செல்வராசா சரண்யா என்றதோர் இளம் மொட்டு கனகராயன்குளம் பகுதியில் கருகி மடிந்திருக்கின்றது. அதனை கருக்கி அழித்திருக்கின்றார்கள் என்று சொல்வதே பொருத்தமானதாக இருக்கும். அது எவ்வாறு கருகியது.
அதனை கருக்கியது யார்? அதனைச் செய்ய வேண்டிய தேவை என்ன? – இதுபோன்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அவைகள் மர்மம் நிறைந்த விடயங்களாகவே இருக்கின்றன.
கனகராயன்குளத்தை அடுத்துள்ள மன்னகுளம் கொல்லர்புளியங்குளத்தில் சீதையம்மா என்ற தனது பாட்டியுடன் வளர்ந்து வந்தவர்தான் 15 வயதுடைய சரண்யா. அவருக்கு பெற்றோர் கிடையாது.
அவர்கள் இறந்துவிட்டார்கள். சிறிது காலம் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளின் பொறுப்பில் வவுனியாவில் இல்லம் ஒன்றில் வளர்ந்து வந்தார்.
சரண்யா பார்வைக்கு முழுமையாக வளர்ச்சியடையாத ஒரு பிள்ளையின் தோற்ற இயல்பைக் கொண்டிருப்பார். ஆனால் மிகவும் திறமைசாலி. படிப்பில் மிகவும் கெட்டிக்காரி.
செயற்திறன் மிக்கவர் என்பது தான் அவருடன் நன்கு பழகியவர்கள் மற்றும், அவரை நன்கு அறிந்தவர்களின் கருத்தாகும்.
எவ்வளவுக்குத் திறமைசாலியோ, அந்த அளவுக்கு பிடிவாதம் பிடிப்பார். கோபமும் கொள்வார் என்றும் அவரை நன்கு அறிந்தவர்கள் கூறுகின்றார்கள்.
தனக்குப் பிடிக்காத விடயங்களில் அவரை ஈடுபடுத்த முடியாது. அது எவ்வளவுதான் முக்கியமானதாக இருந்தாலும், அதனை, அவரைச் செய்ய வைக்க முடியாது. அவ்வளவு பிடிவாதமுடையவர்.
இந்தப் பிடிவாதத்தின் முன்னால் மற்றவர்கள் பணிந்து போயிருக்கின்றார்களே தவிர, அவரை ஒருவராலுமே பணிய வைக்க முடியவில்லை என்பதே அவருடன் பழகியவர்கள்.
அவருடைய நலன்களில் அக்கறை கொண்டு செயற்பட்டவர்களின் அனுபவமாகும். அவருடை பிடிவாதத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால், அவரைப் போன்ற நல்லதொரு பிள்ளையைக் காண முடியாது என்பதும் அவர்களுடைய அபிப்பிராயமாகும்.
அம்மம்மாவுடன் கொல்லர்புளியங்குளத்தில் வசித்து வந்த சரண்யா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இணைந்து படித்து வந்தார்.
படிப்பில் இயற்கையாகவே திறமைசாலியான அவர் பாடசாலையிலும் நன்கு கல்விகற்று ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார்.
அம்மம்மாவுடன் இணைந்திருந்த சரண்யாவின் மூத்த சகோதரன் அயலில் உள்ள ஒரு குடும்பத்துடன் சேர்ந்து அங்கேயே வசித்து வந்ததையடுத்து, சரண்யாவும் அங்கு சென்று இருந்து பாடசாலைக்குச் சென்றுள்ளார். சரண்யாவின் இளைய சகோதரன் ஒருவரும் கூட அங்கு சென்று சில நாட்கள் இருந்துள்ளார்.
சரண்யாவின் சகோதரன் தங்கியிருந்த குடும்பத்தில் ஒரு பெண்ணும், அவருடைய வயதுவந்த இரண்டு மகள்களுமே இருந்தனர்.
இந்தக் குடும்பம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தது. ஆனால் தொழில் நிமித்தமாக சரண்யாவின் அம்மம்மாவுடைய அயலில் வசித்து வந்தது. அயலவர்கள் என்ற பழக்கத்தில் சரண்யாவின் சகோதரனும், சரண்யாவும், அவருடைய இளைய சகோதரனும் அங்கு சென்றிருந்தனர்.
