நாம் வாழ்ந்த  நாடும் வேண்டாம், நாம் வாழ்ந்த  ஊரும் வேண்டாம், நாம் வாழ்ந்த வாழ்க்கையும் வேண்டாம் என நாட்டை விட்டு  ஓடிவந்து… இங்கே  (வெளிநாட்டுக்கு) வந்து    நல்ல வசதிகளை பெற்றுக்கொண்டு  பின்பு…,

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, தமக்கை, தம்கையின் புருசன்,  தங்கச்சியின் புருசன், மனைவி,  மனைவியின் சொந்தபந்தங்கள்… என யாரையும் நாட்டில்  விட்டு வைக்காமல்  வெளிநாட்டுக்கு கூப்பிட்டு  பாதுகாப்பாக  வைத்துக்கொண்டு ..

நமக்கு  “வேண்டவே  வேண்டாம்”  என்று  விட்டு விட்டு   வந்த “நாட்டை”  இப்போ வேண்டுமென  கேட்டு  வெளிநாட்டிலிருந்து  பணத்துக்கு  மேல்  பணம்  கொடுத்து   நாட்டில்  30வருடமாக  சண்டையை  நடத்திய  புலியாதரவாளர்களுக்கு  இது சமர்ப்பணம்……

“மருந்து இல்லை என்று காலை வெட்டிவிட்டார்கள்”


உயர்­த­ரப்­பாடம் மூன்­றிற்கும் ரியூஷ­னுக்கு போறது என்றால் 1200 ரூபா வேணும். வீட்டு வாடகை 3000 ரூபா. இதை­விட நாங்கள் நால்­வரும் எங்கள் நால்­வரின் ஒரு வேளைச்­சாப்­பாட்­டிற்கே பணம் இல்­லாமல் இருக்­கிறோம்.

மீள் குடி­யேற்­றப்­பட்­ட பின்னர் குடும்­பத்­தோட காயப்­பட்டு அவ­ய­வங்­களை இழந்த எமக்கு கிடைத்த ஒரே ஒரு நிவா­ரணம் ஜெய்ப்பூர் கால் மட்­டும்தான்.

இளமையில் கல் சிலையில் எழுத்து என்ற ஆன்றோர் வாக்கிற்கு இணங்க இளமைக்கால கல்வியே பசுமரத்தாணி போன்று மனதில் நின்று நினைவில் நிலைபெற்ற எதிர்காலம் சிறப்புறுவதற்கு ஆணிவேராகின்றது.

யதார்த்தம் இவ்வாறிருக்கையில் யுத்தத்தின் கோரத்தால் எத்தனையோ உறவுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியிருக்கின்றது. நெஞ்சங்களில் ஏக்கங்கள் உருவாகியிருக்கின்றது.

கனவுகள் காணல் நீராகவே நீடிக்கும் நிலையும் காணப்படுகின்றது. குறிப்பாக எதிர்காலத்தில் நான் வைத்தியராவேன், ஆசிரியராவேன் என்ற பசுமையான கனவுகளுடன் பாடசாலை வாசலில் காலடி எடுத்து வைக்கின்றனர் இளம்பராயத்தினர். அவர்களின் கனவை ஆசிரியர்களும் பெற்றோரும் நனவாக்குவதற்காக அரும்பணியாற்றுகின்றனர்.

அவ்வாறிருக்கையில் நான் ஒரு ஆசிரியராக வரவேண்டும் என்ற இலட்சியக் கனவுடன் பாடசாலைக்கல்வியை ஆரம்பித்த ஓர் இளம் நெஞ்சம் தான் செல்வராஜா கீதாயினி. இடம்பெயர்வு. பின்னர் வறுமைக்கு மத்தியில் குடும்ப உறவுகளுடன் மகிழ்ச்சியான வாழ்வு உயிர் அச்சுறுத்தலால் வன்னி மண்ணை நோக்கிய பயணம் ஈற்றில் உயிர் தான் மிஞ்சியது.

