நியூட்டனின் மூன்றாம் விதி நமது அன்றாட வாழ்வின் அநேக சந்தர்ப்பங்களில் வேலை செய்கின்றது. ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் அதற்கு சமமானதும் எதிரானதுமான இன்னுமொரு பதில் செயற்பாடு இருக்கும் என்கின்ற அவரது கோட்பாடு அண்மைக்கால அரசியல் நகர்வுகளுக்கு கனகச்சிதமாக பொருந்திப் போகின்றது.

நல்லாட்சிக்கான மக்கள் ஆணையை கோரிநின்ற தற்போதைய அரசாங்கமானது தேர்தல் காலத்தில் தாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதன் மூலம் சொன்னதை செய்யும் ஆட்சியாளர்களாக தம்மை காட்சிப்படுத்துவதற்கும் அதன்வழியாக அடுத்த தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கும் கூடுமான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றது. இதில் 19ஆவது அரசியலமைப்பு திருத்தமும் தேர்தல் முறைமை மீள் சீரமைப்பும் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.

இது விடயத்தில் அப்பாவி பொது மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களின் பிரதிநிதிகள் என மார்தட்டிக் கொள்கின்ற சில அரசியல் தலைவர்களுக்கும் போதுமான தெளிவு இல்லை என்ற நிலைப்பாட்டுக்கே வரவேண்டி இருக்கின்றது. இருப்பினும் மேற்சொன்ன இரு விடயங்கள் தொடர்பில் இவ்விரு தரப்பினரும் விமர்சனங்களையும் எதிர் செயற்பாடாற்றலையும் ஏகத்துக்கு முன்வைத்து வருகின்றனர். நியூட்டனின் விதி செயற்படத் தொடங்கிவிட்டது.

19ஆவது திருத்தம்

19ஆவது திருத்தத்திற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெற்ற கையோடு விஷேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருக்கின்றது. இருப்பினும் இது இன்னும் சட்டமாக்கப்படவில்லை. இதில் உள்ளடங்கியுள்ள விடயங்களை உயர்நீதிமன்றத்தில் மக்கள் சவாலுக்கு உட்படுத்த முடியும்.

அவ்வாறான விசாரணை ஒன்று இடம்பெறுமாயின் உயர் நீதிமன்றம் இது தொடர்பான தீர்ப்பை வழக்கு தாக்கல் செய்தவருக்கு அல்லாமல் நேரடியாக சபாநாயகருக்கே அனுப்பி வைக்கும். இதுதவிர அரசாங்கத்தால் வழங்கப்படும் காலஎல்லைக்குள் பொதுமகன் எவரும் நேரடியாக பாராளுமன்றத்திடம் தமது சிபாரிசுகளை முன்வைக்க முடியும். அவ்வாறு செய்யப்படும் பட்சத்தில் பாராளுமன்றம் அந்நபருக்கு பதிலளிக்கும்.

இதற்குப் புறம்பாக, குறித்த சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கு முன்னதாக சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திடமிருந்து 19ஆவது திருத்தம் குறித்த வியாக்கியானங்களை அரசாங்கமே கோரலாம். இதேவேளை, இத்திருத்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் தற்போது முன்வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் அதன் நடைமுறைச் சாத்தியம் குறித்தும் சிந்திக்க வேண்டியுள்ளது.

மேற்குறிப்பிடப்பட்ட எந்த தடங்கலும் இல்லாத பட்சத்தில், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் இந்த திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதே விதிமுறையாகும்.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் என்பது மிகவும் முக்கியமானதும் பரந்துபட்ட விடயதானங்களை உள்ளடக்கியதும் ஆகும். குறிப்பாக ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தை குறைத்தல், 17ஆவது திருத்தத்தை முறையாக அமுல்படுத்தலும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தலும், தகவல் அறியும் சட்டத்தை நடைமுறைப்படுத்தல், ஜனாதிபதி ஒருவர் 2 தடவைக்கு மேல் போட்டியிடுவதை வரையறுத்தல், பாராளுமன்றத்தை கலைப்பதற்கான கால எல்லையை மீள் வரையறை செய்தல், மஹிந்த ராஜபக் ஷவால் கொண்டு வரப்பட்ட 18ஆவது திருத்தத்தை நீக்குதல் உள்ளடங்கலாக பல்வேறு விடயங்களை இந்த உத்தேச சட்டமூலம் கொண்டிருக்கின்றது.