முதலில் இந்த உறவும் வாழ்க்கையும் நன்றாகவே இருந்தது. ஆனால், கடந்த பெப்ரவரி மாதம் சிவராத்திரி தின விழா வந்ததையடுத்து, சரண்யாவின் வாழ்க்கையில் சூறாவளி வீசியது.
சிவராத்திரிக்காக திருக்கேதீஸ்வரம் சென்று வந்த சரண்யா சில தினங்களாக உடல் நலம் குன்றிய நிலையில் இருந்துள்ளார்.
தொண்டை நோ எனக் கூறி, பேச முடியாதிருப்பதாகவும், தெரிவித்ததையடுத்து, அந்த வீட்டுப் பெண் சரண்யாவை மாங்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்திருந்தார்.
திடீர் மரணமும், சரண்யாவின் உடல் நிலையும்
அங்கு சரண்யாவின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, அவரை வைத்தியர்கள் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பியிருந்தார்கள். அங்கு அவர் எதிர்பாராத விதமாக திடீரென மரணமடைந்துள்ளார்.
இந்தத் திடீர் மரணத்தையடுத்து, அவருடைய மரணத்திற்கான காரணத்தை அறிவதற்காக நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையின்போதே, 15 வயதுடைய பள்ளி மாணவியாகிய சரண்யாவின் பால் நிலை சார்ந்த உள்ளுறுப்புக்கள், திருமணமாகிய ஒரு பெண்ணின் உடல் நிலையைப் போன்றிருந்தமை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அது மட்டுமல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் உடலுறவு கொண்டிருந்த நிலையும் தெரியவந்துள்ளது.
இதுபற்றி சரண்யாவின் உயிரற்ற உடலை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சரண்யாவின் அம்மம்மாவுக்கும் அவருடன் உதவிக்காகச் சென்றிருந்த கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத் தலைவிக்கும் தெரிவித்துள்ளார். இதனையடுத்தே, சரண்யா கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாகியிருந்தார் என்ற விடயம் பகிரங்கமாகியது.
எம்.தியாகராஜா, தர்மபால செனவிரத்ன ஆகியோர் கொல்லர்புளியங்குளம் கிராமத்திற்குத் துக்கம் விசாரிக்கச் சென்றபோதே, சரண்யாவின் அம்மம்மாவும், கிராம மாதர் அபிவிருத்திச் சங்கத்தினரும் சரண்யாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி தாங்கள் அறிந்தவற்றைத் தெரிவித்து, அவருக்கு இழைக்கப்பட்டிருந்த அநியாயத்திற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என கோரியிருந்தனர்.
அவருடைய மரணம் தொடர்பான விபரங்களைத் தெரிவித்த பொலிசார், தமது பதிவேட்டில் அவர் மீது இழைக்கப்பட்டிருந்த பாலியல் குற்றம் தொடர்பான விபரங்கள் அடங்கிய பகுதியை வாசிப்பதற்கும் அனுமதித்திருந்தனர்.
ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அந்தப் பகுதியை வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் ஏனைய மக்கள் பிரதிநிதிகளுக்கும், அவர்களுடன் சென்றிருந்த செய்தியாளர்களுக்கும் கேட்கும் வகையில் சத்தமாக வாசித்திருந்தார்.
சரண்யா தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி வழமையாகச் சென்று வந்தவர்கள் பற்றி, தாங்கள் அறிந்த விபரங்களையும், அவர்களின் பெயர்களையும்கூட மக்கள் பிரதிநிதிகள் பொலிசாரிடம் தெரிவித்து, இவர்களையும் விசாரணை செய்ய வேண்டியது அவசியம் என வலியுறுத்தியிருந்தனர்.
அதேவேளை, தன்னை ஒரு பொலிஸ்காரர் என கூறிக்கொண்டு அந்த வீட்டிற்குச் சென்று வந்தவர் பற்றியும் அவர்கள் கனகராயன்குளம் பொலிசாருக்குத் தெரிவித்திருந்தனர்.
அது மட்டுமல்லாமல், சரண்யாவின் மரணம் ஊர் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல் பொதுமக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
மக்கள் மத்தியில் ஒருவித பதற்ற நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதையும் எடுத்துக்கூறி முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்பதுடன், சிறுமி சரண்யா மீது இழைக்கப்பட்டுள்ள பாலியல் குற்றத்திற்குக் காரணமானவர்களை உடனடியாகக் கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
ஆனால் நாட்கள் நகர்ந்தனவே தவிர, சிறுமி சரண்யா தொடர்பான விசாரணைகள் துரிதமாகவும், சரியான முறையிலும் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை.
