பூர்வீக நிலத்தை விட்டு வெளியேறி அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்த வலி.வடக்கு பிரதேசத்தின் வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் 25வருடங்களின் பின்னர் தமது சொந்தமண்ணை பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தபோதும் ஈற்றில் கண்ணீரோடு ஏமாற்றத்துடன் திரும்பவேண்டிய துயரச்சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
வலி.வடக்கு வயாவிளான் கிழக்கு மற்றும் பலாலி தெற்கு பகுதிகளான ஒட்டகபுலம், தென்மூலை, வடமூலை, தோலகட்டி ஆகிய கிராமங்களின் 197ஏக்கர் பரப்பில் மீள்குடியேற்றும் செயற்பாட்டின் முதற்கட்டமாக அவர்களின் சொந்தமண்ணைப் பார்வையிடுவதற்காக
அனுமதி நேற்றைய தினம் வழங்கப்படும் என கடந்த புதன்கிழமை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவின் கலந்துரையாடலின் பின்னர் அறிவிக்கப்பட்டிருந்தது
அதேநேரம் விடுவிக்கப்படவுள்ளதாக கூறப்பட்ட பகுதிகளுக்கான அனுமதி மறுக்கப்பட்டதுடன் பிறிதொரு கிராமசேவகர் பிரிவில் உள்ள மக்களுடைய காணிகளுக்குச் செல்வே அனுமதி அளிக்கப்பட்டது. இச் செயற்பாடு தமது சொந்த நிலத்தை பார்க்க வந்த மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
புதிய அரசாங்கத்தின் நூறுநாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் உயர்பாதுகாப்பு வலயமாக காணப்படும் பிரதேசத்தில் ஆயிரத்து நூறு ஏக்கர் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்படும் செயற்பாடுகள் கட்டங்கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் வலி.வடக்கைச் சேர்ந்த மக்கள் தமது சொந்த நிலங்களை பார்வையிடுவதற்காக அப்பிரதேசத்தில் ஒன்று கூடினர்.
அவர்கள் அனைவரும் வலி.வடக்கு பிரதேச செயலக அதிகாரிகளால் பதிவு செய்யப்பட்டு அச்சுவேலி வயாவிளான் வீதியுடாக குறித்த பகுதிக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். தோலகட்டி, வடமுனை, தென்முனை மற்றும் ஒட்டகப்புலம் எனும் பிரதேசம் முற்றாக விடுவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தபோதும் ஒட்டகப்புலத்தின் ஒரு பகுதியே மக்கள் பார்வையிட முடிந்துள்ளது.
அத்துடன் விடுவிக்கப்படுவதாக ஏனை கூறப்பட்ட ஏனைய பகுதியில் புதிதாக கொங்கிறீட் தூண்கள் நிறுவப்பட்டு முட்கம்பிகளால் வேலிகள் அமைக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொண்டவண்ணம் இருந்துள்ளதையும் வயாவிளான் கிழக்கு ஜே.244 கிராம அலுவலர் பிரிவின் கீழ் உள்ள அதிகமாக மக்கள் வாழ்ந்த இடமான ஒட்டகப்புல கிராமம் முழுமையாக இராணுவத்தினரால் சூழப்பட்டுள்ளதையும் மக்கள் அவதானித்தனர்.
மேலும் அப்பகுதிகளில் இராணுவத்தினர் விவசாய செய்கைகளில் ஈடுபட்டுவருவதையும் அயலில் உள்ள கிராமங்களும் முழுமையாக விடுபடாது விவசாய நிலங்கள் மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ளதையும் மக்கள் நேரில் அவதானித்துள்ளனர்.
மக்களின் ஆதங்கம்எங்களின் வீடுகளையும், கோயில்களையும் அழித்து இராணுவம் விகாரைகளைக் கட்டி வைத்திருக்கிறது. எங்களின் காணிகளைப் பார்க்க விடாமல் இடையிலேயே மறித்து முள்கம்பி வேலி அமைக்கின்றனர். முகாம்கள் இருக்கிற வீடுகள் மட்டுமே இருக்கின்றன. மற்ற வீடுகள் இருந்த இடம்கூட தெரியவில்லை என பொதுமக்கள் ஆதங்கத்துடன் குறிப்பிட்டனர்.
இதேவேளை பலாலி தெற்குப் பகுதியில் பகுதி ஜே.252 கிரமசேவகர் பிரிவுரீதியாக விடுவிக்கப்பட்டுள்ளது. ஆதனைப் பார்வையிட்டவர்கள், அக்காணிகளில் இருந்த வீடுகள் அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகள் புதர்களாகவும் பற்றைக் காடுகளாகவும் காணப்படுகின்றன.
தவிர அப்பிரதேசங்களில் சில வீடுகள் மட்டுமே அழிக்கப்படவில்லை. ஆனால் அந்த வீடுகளில் இராணுவத்தினர் முகாம்களை அமைத்துள்ளனர்.
எமது கண்முன்னேயே வேலிகளை அமைக்கும் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபட்டனர். காணிகளைப் பார்க்க ஆவலுடன் சென்ற நாம் எல்லைக்கு அப்பால் இருக்கும் எமது காணிகளைப் பார்க்க இராணுவத்தினரிடம் அனுமதி கேட்டோம். ஆனால் அதற்கு இராணுவத்தினர் மறுப்புத் தெரிவித்து விட்டனர் என்றனர்.
இதேவேளை விடுபட்ட பலாலி தெற்கில் 90ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கையில் நான் இடம்பெயர்ந்து சென்றபோது விட்டுச்சென்ற தண்ணீர் இறைக்கும் பம்பி அவ்விடத்திலேயே இருப்பதாக அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.
மனதுருகும் சம்பவம்
அனுமதி மறுக்கப்பட்டதால் இராணுவத்தினருடன் மக்கள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். அத்துடன் தமது நிலங்களைப் பார்வையிட முடியாத மக்களில் சிலர் கண்ணீருடன் திரும்பினர். அதேநேரம் தமது சொந்த இடங்களை பார்வையிட்டவர்கள் தங்கள் நிலத்தின் மண்ணைத் தொட்டு அள்ளிய காட்சி பலரின் மனதையும் உருகச் செய்தது
இந்நிலையில் எங்களுக்குப் பொன்னும் வேண்டாம், பொருளும் வேண்டாம் எங்களுடைய மண்ணைண விடுங்கள் என மன்றாட்டமாக கேட்டுக் கொண்டு ஏமாற்றத்துடன் வீடுகளுக்கு திரும்பியதோடு விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட இடங்கள் விடுவிக்கப்படாமை குறித்து மீள்குடியேற்ற நடவடிக்கை குழுவிடம் முறைப்பாடு செய்ய வேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர்.
தமது சொந்தக் காணிகளை பார்வையிடுவதற்காக வவுனியா, திருகோணமலை போன்ற இடங்களில் இருந்தும் மக்கள் ஆர்வத்துடன் வந்கை தந்திருந்ததுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் வடமாகாண சபை உறுப்பினர் த.சித்தார்த்தன், வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சுகிர்தன் வலி.வடக்கு பிரதேச செயலர் சிறிமோகன் மற்றும் அரச அதிகாரிகள் ஆகியோரும் இதன்போது பிரசன்னமாகியிருந்தனர்.