அனேகரின் வாழ்வில் சோகமான சம்பவங்கள் ஏற்படுவதுண்டு ஆனால் மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த சின்னத்தம்பி உதயசிறி தனது வாழ்வில் இவ்வாறான கொடூரமான சோகம் இடம் பெறுமென கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை.
உதயசிறி மட்டக்களப்பு மாவட்டத்தின் சித்தாண்டி நல்லைய்யா வீதி விநாயகர் கிராமத்தை சேர்ந்தவள்
சின்னத்தம்பி தவமணிக்கு 27 வயதான உதயசிறி ஐந்தாவது பிள்ளை உதயசிறி பிறந்து மூன்று மாதங்களிலேயே தனது தந்தையை இழந்தாள்.
உதயசிறியை அவளது தாய் மிகவும் கஸ்டப்பட்டு வறுமைக்கு மத்தியில் வளர்த்தெடுத்தாள்.
அப்பம் சுட்டும் விறகுவெட்டியும் தனது பிள்ளைகளை வளர்ப்பதில் தாய் தவமணி படாது பட்டாள். ஐந்து பெண் பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையுமாக ஆறு பிள்ளைகளை வளர்ப்பதில் உதயசிறியின் தாய் கஸ்டப்பட்டாள்.
இப் போது உதய சிறியின் குடும்பத்தில் மூன்று பெண் பிள்ளைகளும் திருமணம் செய்து விட்டனர்.
இன்னும் திருமணம் செய்வதற்கு உதயசிறியும் அவளது சகோதரியும், சகோதரனுமே உண்டு.
உதயசிறி கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையை எழுதி விட்டு மட்டக்களப்பு கூழாவடியிலுள்ள டயமன்ட் தொழிற்சாலையில் ஒரு மேற்பார்வை அதிகாரியாக கடமையாற்றி வந்தாள்.
ஆரம்பத்தில் சொற்ப சம்பளத்தை பெற்று வந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக மாதமொன்றுக்கு 15000 ரூபா சம்பளம் பெற்றுவந்த உதயசிறி இந்த வருமானத்தின் மூலம் தனது குடும்பத்தை பார்த்து வந்தாள்.
இன்னும் மூன்று நான்கு மாதங்களில் உதயசிறிக்கு திருமணமும் நடைபெற இருந்தது. இதற்காக திருமணமும் நிச்சயப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் சற்று எதிர்பாரத சோகம் கடந்த 14.2.2015 அன்று உதயசிறியின் வாழ்வில் அரங்கேறியுள்ளது.
அன்று தனது தொழிற்சாலை நண்பர்களுடன் சிகிரியா மலையைப்பார்ப்பதற்காக சுற்றுலா செல்கின்றாள் உதயசிறி தனது தாயிடம் நாங்கள் எல்லோரும் ஒரு டுவர் போகின்றோம் இன்று மாலை வந்து விடுவோம் எனக் கூறிவிட்டு விடைபெற்றுச் சென்றாள் உதயசிறி ஆனாள் உதய சிறி அன்று சென்றவள் இது வரை வீடு திரும்பவில்லை.
இதை அங்கிருந்த காவலாளிகள் உடனே காணவிட்டாலும் பின்னர் அங்கு எழுதப்பட்டிருப்பதை கண்டு இந்த சுற்றுலாக்குழுவினரைப் பார்த்து உதயா என்றால் யார் என விணவியுள்ளனர். அப்போது நான்தான் உதயா என சித்தாண்டி உதயசிறி தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாள்
நீங்கள் அதில் உங்கள் பெயரை எழுதுனீர்களா எனக் கேட்டதற்கு உதய சிறி எழுதியதை ஒப்புக் கொண்டதையடுத்து காவலாளிகள் இவவை கைது செய்து அன்று மாலையே சிகிரியா பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
அப்போது உதயசிறியுடன் நண்பிகள் சிலரும் பொலிஸ் நிலையம் வரை சென்று அன்று இரவு முழுவதும் பொலிஸ் நிலையத்திலேயே கழித்துள்ளனர்.
நான் செய்தது தவறுதான் என்னை விடுதலை செய்யுங்கள் நான் ஒரு ஏழைக்குடும்பம், எனது தாய் குடும்பத்தினரை நானே கவனித்து வருகின்றேன்.