எது எவ்வாறிருப்பினும் 19ஆவது திருத்த சட்டமூலத்திற்குள் உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படவில்லை. புதிய தேர்தல் முறைமை தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்படுகின்றது.

இதற்கென முன்னர் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு சிபாரிசுகளை தயாரித்துள்ளது. ஆனால் 100 நாள் வேலைத்திட்ட காலப்பகுதிக்குள் சட்ட வரைபை உருவாக்குவது சாத்தியமில்லை என்ற காரணத்தினாலும் வேறுபல காரண காரியங்களாலும் புதிய தேர்தல் முறைமை 19 இற்குள் சேர்க்கப்படாதது மட்டுமன்றி, அதுதொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவும் இல்லை.

ஜே.ஆர். செய்த வேலை

சிறுபான்மை சமூகங்கள் 19 ஆவது திருத்தத்தை போலவே அல்லது அதைவிட அதிகமாக உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியுள்ளது. 19ஆவது அரசியலமைப்பு திருத்தம் எந்தளவுக்கு நன்மைகளை கொண்டுவருமோ அந்தளவுக்கு தமிழ், முஸ்லிம் மக்களுக்கு பாதகமான சூழல்களை உத்தேச தேர்தல் முறைமை மாற்றம் ஏற்படுத்தும் வாய்ப்பிருக்கின்றது என்பதை மறந்து விட முடியாது.

இலங்கை சுதந்திரமடைந்த வேளையில் தொகுதி வாரியான தேர்தல் முறைமையே நடைமுறையில் இருந்தது. 1947 ஆம் ஆண்டின் சோல்பெரிஅரசியலமைப்பின் மூலம் சிறுபான்மை இனங்களின் பிரதிநிதித்துவத்தை பேணும் வகையில் பல அங்கத்தவர் தொகுதிகள் உருவாக்கப்பட்டதுடன் நியமன உறுப்பினர் முறைமையும் உருவாக்கப்பட்டது.

ஒரு பிரதேசத்தின் நிலப்பரப்பு, அதில் வாழும் மக்கள் சனத்தொகை மற்றும் இனப் பரம்பல் என்பவற்றின் அடிப்படையில் தொகுதிகளும் அதற்கான உறுப்பினர் எண்ணிக்கையும் நிர்ணயம் செய்யப்பட்டது.

பொதுத் தேர்தல் மூலம் போதிய பிரதிநிதித்துவத்தை பெறாத சிறுபான்மை இனங்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவதற்காகவே நியமன எம்.பி. முறைமை ஏற்படுத்தப்பட்டாலும் இரட்டை அங்கத்தவர் தொகுதிகள் மூலம் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட நன்மை போன்று இதிலிருந்து நன்மைகள் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

ஆரம்ப காலத்தில் நியமன உறுப்பினர்களாக படித்த சிறுபான்மையினர் நியமனம் பெற்ற போதிலும் பிற்காலத்தில் பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்தவர்களே பெரிதும் அப்பதவியை நிரப்பியமை மன வருத்ததிற்குரியது.

1977 இல் ஆட்சிக்கு வந்த ஜே.ஆர். ஜயவர்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் 1978ஆம் ஆண்டில் பாரியளவான மாற்றம் ஒன்றை மேற்கொண்டு தொகுதிவாரியான தேர்தல் முறைமைக்கு பதிலாக விகிதாசார முறைமையை அறிமுகம் செய்தது. இதற்கு பல்வேறு நியாயங்களும் காரணங்களும் முன்வைக்கப்பட்டன.

எந்த ஆரவாரமும் இன்றி தேர்தல் முறைமை, நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை போன்ற குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்திய ஒரு ஜனாதிபதியாக ஜே.ஆர். ஜயவர்தனவை அடையாளப்படுத்தலாம். 1977ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் தொகுதிவாரி முறைப்படி ஆளும் கட்சியாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவு செய்யப்பட்டிருந்த அதேவேளை எதிர்க்கட்சியாக தமிழர் விடுதலைக்கூட்டணியே தெரிவாகியது.

அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி 17 உறுப்பினர்களுடன் சிங்கள தேசத்தின் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர, வெறும் 8 ஆசனங்களை பெற்ற சுதந்திரக் கட்சியால் எதிர்க்கட்சியாகக் கூட வர முடியாமல் போனது. இலங்கையைப் பொறுத்தமட்டில் இது மிக முக்கியமான ஒரு வரலாற்றுப் பதிவு.

சிங்களவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் பெரும்பான்மை கட்சி ஒன்று எதிர்க்கட்சியாக வர முடியாமல் போனமை ஒட்டுமொத்த சிங்கள அரசியல்வாதிகளுக்கும் தன்மானப் பிரச்சினையாகிப் போனது.

தமிழர் விடுதலைக் கூட்டணி எதிர்க்கட்சியாக செயற்படுவது தமிழர்கள் இலங்கையில் தவிர்க்க முடியாத சமூகம் என்பதை சர்வதேசத்திற்கு வெளிக்காட்டி விடலாம் என்றும், ஒருவேளை எதிர்காலத்தில் சிறுபான்மை சமூகமொன்று ஆளும் கட்சியாகிவிடும் என்ற உள்ளச்சமும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. ஜே.ஆர்., ஸ்ரீமாவோ மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ உள்ளிட்ட ஒட்டுமொத்த சிங்கள கட்சிகளும் தமது பேதங்களை மறந்து இதுவிடயத்தில் ஒருமித்து சிந்தித்திருக்க மாட்டார்கள் என்று சொல்வதற்கில்லை.

ஆக, என்னதான் நியாயம் கூறப்பட்டாலும் 1978 ஆம் ஜே.ஆர். ஜெயவர்தன தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு மேற்சொன்ன விடயமும் ஒரு முக்கிய காரணியாக இருந்திருக்கின்றது, அதனடிப்படையில் தொகுதிவாரி முறைமைக்கு மாற்றீடாக கொண்டுவரப்பட்ட விகிதார தேர்தல் முறைமை பாரியதொரு திருப்புமுனையாக அமைந்தது.

இதனால் சிறுபான்மை சமூகங்களின் பிரதிநிதித்துவம் ஓரளவுக்கு இன்றுவரையும் உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது என்றே சொல்ல வேண்டும். ஆனபோதும், கல்வியியலாளர்களையும் புத்திசாலிகளையும் அரசியலுக்குள் உள்வாங்கி பாராளுமன்ற உறுப்பினர்களாக ஆக்க வேண்டும் என்பதை முதன்மைக் காரணமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தேசியப் பட்டியல் முறைமை பிற்காலத்தில் தேர்தலில் மக்களால் புறந்தள்ளப்பட்டவர்களும், சண்டியர்களும் பாராளுமன்றத்திற்கு செல்வதற்காக பயன்படுத்தப்பட்டமை தனிக்கதை.

திருத்துவதற்கான முயற்சிகள்

இந்த தேர்தல் முறைமையை திருத்துவதற்காக இதற்கு முன்னரும் பல தடவைகள் சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கங்கள் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதிலும் அத்திட்டங்கள் செயலுருப் பெறவில்லை.

இப்போது மீண்டும் மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசாங்கம் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது குறித்து தீவிரமாக கவனம் செலுத்தி வருகின்றது. ஆனாலும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.

முன்னதாக முன்னாள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறைமை மறுசீரமைப்பு தொடர்பான விடயங்களை ஆராய்ந்து தனது ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் இந்த குழுவின் சிபாரிசுகளை தற்போதைய அரசாங்கம் முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்பதற்கு எவ்வித உத்தரவாதங்களும் இல்லை.

தொகுதிவாரியான தேர்தல் முறைமையை மீண்டும் அரசாங்கம் அமுலுக்கு கொண்டுவர முயற்சிக்கின்றது என்றாலும் அது தனியே வழக்கமான தொகுதிவாரி முறைமையாக மாத்திரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர் நடைமுறையில் இருந்த தொகுதிவாரி முறைமையில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் அடிப்படையிலும் சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படாத விதத்திலும் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அமுல்படுத்தவே ஜனாதிபதி மைத்திரிபால பெரிதும் விரும்புகின்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் அதிக உறுப்பினர்களைக் கொண்ட பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு போன்ற கட்சிகள் எதிர்வரும் பாராளுமன்ற தோ்தலுக்கு முன்னதாகவே தொகுதி வாரியான முறைமை அமுலுக்கு கொண்டுவர வேண்டுமென்று அறிக்கை விடுக்கின்றன. ஆனால் கலப்பு தேர்தல் முறைமை ஒன்றை அமுல்படுத்துவது உடனடியாக சாத்தியப்படக் கூடியதல்ல என்பது கவனிப்பிற்குரியது.

