கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு பிணையினில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் கடற்படை தலைவி என குற்றஞ்சாட்டப்பட்ட முருகேசு பகீரதி நேற்றிரவு (18-03-2015) கொலை முயற்சியொன்றிலிருந்து காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

பிரான்ஸ் நோக்கிச் செல்லவிருந்த பகீரதியையும் அவரது எட்டு வயது மகளும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் அவர்கள் கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு மூன்று மாதங்கள் விசாரணை செய்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டருந்தது.

இந்தநிலையில் சந்தேகநபருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளதாகவும் இருப்பினும் அவரை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாக பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

அதனையடுத்து பகீரதியை 2 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல உத்தரவிட்டார். எனினும் அவருக்கு வெளிநாடு செல்வதற்கான அனுமதியும் மறுக்கப்பட்டிருந்தது.

மேலும் பகீரதி வசிக்கும் பிரதேச பொலிஸ் நிலையத்திற்கு வாரத்திற்கு ஒருமுறை சென்று கையொப்பம் இடுமாறும் நீதவான் பணித்திருந்தார்.

இந்நிலையில் முல்லைதீவு கண்டாவளையில் தனது குடும்பத்தவர்களுடன் தங்கியிருந்த பகீரதி அருகாகவுள்ள கடைக்கு நேற்றிரவு சென்றுள்ளார்.

அவ்வேளையில் அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிளில் சென்றிருந்த இருவர் அவரை கொலை செய்யும் முயற்சியாக மோதி தள்ளியுள்ளனர். தாக்குதலாளிகள் தப்பித்து சென்றிருந்ததால் அவர்களை அடையாளம் காணவில்லை என அவர் தெரிவிக்கின்றார்.

தூக்கி வீசப்பட்ட அவர் அபயக்குரல் எழுப்ப அயலவர்கள் மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

முன்னதாக தமது வீட்டை சுற்றி அடையாளம் தெரியாத நபர்கள் வேவுபார்ப்பதில் ஈடுபட்டதாக தெரிவிக்கும் குடும்பத்தவர்கள் காவல்நிலையத்திற்கு ஒப்பமிட சென்று திரும்பியவேளையும் அச்சுறுத்தப்பட்டு பின்தொடரப்பட்டதாக தெரிவித்தனர்.

இதேவேளை, 1997 ஆம் ஆண்டு முதல் 2000 ஆம் ஆண்டுவரை விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த பகீரதி 2005ஆம் ஆண்டில் பிரான்ஸ் சென்று திருமணம் முடித்திருந்தார்.

விடுமுறையைக் களிப்பதற்கு தனது 8 வயது மகளுடன் இலங்கை சென்று வன்னியிலுள்ள அவரது பெற்றோருடன் ஒருமாதகாலம் தங்கி மீண்டும் பிரான்ஸ் திரும்பும்போது கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

ஒருபுறம் நீதியை பேணுவதாக காட்டிக்கொண்டு மறுபுறம் வடிகட்டல்களை அரச படைகள் முன்னெடுத்துவருவதன் ஒரு அங்கமாக இது பார்க்கப்படுகின்றது.

முகப்பு

Share.
Leave A Reply

Exit mobile version