சிறுமி சரண்யாவின் மரணம் தொடர்பான அதிர்ச்சியூட்டும் தகவல்கள் ஊடகங்களில் வெளிவந்திருந்த போதிலும், சிறுவர் நலன்கள் தொடர்பாகச் செயற்படுகின்ற அரச திணைக்களங்களின் கவனத்தை உரிய முறையில் ஈர்த்ததாகவோ, அவர்களை துடிப்புடன் செயற்பட வைத்ததாகவோ தெரியவில்லை.
அதேநேரம் இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற ஏற்பட்டிருந்த அழுத்தத்தையடுத்து, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் விசாரணைகளை முடுக்கிவிட்டிருப்பதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனாநாயக்க தனது முகநூலில் தெரிவித்திருந்தார்.
சரண்யாவின் மரணம் சம்பவித்து ஒரு வாரத்துக்கும் அதிக காலம் கடந்த பின்பே தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினர் அதுபற்றிய விசாரணைகளை முடுக்கிவிட்டிருந்ததாகத் தெரிகின்றது.
சிறுமி சரண்யா சிறுவர் இல்லம் ஒன்றில் இருந்து பின்னர் அவருடைய அம்மம்மாவுடன் சேர்க்கப்பட்டிருந்து, பின்னர் அவர் திடீரென மரணமடைந்ததைப் பற்றி உடனடியாக சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்த போதிலும், அவர் மீது இழைக்கப்பட்டிருந்த குற்றம் தொடர்பான தகவல்கள் தாமதமாகவே அந்த உரிய அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுமி சரண்யா மீது பாலியல் குற்றம் இழைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் அவருடைய உடலில் காணப்பட்டுள்ள போதிலும், அவருடைய மரணம் இயற்கை மரணம் என்றே பதிவாகியிருக்கின்றது.
ஆயினும் அவருடைய உடலின் நரம்புத் தொகுதியில் நச்சுத் தன்மை காணப்பட்டமையும் அவதானிக்கப்பட்டு, அது தொடர்பான மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதற்காக முக்கிய உடற்பாகங்கள் அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், அந்த ஆய்வறிக்கை வந்த பின்பே, இறப்புக்கான காரணம் தெரியவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணத்தில் சந்தேகம் எழாத காரணத்தினால், பொலிசார் மேற்கொண்டு துரித விசாரணைகளை நடத்த முடியாதிருப்பதாகவும், இறப்புக்கான காரணம் தெரிந்த பின்பே மேற்கொண்டு நடவடிக்கைகள் எடுக்க முடியும் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆயினும் இது தொடர்பான பூர்வாங்க விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் இந்த மரணம் தொடர்பாக பொலிசார் நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்துள்ள அறிக்கையில், புதைக்கப்பட்டுள்ள சரண்யாவின் சடலத்தைத் தோண்டியெடுத்து, மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்வதற்கு அனுமதியளிக்க வேண்டும் என கோரியிருக்கின்றனர்.
ஆயினும் அந்த கோரிக்கையை நிராகரித்துள்ள நீதிமன்றம், இந்த மரணம் தொடர்பாக நடத்தப்பட்ட மரண விசாரணை அறிக்கையையும், மருத்துவ அறிக்கையையும் பார்வையிட்டதன் பின்பே பொலிசாரின் கோரிக்கைக்குப் பதிலளிக்க முடியும் என தெரிவித்துள்ளது.
அத்துடன் மரண விசாரணை அறிக்கை மருத்துவ அறிக்கை என்பவற்றை எதிர்வரும் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி சரண்யா வசித்த இடம் கனகராயன்குளம் பகுதி சிகிச்சைக்காக மாங்குளத்தில் அனுமதிக்கப்பட்ட அவர், கிளிநொச்சி வைத்தியசாலையிலேயே மரணமடைந்தார்.
மரண விசாரணையும் கிளிநொச்சியிலேயே நடைபெற்றது. ஆனால், சரண்யாவின் மரணத்திற்கு முன்னரும், மரணத்திற்குப் பின்னரும். அவருடைய விடயங்கள் வவுனியா மாவட்ட நீதி நியாயாதிக்கப் பிரதேசத்திலேயே கையாளப்படுகின்றது என்பது முக்கியமானது.