உண்மையாகச் சொல்லப்போனால், இதுவரை நாம் அறிந்துவைத்திருக்கின்ற விடயங்களை விடவும் உத்தேச தேர்தல் முறைமை என்பது சிறுபான்மை மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய ஒன்றாக இருப்பதற்கும் இன்னும் நிறைய வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஆனால் தற்சமயம் கிடைக்கக் கூடியதாகவுள்ள தகவல்களின் அடிப்படையில் நோக்கினால் தொகுதிவாரி முறைமையை பிரதானமாகக் கொண்ட தேர்தல் முறைமை ஒன்று அதிகபட்சம் சிறுபான்மையினருக்கு நன்மைகளை கொண்டுவரப் போவதில்லை என்பதே பல தரப்பினரதும் நிகழ்கால அபிப்பிராயமாக இருக்கின்றது. இது புறந்தள்ளக் கூடியதுமல்ல.

கலப்பு தேர்தல் முறைமையின் வரைபு எப்படியிருக்கும் என்பது இன்னும் அறுதியும் உறுதியுமாக தீர்மானிக்கப்படவில்லை என்றாலும், அதனது கட்டமைப்பு எவ்வாறு இருக்கலாம் என்பது பற்றிய தகவல்கள் வெளி யாகியுள்ளன.

இதற்கமைய, புதிய தொகுதிகள் உருவாக்கப்படுவதுடன் ஏற்கனவேயுள்ள தொகுதிகளின் எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்படும். அதுமாத்திரமன்றி அத்தொகுதியின் சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் உறுப்பினர் எண்ணிக்கையும் வரையறை செய்யப்படும் சாத்தியமுள்ளது.

கலப்பு தேர்தல் முறைமை அமுலுக்கு வருமானால் இடம்பெறும் தேர்தலின் மூலம் தொகுதிவாரி முறைமை அடிப்படையில் குறிப்பிட்டளவான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். அத்துடன் அத்தொகுதியில் போட்டியிட்ட ஏனைய கட்சிகளிடையே விகிதாசார முறைமைக்கு ஒத்த அடிப்படையில் மேலும் சில ஆசனங்கள் பகிர்ந்தளிக்கப்படும்.

இதற்கு மேலதிகமாக வழங்கப்படவுள்ள தேசிய பட்டியல் முறைமையின் கீழ் தேர்தலில் போட்டியிடாதவர்களையும் குறிப்பிட்டளவான பெண்களையும் உள்வாங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான மாற்றம் ஒன்றை மேற்கொள்வது தொடர்பாக அமைச்சரவையில் பலமுறை பேசப்பட்டுள்ளது. இருப்பினும் அமைச்சரவை அங்கீகாரத்திற்காக இந்த யோசனை இன்னும் முன்வைக்கப்படவில்லை என அறியமுடிகின்றது.

இதற்கிடையில் தேர்தல் முறைமையை மாற்றியமைப்பது என்றால் அதற்கு முன்னர் பல காரியங்களை செய்து முடிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக எல்லை மீள் நிர்ணயம், புதிய தொகுதிகள் உருவாக்கம் போன்றவை கட்டாயமான பணிகளாகும். எனவே இவற்றை செய்து முடிப்பதற்கு நீண்டகாலம் எடுக்கும் என்றும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து அதற்கான கால அவகாசம் வேறுபடும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதத்தில் பாராளுமன்றத்தை கலைத்து ஜூன் மாதத்தில் தேர்தலை நடாத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ள ஒரு பின்னணியில் அதற்கிடையில் இவ்வளவு பணிகளையும் நிறைவு செய்து புதிய முறைமையின் கீழ் தேர்தலை நடத்த முடியுமா? என்ற யோசனை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது.

