பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் முதல் காலிறுதியில் இலங்கையை தென்னாபிரிக்க அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலகக் கிண்ண வரலாற்றில் முதற் தடவையாக அரையிறுதிக்குள் நுழைந்ததோடு இதுவரை காலமும் காணப்பட்ட சோக வரலாற்றை மாற்றியமைத்தது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, தென்னாபிக்காவின் நேர்த்தியான பந்துவீச்சு, களத்தடுப்பு ஆகியவற்றுக்கு முன்னால் சரணடைந்து 133 ஓட்டங்களைப்பெற்று இரவுஉணவு இடைவேளைக்கு முன்பாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
ஜே.பி.டுமினி ஹெட்ரிக் சாதனை புரிந்தார். ஸ்டெய்ன், மோர்கல், அபாட், இம்ரான் தாஹிர் என அனைத்து பந்துவீச்சாளர்களும் மிகச் சிறப்பாக பந்து வீசினர்.
தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்க அணி 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை ( அம்லா 16) மத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. அம்லாவின் விக்கெட்டை மாலிங்க கைப்பற்றினார்.
அதன் பிறகு குவிண்டன் டி கொக் (78), டு பிளெஸ்ஸிஸ் (21) இணைந்து மேலும் விக்கெட்டுகளை பறிகொடுக்காமல் இலக்கை எட்டினர்.
பிறகு 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். டுபிளெஸ்ஸி 31 பந்துகளில் பவுண்டரி எதுவும் இல்லாமல் 21 ஓட்டங்களைப் பெற்றார்.
இருவரும் இணைந்து 11.2 ஓவர்களில் 94 ஓட்டங்களை 2 ஆவது விக்கெட்டுக்காகச் சேர்த்தனர். இறுதியில் மாலிங்க வீசிய பந்தை டி கொக் பவுண்டரிக்கு விரட்ட அது வெற்றி ஓட்டங்களாக அமைந்தது.
மிகவும் நெருக்கமானக, இறுதி வரை விறுவிறுப்பாக அமையும் காலிறுதிப் போட்டி என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டம் தென் ஆபிரிக்காவின் நுட்பமான ஆட்டத்திறமையினால் ஒன்றுமில்லாமல் போனது.
நொக்-அவுட் சுற்றில் முதல் தடையை மிகவும் சுலபமாக தென் னாபிரிக்கா தாண்டியுள்ளது. அடுத்து அரையிறுதியில் களமிறங்கும் போது தென்னாபிரிக்க அணி நிச்சயம் பெரிய தன்னம்பிக்கையுடன் களமிறங்கும் என்று எதிர்பார்க்கலாம்.
முன்னதாக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணியை 133 ஓட்டங்களுக்குள் தென்னாபிரிக்கா சுருட்டியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 37.2 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 133 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதையடுத்து, தென்னாபிரிக்காவுக்கு 134 ஓட்டங்கள் என்ற சற்றே எளிதான இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
தென்னாபிரிக்காவின் அபாரப் பந்துவீச்சில் இலங்கை அணி வீரர்கள் ஓட்டங்களை சேர்க்க தவித்து அரங்கு திரும்பினர்.
சங்ககாரா 45 ஓட்டங்களையும், திரிமன்னே 41 ஓட்டங்களையும் சேர்த்தனர். மெத்தியூஸ் 19 ஓட்டங்களையும் எடுத்தார். ஏனையோர் ஒற்றை இலக்க ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.
சங்கக்கார வெளியே… மழை உள்ளே…
முன்னதாக 36.2ஆவது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் மில்லரிடம் பிடி கொடுத்து சங்ககாரா ஆட்டமிழந்தார்.
அவர் 45 ஓட்டங்களை சேர்த்திருந்தார். அவர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பியபோது மழை கொட்டத் தொடங்கியது. இதனால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் மழை விட்டதும் ஆட்டம் மீண்டும் தொடங்கியது.
டுமினி ஹெட்ரிக்
ஆட்டத்தின் 30ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் டுமினி பந்துவீச்சில் மெத்யூஸ் ஆட்டமிழந்தார். அவர் டூபிளஸியிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது, அவர் 19 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
அதைத் தொடர்ந்து களமிறங்கிய திசர பெரேரா வந்த வேகத்தில் அரங்கு திரும்பினார். தாஹிர் பந்துவீச்சில் ரூசோவிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்த அவர் ஓட்ட எதுவும் எடுக்கவில்லை.
பின்னர் களமிறங்கிய குலசேகராவும் சட்டென ஆட்டமிழந்தார். அவர் 34.1 ஆவது ஓவரில் டுமினி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய குஷால், டுமியின் ஹெட்ரிக் விக்கெட் ஆனார். ஓட்டம் ஏதும் எடுக்காமல் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
மோசமான துவக்கம்:
ஆட்டத்தில் 2 ஆவது ஓவரிலேயே ஆரம்ப வீரரான பெரேரா 3 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதிரடி வீரர் டில்சானும் அடுத்த இரண்டு ஓவர்களில் ஓட்டம் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து ஜோடி சேர்ந்த திரிமான – சங்கக்கார இருவரும் அணியின் நிலையை சற்று உறுதியாக்கினர்.
அப்போது ஓட்டங்களை சேர்க்க தடுமாறினாலும் விக்கெட் இழக்காமல் இருப்பதே முக்கியமாக இருந்தது. 10 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்த இலங்கை 35 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.
20 ஆவது ஓவரில் திரிமான்னே விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினார். அவர் 41 ஓட்டங்களை சேர்த்திருந்தார்.
திரிமான்னே விக்கெட்டை வீழ்த்திய இம்ரான் தாஹிர், 24 ஆவது ஓவரில் ஜயவர்தன விக்கெட்டையும் வீழ்த்தி இலங்கைக்கு அதிர்ச்சியளித்தார்.
அதைத் தொடர்ந்து மெத்யூஸ், சங்கக்காரவோடு இணைந்து, அணியை சரிவிலிருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட்டது. அந்த முயற்சி பெரிதாக கைகொடுக்கவில்லை.
தென்னாபிரிக்க தரப்பில் தாஹிர் 4 விக்கெட்டுகளையும் டுமினி 3 விக்கெட்டுகளையும் ஸ்டெயின் மற்றும் அபோட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
சங்காவுக்கு மேலும் ஒரு சிறப்பு:
தென்னாபிரிக்காவுக்கு எதிராக 4 ஓட்டங்களை எடுத்தபோது ஓர் உலகக் கிண்ணத்தில் 500 ஓட்டங்கள் எடுத்த 7 ஆவது வீரர் என்ற என்ற பெருமையைப் பெற்றார் குமார் சங்ககாரா.