என்னை விடுதலை செய்யுங்கள் என உதயசிறி பொலிஸ் நிலையத்தில் அழுது மன்றாடினால் உதயசிறியின் நண்பிகளும் மன்றாடினர் ஆனால் பொலிசார் அவவை விடுதலை செய்யவில்லை.
மறுதினமான 15.2.2015 அன்று தம்புள்ள நீதிமன்றத்தில் சிகிரியா பொலிசார் உதயசிறியை ஆஜர் படுத்தினர்
உதயசிறியை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
தனது பெயரை சிகிரியா குண்றின் கண்ணாடிச்சுவரில் எழுதிய சாதரண விடயம் இவ்வளவு பாரதூரமாக வருமென்று உதயசிறி கிஞ்சித்தும் எதிர்ப்பார்த்திருக்கவில்லை.
அரும்பொருட்கள் காட்சியகம் நூதனசாலை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் அதன் சொத்துக்களை தொடுவது அதில் எழுதுவது அதை எடுப்பது என்பது தண்டனைக்குரிய குற்றமாக உள்ளதை உதயசிறி அறிந்திருக்கவில்லை.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த உதயசிறிக்கு 2.3.2015 அன்று இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டது தம்புள்ள நீதிபதியினால் தீர்ப்பளிக்கப்பட்டது.
அன்றிலிருந்து அநுராதபுரம் சிறைச்சாலையில் உதயசிறி சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றாள்.
உதயசிறியை அநுராதபுரம் சிறைச்சாலையில் ஒவ்வnhரு நாளும் பார்க்க முடியாது. மாதத்தில் ஒருதடவைதான் பார்க்க முடியும்.
நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படும் அன்று உதய சிறியின் தாய் தவமணி மற்றும் குடும்பத்தின் சிலர் பார்வையிட்டுள்ளனர்.
தாயிடம் உதயசிறி அன்று என்னை எப்படியாவது விடுதலை செய்ய நடவடிக்கை எடுங்கள் என கெஞ்சி அழுதுள்ளாள்.
இது தொடர்பில் உதயசிறியின் குடும்பத்தினர் அரசியல் வாதிகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்களை நாடியுள்ளனர்.
அவர்கள் உதயசிறியின் விடுதலைக்காக முயற்சித்து வருகின்றனர்.
அதே போன்று இவவுக்கு வழங்கப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை தீர்ப்பை மேண்முறையீடு செய்வதற்கும் மட்டக்களப்பிலுள்ள சில சட்டத்தரணிகள் முன் வந்துள்ளனர்.
அவர்களுக்கு உதவி செய்வதற்கு கொழும்பிலுள்ள சில சட்டத்தரணிகளும் முன்வந்துள்ளதாக அறியமுடிகின்றது.
ஜனாதிபதியின் கவனத்திற்கு இவ்விடயத்தை கொண்டு சென்று ஜனாதிபதி பொது உதயசிறிக்கு பொதுமன்னிப்பு வழங்கினாள் உதயசிறியை விடுதலை செய்ய முடியும் என கூறப்படுகின்றது.
அந்த வகையில் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள எனது மகளுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கி மகளை விடுதலை செய்ய வேண்டும் என தாய் தவமணி ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனது மகளுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையை இட்டு தான் பெரிதும் வருந்துகிறேன். எனது மகளின் விடுதலைக்காக பலத்த கஷ்டங்களுக்கு மத்தியிலும் சட்டத்தரணி ஒருவர் மூலம் முயற்சி செய்தோம்.
என்றாலும் சிங்கள மொழி தெரியாததால் நீதிமன்றத்தில் பேசப்பட்ட விடயங்கள் எதனையும் எங்களால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
இறுதியில் இரண்டு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் கூறிய பின்னர்தான் எங்களுக்குத் தெரியவந்தது என கண்ணீர்’ மல்கக் கூறினார்.
‘நான் ஒரு விதவை, நான் எனது மகளின் வருமானத்தில்தான் வாழ்ந்து வருகிறேன், அன்றாடம் மாவு இடித்து, அப்பம் சுட்டே எனது வாழ்கையை ஓட்டுகிறேன். இந்நிலையில் எனது மகளுக்கு ஏற்பட்டுள்ள இந்நிர்கதி நிலையை எண்ணி தான் பெரிதும் வருத்தமடைந்துள்ளதாகவும்,
தனது மகளின் விடுதலைக்காக முடியுமான ஒத்துழைப்பை தான் பெரிதும் எதிர்பார்க்கின்றேன்.