ஆதலால், எவ்வளவு காலத்திற்குள் மேற்குறிப்பிட்ட பணிகளை செய்து முடிக்க முடியும் என்பது தொடர்பில் சாத்தியவள அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளருக்கு பணிப்புரை வழங்கப்பட்டிருப்பதாக நம்பகமாக தெரியருகின்றது. அந்த அறிக்கை கிடைத்த பிறகே எதிர்வரும் தேர்தலை எந்த தோ்தல் முறைமையின் அடிப்படையில் நடத்துவது என்பது தொடர்பான இறுதி முடிவு எட்டப்படும்.

இதனை வைத்து பார்க்கின்ற போது, மிகக் கிட்டிய காலத்தில் தேர்தல் ஒன்று இடம்பெறும் பட்சத்தில் தற்போதுள்ள விகிதாசார முறைப்படி வாக்களிப்பு இடம்பெறுவதற்கான நிகழ்தகவுகளே அதிகமாக காணப்படுகின்றன.

எவ்வாறிருப்பினும், இந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னராவது முற்றிலும் வித்தியாசமானதும் சகல விடயங்களை கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டதுமான கலப்பு தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவதில் ஜனாதிபதியும் பிரதமரும் திடசங்கற்பம் பூண்டுள்ளதாக தெரிகின்றது. எனவே பொதுவாக நாட்டு மக்களும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் சிறுபான்மையினரும் உத்தேச தேர்தல் முறை மறுசீரமைப்பு குறித்து அதீத அக்கறை செலுத்த வேண்டிய கடப்பாடு ஏற்பட்டுள்ளது.

அக்கறைக்குரிய விடயம்

கலப்பு தேர்தல் முறை என்று கூறப்பட்டாலும் விகிதாசார தோ்தல் முறைமையை மாற்றியமைப்பதே அரசாங்கத்தின் அடிப்படை நோக்கமாக இருக்கின்றது என்பதை மறக்கக் கூடாது. இந்த முறைமையில் காணப்படும் குறைபாடுகளே அதற்கான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன.

எனவே ஒன்றில் சில சீரமைப்புக்களுடன் தொகுதி வாரி தேர்தல் முறை அமுலுக்கு வரும் என்றோ அல்லது தொகுதிவாரியை முன்னிலைப்படுத்திய கலப்பு தேர்தல் முறை ஒன்று அறிமுகமாகும் என்று கருதுவதற்கு இடமுள்ளது. இதன்படி நோக்கினால் இந்த மாற்றத்தின் பின்னர் தொகுதிவாரி முறை பிரதான வகிபாகத்தை கொண்டிருக்கும் என்ற முடிவுக்கு வரலாம்.

தொகுதிவாரியான அல்லது தொகுதிவாரி முறைமையை முதன்மைப்படுத்திய எந்தவொரு தோ்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனால் சிறுபான்மை மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். என்றுமில்லாதவாறு அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்துவிடும்.

ஆரசியல் சூனியத்திற்குள் அவர்கள் தனித்து விடப்படலாம். இலங்கையைப் பொறுத்தமட்டில் இன ரீதியாக வாக்குகள் பிரிவடைந்துள்ள ஒரு பின்புலத்தில், தொகுதிவாரியான முறைமையின் அடிப்படையில் தோ்தல் இடம்பெற்றால் ஒரு தொகுதியில் அதிகமாக வாழ்கின்ற இனத்தை சோ்ந்த மக்களின் பிரதிநிதிகளே அதிகளவில் தொிவு செய்யப்படுவார்கள்.

தேசியப் பட்டியல் மூலம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சிறுபான்மை பிரதிநிதிகளும் பாராளுமன்றம் செல்ல வாய்ப்பு கிடைக்கலாம் என்றாலும் பல தொகுதிகளில் இந்த ஆறுதல் பரிசுகூட கிடைக்காமல் போகக் கூடிய அபாயம் மறைந்திருக்கின்றது.

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் போன்று சிறுபான்மை மக்கள் செறிவாக வாழ்கின்ற பிரதேசங்களில் ஓரளவுக்கு சிறுபான்மை மக்களின் பிரதிநிதித்துவங்கள் உறுதிப்படுத்தப்படும். ஆனால் வடக்கு கிழக்கிற்கு வௌியே நிலைமைகள் தலைகீழாக இருக்கும்.