ஆம், கோர யுத்தத்தில் தன்காலை இழந்தார். குடும்பம் வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்குண்டது உறவுகளை பிரிந்திருக்கவேண்டிய துர்ப்பாக்கியம்.

வாழ்க்கையின் விரக்தி கனவுகளை கலைத்தது. பாட சாலைக் கல்வியையே தூக்கியெறியும் அளவிற்குச் சென்றது.

இருப்பினும் தாயின் போராட்டமும் சகோதரத்தின் தியாகமும் மீண்டும் இந்த இளம் பெண்ணின் கனவை நனவாக்குவதற்கு கைகொடுக்க ஆரம்பித்தன.

தற்போது 20 வயதாகும் இந்த யுவதி உயர்தரக் கல்வியை கற்றுக்கொண்டிருக்கின்றார். இருந்த போதும் அவயவத்தை இழந்த இந்த யுவதி அன்றாட வாழ்வில் போராடும் நிலை நீடித்துக்கொண்டுதான் இருக்கின்றது. வளமான வாழ்வுப் பயணத்தை எம்முடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடந்த ஜயசிக்குறு பிரச்சினையோட இடம்பெயர்ந்து வன்னிக்கு வந்தனாங்கள்.

2009 ஆம் ஆண்டு பிரச்சினை உச்சக் கட்டத்தை அடைந்ததும் இடம் பெயர ஆரம்பித்தோம். ஒரு கட்டத்தில் இடம் பெயர முடியாத இக்கட்டான சூழலுக்குள் முடக்கப்பட்டோம்.

2009 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி மாலை மாத்தளன் பாதுகாப்பு பிரதேசத்தில் குடும்பத்தோட இருக்கும் போது 5 இஞ்சி என்று சொல்லப்படும் ஷெல் சத்தமே கேட்காமல் வந்து எங்கட குடும்பத்தை பதம் பார்த்தது.

எனக்கு இடது கால் இல்லை. அப்பாக்கு வலது கை முழங்கை மொளி இல்லை. தற்போது செயலிழந்த கையாக இருக்கு. அக்காவுக்கு வலது கால் தொடையை கிழித்துக் கொண்டு செல்பீஸ் போட்டுது.

நாங்கள் மூவரும் மயங்கி இரத்த வெள்ளத்தில் கிடக்கும் போது அம்மா தொண்டர்களின் உதவியோடு எங்களை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனா.

எங்கள ஆஸ்பத்திரிக்கு கொண்டு போவதை பாத்திட்டு மூத்த அண்ணா ஓடி வர பின்னாடி வந்த ஷெல்லுகளின் துகள்கள் பட்டு அவருக்கு தலையிலயும் பாதத்திலும் படுகாயம். இவ்வாறு குடும்பத்தோட ஆஸ்பத்திரிக்கு வந்த எங்களுக்கு மீண்டும் ஆஸ்பத்திரிக் களம் சோகத்தைத் தான் தந்தது.

காரணம் என்னை பரிசோதிச்சவை அம்மாவுக்கு சொன்னது காலைத்துளைச்ச பீஸ் நரம்பை பாதிச்சு விட்டது.

கால் எடுக்கா விட்டால் உயிர் போய்விடும் என்றும் அம்மா மறு பேச்சிற்கு இடமில்லாமல் கால் வேண்டாம் மகளின் உயிர்தான் வேணும் என்று சம்மதிச்சு என்ர கால வெட்டி பண்டேச்பண்ணி என்னை திருகோணமலைக்கு அனுப்பினார்.

அனுப்பும்போது காயப்பட்ட அப்பாவிற்கு கைக்கு கிடைத்த மட்டைகளை வைத்து கட்டி என்னோடு ஏற்றினார்கள். எங்களுக்கு துணையாக அம்மாவையும் ஏத்தினார்கள். மூவரும் திருகோணமலை ஆஸ்பத்திரிக்கு போய்விட்டோம்.