மிகவும் கஸ்டத்திற்கு மத்தியில் எனது மகளை வளர்த்து அவவை கல்வி கற்கவைத்தேன். இப்போது எனக்கு கண் பார்வையும் குண்றி விட்டது.
அங்கிருந்த கண்ணாடிச் சுவரில் அவவின் பெயரை தெரியாத்தனமாக எழுதிவிட்டார்.
எனது மகள் கைது செய்யப்பட்டிருந்த அன்றிலிருந்து உணவுட்கொள்ள விருப்பமின்றி உறக்கமின்றி அழுது கொண்டிருக்கின்றேன். எனது குடும்பமும் இதே நிலையிலுள்ளது.
எனக்கு ஐந்து பெண் பிள்ளைகள் இன்னும் திருமணம் செய்து கொடுப்பதற்கு மேற்படி மகளுடன் இரண்டு பெண்பிள்ளைகளுண்டு எனது ஒரு ஆண் பிள்ளை கூலித்தொழில் செய்பவர்.
நாங்கள் கடந்த கால யுத்தத்தினாலும் சுனாமி அனர்தத்தினாலும் பாதிக்கப்பட்ட குடும்பம் எனவே எமது நிலையறிந்து ஜனாதிபதி அவர்கள் பொதுமன்னிப்பு வழங்கி எனது மகளை விடுதலை செய்யுமாறு கேட்டுக் கொள்வதுடன் எனது மகளின் விடுதலைக்காக அரசியல் வாதிகள், சமூக நிறுவனங்கள் ஊடகங்கள் குரல் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
உதயசிறியின் விடுதலைக்கான விண்ணப்பம் ஒன்றினை மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளது.
அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘மட்டக்களப்பு, சித்தாண்டியை வசிப்பிடமாகக் கொண்ட செல்வி சின்னத்தம்பி உதயசிறி (27 வயது) என்ற யுவதி,
இந்த யுவதி தனது தந்தையின் மரணத்தின் பின் வயது முதிர்ந்து கண்பார்வை குறைபாட்டுடன் நோய்வாய்ப்பட்ட நிலையிலுள்ள தனது தாயினை தனது வாழ்வாதார உழைப்பினூடாக பராமரித்து வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து வரும் ஓர் ஏழைக் குடிமகளாவாள்.
எனவே, தண்டணை வழங்கப்பட்டு சிறைவாசம் அனுபவித்து வரும் சின்னத்தம்பி உதயசிறி என்ற யுவதி தனது அறியாமையின் காரணத்தினால் செய்ததாகக் கூறப்படும் தவறுக்காக மனம் வருந்துவதோடு எமது சமூக விழிப்புணர்வு மன்றமானது மட்டக்களப்பு வாழ் மக்களுடன் சேர்ந்து மன்னிப்புக் கோருகின்றோம்.
எனவே இந்த யுவதியினதும் அவளின் தாயினதும் எதிர்கால நல்வாழ்வுக்காக மட்டக்களப்பு வாழ் மக்கள் தங்கள் மேல் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இவ் யுவதியின் விடுதலைக்கான கருணை மனுவைப் பரிசீலனை செய்து பொது மன்னிப்பினூடாக இவருக்கு விடுதலையினைப் பெற்றுத்தருமாறு மிகவும் தயவுடனும் தாழ்மையுடனும், பண்பான தங்களிடம் பணிவாக கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களால் மேற்கொள்ளப்படும் இவ்யுவதியின் விடுதலைக்கான நடவடிக்கைக்கு மட்டக்களப்பு வாழ் மக்கள் என்றென்றும் நன்றியுடன் இருப்பார்கள் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு அறியத்தருகின்றோம்’ என்று அக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே போன்று நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் இவரின் விடுலைக்கான கோரிக்கை கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
தனது மகளின் விடுதலைக்காக ஏங்கித்தவிக்கும் தாய் தனது மகளின் வருகைக்காக காத்திருக்கின்றார்.
உதயசிறியின் விடுதலைக்காக அரசியல் வாதிகள் ஜனாதிபதியை சந்தித்து அவரின் குடும்ப நிலையை எடுத்துக் கூறி ஜனாதிபதியினால் உதயசிறிக்கு பொது மன்னிப்பு வழங்குவதில்தான் உதயசிறியின் விடுதலை தங்கியுள்ளது.
(எம்.எஸ்.எம்.நூர்தீன்,
ஊடகவியலாளர்)