குறிப்பாக கொழும்பிலும் கண்டியிலும் தென், வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மலையகத்திலும் சிறுபான்மை சமூகங்கள் பாராளுமன்ற உறுப்புரிமையை பெற்றுக் கொள்வது சாத்தியமான ஒன்றாக இருக்காது. சுருங்கக் கூறின் எந்தெந்த தொகுதிகளில் சிங்கள மக்கள் அதிகமாகவும் தமிழர்களும் முஸ்லிம்களும் குறைவாகவும் வாழ்கின்றார்களோ அங்கெல்லாம் சிறுபான்மை பிரதிநிதித்துவத்தை நினைத்துக்கூட பார்க்கத் தேவையில்லை.

இந்த நாட்டில் சிறுபான்மை சமூகங்கள் இரண்டும் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கும் நெருக்குவாரங்களுக்கும் முகம் கொடுத்து வந்திருக்கின்றன. 1978 இல் இருந்து இன்று வரைக்கும் குறிப்பாக ஒவ்வொரு பாராளுமன்றத்திலும் குறைந்தபட்சம் 15 முஸ்லிம்கள் அங்கம் வகித்திருக்கின்றனர்.

தமிழர்களும் தமது பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தி வந்திருக்கின்றனர். இந்த நாட்டின் தேசிய ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக சிறுபான்மை சமூகங்களே இருக்கின்றன என்பதை முன்னைய ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சிங்கள இனவாதிகளின் ஆதரவு தமக்கிருந்தால் போதும் என்ற எகத்தாளத்தில் மனம்போன போக்கில் அவர்கள் செயற்பட்டதை உலகறியும்.

ஆனால், முஸ்லிம்களினதும் தமிழர்களினதும் பலம் எப்பேற்பட்டது என்பதை கடந்த ஜனாதிபதித் தோ்தல் வௌியுலகுக்கு காண்பித்தது. வடக்கு, கிழக்கு, மலையகம் உள்ளடங்கலாக நாடெங்கும் உள்ள சிறுபான்மை மக்கள் மஹிந்த ராஜபக்ஷவை நிராகரித்தமையாலேயே மைத்திரிபால சிறிசேன ஆட்சியதிகாரத்தை பெற்றுக் கொண்டார்.

சிறுபான்மை மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நல்லாட்சி மீது வைத்துள்ள நம்பிக்கை எந்தளவுக்கு கனதியானது என்பதை ஜனாதிபதியினதும் பிரதமரினதும் மனச் சாட்சிகளுக்கு தொியும். மேடைக்கு மேடை சிறுபான்மை மக்கள் தமக்கு வழங்கிய வாக்குறுதிக்கு நன்றி கூறுகின்ற அரசாங்கம் அந்த பிரதியுபகாரத்தை செயல் வடிவில் காட்ட வேண்டும் என தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்பார்ப்பதில் குறைகாண முடியாது.

எனவே, சிறுபான்மையினருக்கு பாதகமாக அமையக்கூடிய தொகுதிவாரியான முறைமையை தனியே அமுல்படுத்துவது குறித்து அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். சிறுபான்மையினரின் பிரதிநிதித்துவத்தை திருப்திகரமாக உறுதிப்படுத்தக் கூடிய கலப்பு முறை ஒன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து சிந்திக்க இடமுள்ளது. ஆனால் அதற்கு முன்னதாக எல்லைகள் மீள் நிர்ணயம் செய்யப்பட்டு, புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டு, உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவும் வேண்டும்.

திருத்தம் என்பது பிழையாக இருக்க முடியாது!

தொகுதிவாரியான அல்லது தொகுதிவாரி முறைமையை முதன்மைப்படுத்திய எந்தவொரு தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டாலும் அதனால் சிறுபான்மை மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். என்றுமில்லாதவாறு அவர்களது பிரதிநிதித்துவம் குறைந்துவிடும். அரசியல் சூனியத்திற்குள் அவர்கள் தனித்து விடப்படலாம். தொகுதிவாரியாக தேர்தல் இடம்பெற்றால் அத் தொகுதியில் செறிவாக வாழ்கின்ற இனத்தை சேர்ந்த மக்களின் பிரதிநிதிகளே அதிகளவில் தெரிவுசெய்யப்படுவார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version