விடை காணப்படவேண்டியவிடயங்கள்
சிறுவர் இல்லம் ஒன்றில் பராமரிக்கப்பட்டு பின்னர் அம்மம்மாவிடம் ஒப்படைக்கப்பட்ட சிறுமி சரண்யா, அம்மம்மாவின் பராமரிப்பில் இல்லாமல் வேறு யாரோ ஒரு குடும்பத்தினருடன் சென்று வசித்திருந்தது தொடர்பில் சிறுவர் பராமரிப்பு அதிகாரிகள் உடனடியாக ஏன் கவனம் செலுத்தவில்லை என்ற கேள்வி எழுந்திருக்கின்றது.
சரண்யாவின் குணநலன்கள் இயல்புகள் என்பவற்றை நன்கு அறிந்திருந்த அதிகாரிகள், அவர் வசித்த அம்மம்மாவின் வீடு, அவருக்குப் போதிய அளவில் பாதுகாப்பானதல்ல என தெரிவித்து, அவருக்கு வீட்டுத்திட்டத்தில் இடமளிக்கப்பட வேண்டும் என்று அது தொடர்பான அதிகாரிகளுக்கு பரிந்துரைத்திருந்தனர் என்ற தகவலும் உண்டு.
அதேநேரம், சரண்யா இறப்பதற்கு முன்னர் வசித்து வந்த வீட்டில் இருந்த அவருடைய வயதொத்த ஏனைய இரண்டு சிறுமிகளுக்கும், சரண்யாவுக்கும் அந்த வீட்டிற்கு அடிக்கடி வருகை தந்தவர்களில் குறிப்பிட்ட ஒருவரோ, இருவரோ பாலியல் சார்ந்த காட்சிகளை கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு வழங்கியிருந்தனர் என்ற தகவலும் வெளியாகியிருக்கின்றது.
இந்தத் தகவல் நிச்சயமாக பொலிசாரின் விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும், அதுபற்றிய தகவல்கள் அந்த விசாரணை பதிவில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியுள்ளது.
சிறுமி சரண்யா ஏதோ ஒரு வருத்தம் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு திடீரென மரணமடைந்ததையடுத்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையிலேயே அவர் மீது பாலியல் குற்றம் இழைக்கப்பட்டிருக்கின்றது என்ற தடயம் தெரிந்தது.
தகவலும் வெளியாகியிருந்தது. அப்படியானால், அவருக்கு தனது வீட்டில் இடமளித்து, அவரைப் பராமரித்து வந்த பெண் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது தெரியவில்லை.
அதேநேரம் அந்த வீட்டில் சரண்யாவுடன் சம வயதுடைய இரண்டு சிறுமிகள் இருந்திருக்கின்றார்கள். அவர்களும் திருக்கேதீஸ்வரத்திற்கு சிவராத்திரிக்காகச் சென்றார்களா, அப்படியானால், அவர்களுக்கு என்ன நடந்தது, அல்லது அவர்களுக்கு ஏதேனும் நடந்ததா என்பது பற்றி விசாரணை செய்யப்பட்டதா என்பதும் தெளிவில்லாமல் உள்ளது.
சரண்யா மரணமடைந்ததையடுத்து, அவருக்கு இழைக்கப்பட்டிருந்த பாதிப்புக்கு, அவர் வசித்திருந்த அல்லது அவரைத் தனது பெண் பிள்ளைகளுடன் வைத்துப் பராமரித்து வந்த பெண் பொறுப்பு கூற வேண்டும் என்ற கொதிப்பு ஊர் மக்கள் மத்தியில் எழுந்திருந்தது.
அது மட்டுமல்லாமல், அவர் மீது விசாரணை நடத்தப்படாதிருப்பதை உணர்ந்த மக்கள் அவர் தொடர்ந்து தமது ஊரில் இருப்பதனால் வேண்டத்தகாத விளைவுகள் ஏனைய பிள்ளைகளுக்கும் என்ற அச்சத்தையும் கொண்டிருந்தனர்.