ஆனால் காயப்பட்ட அக்காவிற்கு புண் மாற முதலே ஆஸ்பத்திரியில் இடம் இல்லை என்று முகாமிற்கு அனுப்பி விட்டார்கள்.

முகாமிற்கு போனவாக்கு எந்த நாளும் கால் தீராத வேதனையை கொடுக்க மீண்டும் ஆஸ்பத்திரிக்கு போனா அவான்ர காலுக்குள்ள சட்டைப்பின் வைத்து தை பட்டு விட்டது.

அதற்காக மீண்டும் ஒப்பரேஷன் செய்து இப்ப கனதூரம் நடக்கவும் முடியாமல் நிற்கவும் முடியாமல் இருக்கிறா.

என்ர காலையும் திருமலையில் பின்னாடி பரிசோதித்த டாக்டர்மார் சொன்னவை அவசரப்பட்டு ஏன் காலை எடுத்தனிங்கள் மருந்தை கட்டி வந்திருந்தால் சீர் செய்திருக்கலாம் என்று.

இவ்வளவு இழப்பிற்கும் பிரதான காரணம் சீரான மருத்துவ வசதி இன்மையே. இதுதான் இவ்வாறு போச்சு என்றால் காயப்பட்ட அண்ணாவுடன் ஏனைய இருவரும் இணைந்து மூவரும் தனிய இடம்பெயர்ந்து ஆமிக்கட்டுப்பாட்டிற்கு வரும்போது, மூவரும் பிடிபட்டு இரண்டு வருடங்களாக தடுப்பில் இருந்து வெளியில் வந்தார்கள்.

கொடிகாமம் வரணியில மண் வீடென்றாலும் நாங்கள் 5 பிள்ளைகளும் அம்மா அப்பாவோட சந்தோஷமாக இருந்தோம். அப்பா விவசாயம் செய்தவர். அம்மா வீட்டிலிருந்தபடியே தையல் செய்வா.

இருவரின் ஒத்துழைப்புடன் சந்தோஷமாக இருந்த நாங்கள் 1996 ஆம் ஆண்டு ஜயசிக்குறு பிரச்சினையோட அண்ணாவையளை தேடி ஆமிக்காரர் வீட்டிற்குள் வரத் தொடங்க அம்மா என்ர பிள்ளையள் தான் எனக்கு வேண்டும்.

விவசாயமும் வேண்டாம் தையலும் வேண்டாம் என்று எங்களை கூட்டிக் கொண்டு வன்னிக்கு போனவா. கடைசியாக உயிருக்கு பயந்து சென்று காயப்பட்டு அவயவங்களை இழந்து இன்று ஆதரவற்று நிற்கிறோம்.

காரணம் இடம்பெயர்ந்து மீள்குடியேற்றம் என்று வரும்போது வன்னியில் எங்களுக்கு சொந்த நிலம் இல்லாததால் இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கவில்லை. இதற்கப்பால் கிராமசேவகரின் பதிவு இல்லை. நிவாரண அட்டை இல்லை.

இதனால் இடம்பெயர்ந்த பின் எந்த ஒரு உதவியும் எமக்குக் கிடைக்கவில்லை. சரி இங்கதான் (வன்னி) இல்லை என்று நாங்கள் வரணிக்கும் போய் அங்க ஆரம்பத்திலேயே எங்களிட்ட மண்வீடு இருந்தது.

அது முற்றாக சிதைக்கப்பட்டு விட்டது. அந்த இடத்திலேயே தற்காலிக வீட்டுத்திட்டம் என்ற பெயரில் அரைச்சுவர் வைத்து தகரம் போட்ட வீடு கட்டி தந்தவை. அதில தான் இருக்கிறம்.

