ஹெமெட்: அமெரிக்காவில் 87 வயது பாட்டியை கற்பழித்த 15 வயது சிறுவனுக்கு 30 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை ஒட்டியுள்ள ஹெமெட் பகுதியில் உள்ள ஒரு முதியோர் காப்பகத்துக்குள் புகுந்த இரு பள்ளி மாணவர்கள் அங்கு தூங்கிக் கொண்டிருந்த 87 வயது பாட்டியை கற்பழித்தனர்.
மேலும் 2 பாட்டில் பிளீச்சிங் பவுடரை தண்ணீரில் கலந்து வாயில் ஊற்றி அவரை கொல்ல முயற்சி செய்துவிட்டு பின்னர் தப்பி ஓடிவிட்டனர்.
இதனையடுத்து அந்த பாட்டி அறைக்குள் இருந்த அபாய அறிவிப்பு பொத்தானை அழுத்தியதால் ஓடோடிவந்த காவலாளிகள் அவரை காப்பாற்றினர்.
இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த பாட்டி நடமாட முடியாத முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த நீதிபதி குற்றவாளிகள் இருவருக்கும் 30 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். 18 வயது நிறைவடையும் வரை சிறார்கள் காப்பகத்திலும், 18 வயதுக்கு பின்னர் கைதிகளுக்கான சிறையிலும் இந்த 30 ஆண்டு தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பின்போது நீதிமன்றத்தில் ஆஜரான அந்த பாட்டி, நீங்கள் எனக்கு செய்துள்ள தீங்கு என்ன? என்பதை எனது முகத்தை ஒரு முறை பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.
எனது சுதந்திரத்தை பறித்த நீங்கள் கட்டாயம் தண்டிக்கப்பட்டே தீர வேண்டும் என குற்றவாளிகளிடம் கண்ணீர் மல்க கூறியது, அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.