ஆர்.குமாரசாமி அறிவித்தார்.

இந்த மேல் முறையீட்டு வழக்கில் ஜனவரி ஐந்தாம் தேதியன்று கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வாதங்கள் துவங்கின. இதுவரை நாற்பது நாட்கள் விசாரணை நடைபெற்றிருக்கிறது.

Share.
Leave A Reply

Exit mobile version