நான் ஆரம்பத்தில படிச்ச வரணி பள்ளிக்கூடத்துக்கு இடம்பெயர்ந்து அவயவத்தை இழந்த நிலையில போனன். ஆனால் என்னை உள்ளீர்த்தார்கள்.

இருந்தாலும் அங்கு உள்ள மாணவர்கள் உறவுக்கார, ஊர்க்காரப் பெண் என்று தெரிந்தும் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. மூன்று மாதங்கள் படிக்கப் போயிருப்பேன்.

அங்கு எனக்கு தனிமையும் புறக்கணிப்பும் சுடுசொல்லும்தான் கிடைத்தது. அவயவத்தை இழந்தும் கூட இழப்பைப் பற்றி சிந்திக்காத என்னை மீண்டும் கஷ்டப்படுத்தியது. வரணிப்பாடசாலை வாழ்வு இவ்வாறான பிரச்சினைகளை ஏற்றுக்கொள்ளாத என் மனம் பாடசாலைக் கல்விக்கே முற்றுப்புள்ளி வைக்கு மளவிற்கு துணிந்தது.

ஆனால் என் பெற்றார் என்னை சோர விடவில்லை. மீண்டும் வன்னிக்கு கூட்டி வந்து எந்தவொரு வருமானமும் இல்லாத நிலையில் என்னை என் பெற்றோர் படிக்க வைக்கிறார்களே என எண்ணி தினம் தினம் கவலைப்படுவேன்.

எனது கவலையைபார்த்த என் அக்கா கிளிநொச்சியில இருக்கிற காமன்சிற்கு வேலைக்கு போறவா. காலை 5 மணிக்கு போனா மாலை 5 மணிக்கு வீடு திரும்புவா. மாதம் 10 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும். எங்கள் இருவரையும் அப்பா ஏலாத ஒற்றக் கையுடன் எங்களுக்கு சமைச்சுத்தந்து எங்களை பார்த்து வருகிறார்.

அம்மா வரணியில தற்காலிக வீட்டில இருக்கிறா. அங்கு பாத்றும் இல்லை. கிணறு இல்லை. தண்ணி வசதி இல்லை. மின்சார வசதி இல்லை. இருந்தாலும் என்னை படிப்பிக்க வேண்டும் என்ற ஆதங்கத்திலும் வரணியில் இருக்கிறா.

அங்கு இருந்தால் அவாவிடம் முந்தி தைச்ச ஆட்கள் ஓடர் கொடுப்பினம். இப்ப அவாக்கு 62 வயது இருந்தாலும் இரவு பகலாகத் தச்சு எங்களுக்கு காசு தருவா.

என் பெற்றோரின் மனம் போல எனக்கு இப்ப கல்வி கற்க நல்ல ஒரு பாடசாலை கிடைச்சிருக்கு. முரசுமோட்டை முருகானந்தா வித்தியாலயத்தில தற்போது 2016 ஆம் ஆண்டு உயர்தர மாணவியாக இருக்கிறேன்.

எங்கட அதிபர் உட்பட ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தரும் அயராத நம்பிக்கை ஊக்குவிப்பால் நான் மனதளவில் நிறைவான சந்தோஷத்தில் இருக்கிறேன்.

உயர்தரத்தில் தமிழ், இந்து நாகரிகம் மற்றும் கோம்சயன்ஸ் மூன்று பாடங்களும் படிக்கிறேன். ஒரு நாள் பாடசாலைக்கு போகா விட்டாலும் என்னை பல நல்லுள்ளங்கள் தேடி வருவார்கள் இருந்தாலும் ஒரே ஒரு கவலை எனக்கு கால் இல்லை என்பது மட்டும் தான்.

மீள் குடியேற்றப்பட்டபின் குடும்பத்தோட காயப்பட்டு அவயவங்களை இழந்த எமக்கு கிடைத்த ஒரே ஒரு நிவாரணம் ஜெய்ப்பூர் கால் மட்டும்தான். அதுவும் எனக்கு தொடையோட இல்லாமல் போனதால பெல்ட் போட்டு போட வேணும்.

