சென்னை: 125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கொச்சைப்படுத்திப் பேச எங்கேயிருந்து வந்தது துணிச்சல்?
இதைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவரோடு தனிமையில் கூடிக் குலாவுவது ஏன்? என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, இரண்டு நாள் சுற்றுப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இலங்கை சுற்றுப் பயணத்தை மேற்கொண்டது குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

8218_content_mahi-modi mee6784உதவியாளர்கள் இன்றி மகிந்தவுடன் தனியாகப் பேசினார் மோடி

1987ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொழும்பு சென்றார்.
அப்போது அதிபர் ஜெயவர்த்தனாவோடு ஏற்பட்ட ஒப்பந்தத்தின் மூலமாகத்தான் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு ஒரே தமிழ் தாயகப் பகுதி உருவாக்கப்பட்டது. அப்படி உருவான பகுதியின் இடைக்கால நிர்வாக கவுன்சிலின் முதல்-அமைச்சராக வரதராஜ பெருமாள் தேர்வு செய்யப்பட்டார்.
சிங்கள மொழிக்கு இணையாக தமிழும் ஆட்சிமொழி என்ற தகுதி பெற்றது. ஒப்பந்தப்படி, முதலில் ஒப்புக்காக ஆயுதங்களை ஒப்படைத்த விடுதலைப் புலிகள் பொருந்தாதக் காரணங்களைக் கூறி மீண்டும் ஆயுதமேந்தி இந்திய அமைதி காக்கும் படை மீது போர் தொடுத்தனர்.
அதன் விளைவாக ஒப்பந்தத்தின் செயல்பாடுகள் தடைப்பட்டது. ஆனால், இந்திய பிரதமர் வலியுறுத்தலின் பேரில் இலங்கை நாடாளுமன்றத்தில் அதே ஒப்பந்த அடிப்படையில் பெறப்பட்ட உரிமைகளை உறுதி செய்யும் வகையில் செய்யப்பட்டது தான் 13-வது அரசமைப்புச் சட்டத் திருத்தம்.
அதுதான் இன்றைய இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை தமிழர்களுக்கு இருக்கிற ஒரே பாதுகாப்புக் கவசம்.
அதன் அடிப்படையில் தான் அதிகாரப் பகிர்வு நடைபெற வேண்டும். ஆனால், அது நிறைவேற்றுவதாக வாக்குறுதி கொடுத்த அன்றைய பிரதமர் ராஜபக்சே அதை செயலுக்குக் கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.
இந்திய அரசு பலமுறை வலியுறுத்தியும், அதை அசட்டையுடன் புறந்தள்ளியது அவரது பேரினவாத ஆணவப் போக்கையே வெளிப்படுத்தியது.
இலங்கை தமிழர்களுக்கு எதிராக ஆணவ அரசியல் நடத்திய ராஜபக்சேவும், நரேந்திர மோடியும் நெருங்கிய நண்பர்களாக இருப்பதற்கு பல கருத்தொற்றுமைகள் உள்ளன. பெரும்பான்மையினரை, சிறுபான்மையினருக்கு எதிராக அணி திரட்டி ஆதரவை பெருக்குவதுதான் இவர்களது செயல்முறை திட்டம். இவர் மதத்தின் பேரால் செய்கிறார்.
அவர் இனத்தின் பேரால் செய்கிறார். இவர்கள் இருவரும் நேற்று உதவியாளர்கள் துணையில்லாமல் தனிமையில் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருக்கிறார்கள்.
அதுவும் இந்த சந்திப்பு இந்திய அதிகாரிகளின் வற்புறுத்தலின் பேரில் ஏற்பாடு செய்யப்பட்டது என செய்திகள் கூறுகின்றன. இந்த சந்திப்புக்கு 2 நாட்களுக்கு முன்னால், ராஜபக்சே அளித்த பேட்டி ஒன்றில், ‘‘தமது தேர்தல் தோல்விக்கு ‘‘ரா” இந்திய உளவுத்துறை தான் முழுக்காரணம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த அமைப்பு சதி செய்து, எனக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதில் வெற்றி பெற்றுள்ளது” என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ராஜபக்சே கூறிய குற்றச்சாட்டு மூலம் இந்தியாவின் பாதுகாப்பையே கண்காணித்து உறுதி செய்கிற உளவுத்துறையையே களங்கப்படுத்தி, இழிவுபடுத்தியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு இதுவரை இந்தியத் தரப்பிலிருந்து எவரும் கடுமையான முறையில் மறுக்கவோ, ஆட்சேபனையோ தெரிவிக்கவில்லை.
ராஜபக்சேவுக்கு எதிர்த்துக் கருத்துக் கூறுவதில் இந்திய அரசுக்கு என்ன தயக்கம். நரேந்திர மோடியும், ராஜபக்சேவும் நெருக்கமான நண்பர்கள் என்பது தான் காரணமா? இதை விட இந்தியாவிற்கு தலைகுனிவும், அவமானமும் வேறு ஏதாவது இருக்க முடியுமா?
125 கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டின் உளவுத்துறை அமைப்பையே, அண்டையில் உள்ள 2 கோடி மக்கள் வாழ்கிற இலங்கை நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சே கொச்சைப்படுத்திப் பேச எங்கேயிருந்து வந்தது துணிச்சல்?
இதைக் கண்டித்திருக்க வேண்டிய பிரதமர் நரேந்திர மோடி அவரோடு தனிமையில் கூடிக் குலாவுவது ஏன்? அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே, ராஜபக்சே வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துக் கூறியவர் தான் நரேந்திர மோடி.
இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்தது அங்கே வாழ்கிற 25 லட்சம் தமிழ் பேசுகிற மக்களின் வாக்குகள் தான்.
இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழித்து, உடமைகளை, உரிமைகளை பறித்த ராஜபக்சேவை, நரேந்திர மோடி ஆதரிப்பது ஏன்? அரவணைப்பது ஏன்? முன்னாள் அதிபர் ராஜபக்சே, இந்தியாவின் எதிரி, சீனாவின் நண்பர். இலங்கையில் வாழ்கிற தமிழர்களின் ஒட்டு மொத்த எதிரி.
அங்கே வாழ்கிற தமிழர்களுக்கு எதிராக கொடிய அரசியலை நடத்தி இலங்கை மக்களால் தேர்தலில் வீழ்த்தப்பட்டு பதவியில் இருந்து தூக்கி எறியப்பட்ட ராஜபக்சேவை, நரேந்திர மோடி தாங்கி பிடிப்பதன் ரகசியம் என்ன?
இதைவிட தமிழர்களுக்கு செய்கிற துரோகம் வேறு ஏதாவது இருக்க முடியுமா? என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version