இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே அதனை சிங்கள மொழியில் மட்டுமே பாடவேண்டும்.தமிழ் மொழியில் பாடுவது தடைசெய்யப்படவேண்டும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர நேற்று பாராளுமன்றத்தில் கூறியதால் சபையில் பெரும் சர்ச்சையும் களேபரமும் ஏற்பட்டது.
சரத்வீரசேகரவின் மேற்படி கூற்றினையடுத்து எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களிடையே பிளவு ஏற்பட்ட வகையிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
சரத் வீரசேகரவைப் பார்த்து எம்.பிக்களான டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் கடுமையாகத்திட்டித்தீர்த்ததுடன் அரசியலமைப்புச் சட்டத்தை நன்றாகப் படித்து விட்டு வந்து கதைக்குமாறும் கடுமையான தொனியில் தெரிவித்தனர்.
இதேவேளை சரத் வீரசேகரவின் கூற்றுடன் இணைந்துகொண்ட
உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன சரத் வீரசேகரவுடன் முன்னதாக முரண்பட்ட ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான சுனில் ஹந்துன்னெத்தியை கண்டித்து பேசி சரத் வீரசேகர எம்.பி.க்கு ஆதரவாக குரல் எழுப்பினார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி. ஆர். யோகராஜன் மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஹசன் அலி ஆகிய உறுப்பினர்களும் சரத் வீரசேகர எம்பியுடன் முரண்பட்டனர்.
இதனால் சபையில் சில நிமிடங்கள் பெரும் களேபரம் தோன்றியிருந்ததை அவதானிக்க முடிந்தது.
முன்னதாக சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி சரத் வீர சேகரவின் கூற்றை முற்று முழுதாக மறுப்பதாக கூறியதுடன் அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளதை திரிபுபடுத்திப் பேசுவதாக குறிப்பிட்டார்.
அரசியலமைப்பில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடக்கூடாது என்று கூறுவதற்கு நீங்கள் யார் என்றும் சரத் வீரசேகரவைப் பார்த்து ஆவேசமாக அவர் கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றுவதற்கு தயாரான சரத் வீரசேகர எம்.பி. தேசிய கீதம் தமிழில் பாடப்படுவது தடை செய்யப்பட வேண்டும் என்ற ரீதியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் மேல்மாகாண சபை உறுப்பினருமான மனோகணேசனை குற்றம்சாட்டி பேசினார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்;
தேசிய நிறைவேற்று சபையில் அங்கம் வகித்து வருகின்ற மனோகணேசனின் வேண்டுகோளுக்கிணங்க தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
எனினும் அரசியலமைப்புச் சட்டத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இல்லை என்பதால் அதனை தமிழ் மொழியில் பாடுவதற்கு இடமளிக்க முடியாது. மனோகணேசன் போன்ற இனவாதிகளின் கோரிக்கைகளுக்கு இணங்க முடியாது. எனவே தேசிய கீதம் சிங்கள மொழியில் அன்றி தமிழ் மொழியில் பாடுவதற்கு இடமளிக்க முடியாது.
இலங்கையில் 2.5 மில்லியன் தொகையினரே தமிழ் மக்கள் வாழ்கின்றனர். ஆனால் இந்தியாவில் 65 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். எனினும் அங்கு தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்படுவதில்லை.
அப்படியானால் இந்தியாவிலும் அந்நாட்டு தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட வேண்டும் என்று மனோ கணேசன் இந்திய பிரதமர் மோடியிடம் கேட்க முடியுமா என்று நான் மனோ கணேசனுக்கு சவால் விடுக்கிறேன்.
தமிழர்களின் வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்த சபையில் இருக்கின்ற சில உறுப்பினர்கள் இவ்வாறு பேசுகின்றனர் என்றார்.
சுனில் ஹந்துன்னெத்தி
இதேவேளை சரத் வீரசேகர எம்.பி. யின் உரையின் போது இடைமறித்த சுனில் ஹந்துன்னெத்தி எம்.பி. சரத் வீரசேகர எம்பியுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அரசியலமைப்பில் தேசிய கீதம் தமிழ் மொழியில் இருக்கிறது. எனவே அரசியலமைப்பு சட்டத்தை நன்றாக வாசித்து விட்டு இங்கு வந்து பேச வேண்டும் என்று கடுமையாக எச்சரித்தார்.
