திருச்சி: அந்தம்மா வெளியே வர கூடாதுன்னு அமைச்சர்கள் கும்புடுறாங்கன்னு நினைக்கிறேன் என்று கூறி நடிகை குஷ்பு சூட்டை கிளப்பி உள்ளார்.

மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

kushboo1திருச்சி மாநகர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெரோம் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் ஆர்.சி.பாபு, திருச்சி வேலுச்சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராணி வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் நடிகை குஷ்பு சிறப்புரையாற்றும்போது, ‘மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் சட்டம், திட்டமில்லை, அது திருட்டு.

விவசாயிகளின் நிலத்தை அவர்கள் அனுமதியின்றி எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம் என்கிறது பா.ஜ.க. அரசு.

விவசாய நிலத்தை கையகப்படுத்துவதிலும் முறை இருக்கிறது, அதையெல்லாம் இந்த சட்டத்தில் பின்பற்றப்படவில்லை. விவசாயிகளின் வலி, காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே தெரியும்.

அதனால் தான், கடந்த முறை ஆட்சியில் இருந்தபோது காங்கிரஸ் கொண்டு வந்த சட்டத்தில், விவசாயிகளுக்கு சாதகமான பல அம்சங்களோடு இந்த சட்டம் இயற்றப்பட்டது.

ஏதாவது ஒரு திட்டத்திற்காக விவசாயிகளிடம் இருந்து நிலம் கையகப்படுத்தினால், அந்த திட்டம் நிறைவேற்றப்படவில்லை என்றால் ஐந்தாண்டுகள் கழித்து தானாகவே அந்த நிலம் விவசாயிக்கே திரும்ப கிடைக்கும்.

ஆனால், பா.ஜ.க. கொண்டுவந்துள்ள இந்த சட்டத்தில் இது திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இது, ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டு வந்த சட்டத்தைவிடக் கொடுமையானது. விவசாயிகளை, நடு ரோட்டில் பிச்சை எடுக்க வைக்க மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு திட்டமிடுகிறது.

குஜராத் மாநிலத்தில் 1 ரூபாய்க்கு பல்லாயிரக்கணக்கான நிலங்களை அதானிக்கு வழங்கிய மோடி, அதையே இப்போது இந்தியா முழுக்க செய்ய நினைக்கிறார்.

மாற்றம் வரும்னு நம்பி பா.ஜ.க.வுக்கு ஓட்டுபோட்ட மக்களுக்கு, ஒரு ரூபாய்க்கு ஒரு ஏக்கர் நிலம் கொடுங்கள் மோடி. அப்போது நாட்டில் மாற்றம் நிச்சயம் ஏற்படும். மத்திய அரசு, மக்கள் விரோத செயல்பாட்டை தொடர்ந்தால் காவிரி டெல்டா, அம்பானி, அதானி டெல்டா பகுதிகளாக மாறி விடும்.

நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை முதலில் எதிர்த்த அ.தி.மு.க., தற்போது நாடாளுமன்றத்தில் இதற்கு ஆதரவாக அந்தர் பல்டி அடித்துள்ளது.

அது ஏன் என்று தான் எனக்கு பெரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. பெங்களுரில் நடந்து வரும் வழக்கிற்கும், இந்த மசோதாவை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கும் ஏதோ தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளது.

இந்த சந்தேகம் எனக்கு மட்டும் இல்லீங்க. தமிழ்நாட்டில் உள்ள அனைவருக்கும் இருக்கு.

நீதிமன்ற தண்டனை பெற்றவர், தண்டனையிலிருந்து விடுபட வேண்டும் என்று தமிழக அமைச்சர்கள் கோயில், கோயிலாக போய் யாகம், சிறப்பு பூஜைகள் நடத்துகிறார்கள்.

எனக்கு என்னமோ சாமி, அம்மா தண்டனையில் இருந்து விடுதலை பெறணும்னு அவங்க வேண்டிக்கிறா மாதிரி தெரியல.

ஐயா சாமி, தயவு செஞ்சு அவங்க வெளியே வந்திடக் கூடாது. அவங்களை உள்ளேயே வை. அந்த அம்மாவை பார்த்து குனிஞ்ச நாங்க இப்ப தான் நிமிர்ந்து நிக்கிறோம்னு அவங்க கோயில் கோயிலா போய் கும்புடுறாங்கன்னு நினைக்கிறேன்” என்றார்.

சி.ஆனந்தகுமார்

 

Share.
Leave A Reply

Exit mobile version