சில நேரத்தில அது நடந்து போனால் கழன்று போய்விடும். கழன்றால் பொது இடங்களில் பூட்டிக் கொள்வது சிரமம் என்றே நான் கால் போடுவது இல்லை. இதனால் காலை கழற்றி விட்டு கிளச்சை பிடித்தே நடப்பேன்.

ஆனால் கிளச்சில நடப்பதனால இன்னுமொரு பாதிப்பு எனக்கிருக்கு ஒற்றைக்கால் பலன்ஸ் இல்லாததால் இருக்கிற காலில் வளைவு ஏற்படுகிறது. இதைப் பார்த்திட்டு டொக்டர் சொல்லுறது மற்றக் கால்ல பாரம் பொறுப்பதால் வளைவு ஏற்பட்டு வருகிறது.

எனவே காலை போட்டு நடக்கச் சொல்லி. ஆனால் எனக்கு ஜெய்ப்பூர் கால் சரியான பாரம். போட்டு நடக்க முடியாது. இருந்தாலும் என்நிலையை கருத்தில் கொண்டு தற்போது யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு நிறுவனத்தின் அனுசரணையுடன் செயற்கைக்கால் வழங்கப்படுகிறது. அதற்கு அளவெடுத்துள்ளார்கள். இன்னும் கால் தரவில்லை.

எனவே எனது வாழ்க்கைச் சரித்திரத்தை கேள்விகளாக தந்திருக்கிறேன். விடைகளை தரவிரும்பினால் எனது படிப்பிற்கு யாராவது உதவி செய்யுங்கோ.

காரணம் உயர்தரப்பாடம் மூன்றிற்கும் ரியூஷனுக்கு போறது என்றால் 1200 ரூபா வேணும். வீட்டு வாடகை 3000 ரூபா.

இதைவிட நாங்கள் நால்வரும் எங்கள் நால்வரின் ஒரு வேளைச்சாப்பாட்டிற்கே பணம் இல்லாமல் இருக்கிறோம்.

இதனால் நான் தற்போது தமிழ் பாடத்திற்கு மட்டும்தான் ரியூஷனுக்கு போறது. மற்றப் பாடங்கள் பள்ளிக்கூட ஆசிரியர்களே எனக்கு பாடசாலை நேரம் தவிர ஏனைய நேரத்தில எனக்கு கற்பித்து வழிப்படுத்தி வருகின்றார்கள்.

இதற்கப்பால் எங்கட தற்காலிக வீட்டில கறன்ட் இல்லை. கூரையில் பொத்தல் இல்லாத இடமே இல்லை. இருந்தும் 62 வயது அம்மா எனக்காக இராப்பகலாக காலடித்து தைத்து தாற பணத்திற்காகவாவது நான் படிச்சு நல்ல நிலைக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

எனது கல்விச் செயற்பாட்டிற்கும் பெற்றோரின் வாழ்வாதாரத்திற்கும் யாரும் உதவி செய்வீர்களாயின் காலமுள்ளவரை நாம் உங்களுக்கு கடனாளிகளாக இருப்போம்

எண்ணென்ப ஏனைய எழுத்தென்ப இவ்விரண்டும்

கண்ணென்ப வாழும் உயிற்கு

என்று கூறிய பெரியோரின் வாக்கிற்கிணங்க கண்ணான கல்வியை கருத்தோடு கற்கையில் வாழ்வு என்றும் வளம் பெறும். அவ்வாறான வாழ்வொன்றுக்காக ஏங்கும் இந்த இளம் யுவதிக்கு எம்மால் முடிந்தவரையிலான உதவிகளை அளிப்பதே சாலச்சிறந்தது.

-சிந்துஜா பிரசாத்-

Share.
Leave A Reply

Exit mobile version