– தினேஷ்
இதேவேளை தினேஷ் குணவர்த்தன எழுந்து சுனில் ஹந்துன் நெத்தி எம்.பி .யுடன் தர்க்கத்தை ஏற்படுத்தி சரத்வீர சேகரவுக்கு ஆதரவாகப்பேசினார். சுனில் ஹந்துன்நெத்தி எம்பி யையும் பார்த்து கையை நீட்டி ஆவேசமாக பேசியபோது ஒலிவாங்கி செயற்பாட்டில்லாததால் அவரது கருத்துக்கள் வெளிவரவில்லை.
டிலான்
இதேவேளை டிலான் பெரேரா எம்.பி. எழுந்து நின்று வீரசேகர எம்.பி யைப்பார்த்து கடுமையாக சாடினார். இனவாதத்தை எழுப்ப வேண்டாம். அரசியலமைப்பில் உள்ளதை தவறாக எடுத்துக்கூற வேண்டாம் என்று. கூறியதுடன் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமல்ல தமிழ்மொழியிலும் அரசியலமைப்பு சட்டத்தில் உள்வாங்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டினார்.
வாசுதேவ
இதனையடுத்து ஒழுங்குப்பிரச்சினையை எழுப்பிய வாசுதேவ நாணயக்கார எம்.பி கூறுகையில்:
அரசியலமைச்சட்டத்தில் தேசிய கீதம் தமிழ்மொழியில் பாடுவது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்களத்தில் தேசிய கீதம் பாடும்போது “சிறிலங்கா மாதா” என்று பாடுகின்றோம். தமிழ்மொழியில் பாடும்போது” சிறிலங்கா தாயே”என்றே பாடப்படுகிறது. இதன் அர்த்தம் ஒன்றாகவே இருக்கிறது. தொனி ஒன்றாகவே இருக்கிறது.பொருள் ஒன்றாகவே இருக்கிறது. அத்துடன் இது அரசியலமைப்பு சட்டத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.எ னவே சரத்வீரசேகர எம்.பி இவ்வாறு கருத்து வெளியிடக்கூடாது என்றார்.
இதேவேளை சுனில் ஹந்துன்நெத்தி எம்பி அரசியலமைப்புச்சட்டத்தை சுட்டிக்காட்டி அதில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதனாலேயே தேசிய கீதம் தமிழ்மொழியில் உள்வாங்கப்பட்டுள்ளது என்றார்.
சரத் வீரசேகர
இதனையடுத்து பேசிய சரத்வீரசேகர எம்.பி. அப்படி தமிழ்மொழியில் எழுதப்பட்டிருக்கவில்லை என்று வாதிட்டதுடன். அப்படியே எழுதப்பட்டிருந்தாலும் தமிழ்மொழியில் பாடக்கூடாது தமிழர்களும் தேசிய கீதத்தை சிங்கள மொழியிலே பாட வேண்டும் எனவும் தமிழ்மொழியில் பாடப்படுவது தடை செய்யப்படவேண்டும் என்றும் கூறினார்.
இதன்போது குறுக்கிட்ட சுனில் ஹந்துன்நெத்தி எம்பி அரசியலமைப்பில் கூறப்பட்டதை தடைசெய்யுமாறு கூறுவதற்கு நீங்கள் யார் என்று வீரசேகர எம்.பி.யைப் பார்த்து கேள்வி எழுப்பியதுடன் அப்படி அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி தமிழ்மொழியை நீக்குவதென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும் இப்போது உங்களால் அந்தபெரும்பான்மையை பெற்றுக்கொள்ள முடியுமா?என்றும் கேட்டார்.
இவ்வாறு சர்ச்சைகள் ஏற்பட்டிருந்தபோது டிலான் பெரேரா மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் சரத்வீரசேகரவுடன் வாக்குவாதப்பட்டதை அடுத்து தினேஷ் குணவர்த்தன எம்பி அமைதியாக அமர்ந்து விட்டார்.