இதனால் அயல் வீட்டுக் கிணறுகளில் அந்தப் பெண் தண்ணீர் எடுப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள் அனுமதிக்கவில்லை. இதன் காரணமாக அவர் அந்த ஊரில் தொடர்ந்து வசிக்க முடியாத நிலையேற்பட்டு, அவர் யாழ்ப்பாணத்திற்குத் தனது இரண்டு பெண்பிள்ளைகளுடனும் சென்றுவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பெண்ணுடைய வீட்டில் இருந்து திருக்கேதீஸ்வரத்திற்குச் சென்ற சரண்யா எத்தனை நாட்களின் பின்னர் வீடு திரும்பினார், அங்கு சென்றிருந்தபோது, அவருக்கு என்ன நடந்தது, யார் யார் அவருடன சென்றிருந்தார்கள், அவர்கள் உண்மையிலேயே திருக்கேதீஸ்வரம் சென்றார்களா அல்லது அங்கு செல்வதாகக் கூறி வேறு எங்கேனும் சென்றார்களா, அப்படியானால் எங்கு சென்றார்கள், என்ன நடந்தது, என்ற விடயங்கள் எதுவும் ஆராயப்பட்டதாகவோ விசாரணை செய்யப்பட்டதாகவோ தெரியவில்லை.
அது மட்டுமல்லாமல், சரண்யா தங்கியிருந்த வீட்டில் அவருக்கு ஏதேனும் நடந்ததா என்ற கேள்விக்கும் விடை காணப்பட வேண்டியுள்ளது.
மறுபக்கத்தில், சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளினால், பாதுகாப்பான பராமரிப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் ஒப்படைக்கப்பட்ட சிறுமி சரண்யாவை பொறுப்பேற்ற அவருடைய அம்மம்மா என்ன காரணத்திற்காக, அவரை வேறு ஒருவருடைய வீட்டில் சென்று தங்கியிருப்பதற்கு அனுமதித்திருந்தார் என்பது கண்டறியப்பட்டதாகவும் தெரியவில்லை.
சிறுமி சரண்யா சென்று தங்கியிருந்த வீட்டுப் பெண்மணிக்கும், சரண்யாவின் அம்மம்மாவும் உறவினர்களா, நண்பர்களா அல்லது ஏற்கனவே ஒருவருக்கு ஒருவர் பரிச்சயமானவர்களா?
அவ்வாறு இல்லையென்றால் எந்த நம்பிக்கையின் அடிப்படையில் சரண்யாவை அவருடைய அம்மம்மா அந்தப் பெண்ணின் வீட்டில் சென்று தங்கியிருப்பதற்கு அனுமதித்திருந்தார் என்பதும் தெளிவில்லாமல் இருக்கின்றது.
இவ்வாறு பல தரப்புக்களில் பல கோணங்களில் கேள்விகள் எழுவதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்குரிய தடயங்களை உடலில் கொண்டிருந்த சிறுமி சரண்யாவுக்கு வயது 15.
இலங்கையில் ஒருவர் 18 வயதை அடைந்த பின்பே, அவர் வயதுக்கு வந்தவர் என்று சட்டரீதியாகக் கணிக்கப்படுகின்றது. அத்துடன் 16 வயதுடையவர்களும், அதற்குக் குறைந்தவர்களும் சிறுவர்கள் என கணிக்கப்படுகின்றார்கள்.
இந்த வகையில் பூப்படைந்த சிறுமியொருவரின் விருப்பத்துடனோ அல்லது அவருடைய விருப்பத்திற்கு மாறாகவோ அவருடன் உடலுறவு கொள்வதென்பது, தண்டனைக்குரிய பாலியல் வல்லுறவு குற்றமாகக் கருதப்படுகின்றது. இத்தகைய குற்றத்திற்குக் கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகின்றது.
இதையும்விட சிறுவர் உரிமைகள் ரீதியாகவும், சிறுமி ஒருவர் மீதான பாலியல் குற்றம் என்பது பாரதூரமாகக் கருதப்படுகின்றது. இந்த நிலையில் அநியாயமாகக் கசக்கிப் பிழியப்பட்ட சரண்யா குறித்து சிறுவர் உரிமைக்காகக் குரல் கொடுப்பவர்கள் என்ன செய்திருக்கின்றர்கள், அவருடன் வேறு சிறுமிகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றார்களா என்பதைக் கண்டறிய என்ன செய்திருக்கின்றார்கள் என்ற கேள்வி விசுவரூபமெடுத்திருக்கின்றது.
எது எப்படியானாலும், சிறுமி சரண்யா மீது இழைக்கப்பட்டுள்ள குற்றச்செயல்களுக்குக் காரணமானவர்கள் கண்டு பிடிக்கப்பட வேண்டும்.
அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். இதன் ஊடாக சரண்யா போன்ற அபலைச் சிறுமிகளின் பாதுகாப்பு சமூகத்தில் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
-செல்வரட்னம் சிறிதரன்-