சென்னை: படம் பார்க்க வரும் ரசிகர்கள் படம் பிடிக்கவில்லை என்று கூறி பாதியில் எழுந்து பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் வினியோஸ்தர்கள் கொடுப்பார்களா என்று நடிகர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் இன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

உங்களது ஒவ்வொரு படமும் எதிர்ப்புகளுக்கு உள்ளாகிறதே?

நான் ஒவ்வொரு படத்திலும் இடையூறுகளை சந்திக்கிறேன். என் முகவரியை கேட்டால் இடையூறு என்று சொல்லலாம். வீட்டு நம்பருடன் இடையூறு தெரு என்று கூடபோடலாம். அந்த அளவுக்கு எதிர்ப்புகளை சந்திக்கிறேன்.

தசாவதாரம் படம் எடுத்த போது ஒருவர் என்னுடைய கதை என்று வழக்கு போட்டார். மும்பை எக்ஸ்பிரஸ் படம் எடுத்த போது அந்த பெயரை வைக்க கூடாது என்றனர். மும்பைக்கு எப்படி தமிழ் வார்த்தை கண்டு பிடிப்பது? சண்டியர் படத்தை எடுத்த போது எதிர்த்தனர்.

அதன் பிறகு சண்டியர் என்ற பெயரிலேயே ஒருபடமும் தயாராகி வெளிவந்து விட்டது. பாபநாசம் படத்தை எதிர்த்தும் வழக்கு போட்டனர்.

என்னை மட்டும் ஏனோ குறி வைத்து எதிர்க்கிறார்கள். இது நல்ல வண்டி இலவசமாக ஏறிப்போய் அடுத்த நிறுத்தத்தில் இறங்கி விடலாம் என்று கருதி இப்படி செய்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

திரைப்படங்களுக்கு வினியோகஸ்தர்கள் நஷ்டஈடு கேட்பது பற்றி உங்கள் கருத்து என்ன?

சினிமா என்பது தயாரிப்பாளர்களுக்கு வியாபாரம். வினியோகஸ்தர்களுக்கு கலை. வியாபாரம் முடிந்தபிறகு நஷ்டம் ஏற்பட்டு விட்டது என்று பணத்தை திருப்பி கேட்பது சரியல்ல.

ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள். பாதியில் எழுந்து படம் பிடிக்கவில்லை. பாதி பணத்தை திருப்பி தாருங்கள் என்று கேட்டால் எப்படி முடியும்? அது சாத்தியமானது அல்ல. பாதி பணத்தை எடுத்துக் கொண்டு மீதி பணத்தை தாருங்கள் என்று ரசிகர்கள் கேட்டால் நன்றாக இருக்குமா? அது போல்தான் இதுவும்.

மருதநாயகம் படத்தை மீண்டும் எடுப்பீர்களா?

மருதநாயகம் படத்தை எடுக்க என் நண்பர்கள் முயற்சிக்கின்றனர். இது ஒரு உலகப்படம் என்று அவர்களுக்கு நினைவூட்ட இருக்கிறேன்.

உத்தமவில்லன் படத்தின் கதை என்ன?

ஒரு நடிகனின் கதையே இந்த படம். அவன் வாழ்க்கை சம்பவங்கள் முகமூடியுடனும் முகமூடி இல்லாமலும் சொல்லப்பட்டு இருக்கிறது. என் வாழ்க்கை கதையும் கொஞ்சம் இருக்கும். ஆனால் சினிமாவை கிண்டலடிக்கும் படமாக இருக்காது.

உத்தம வில்லன் படத்தை நீங்கள் இயக்காதது ஏன்?

இந்த படத்துக்கு கதையும், திரைக்கதையும் நான் எழுதியுள்ளேன். என்னிடம் 30 கதைகள் இருக்கிறது. அவற்றில் சில கதைகளை ரமேஷ் அரவிந்திடம் கூறினேன்.

அவருக்கு இந்த கதை பிடித்தது. எங்கள் இருவரின் எண்ண ஓட்டமும் ஒரே மாதிரியாக இருக்கும். எனவே இந்த படத்தை அவரையே இயக்கச் சொன்னேன்.

உத்தமவில்லன் படத்தில் உங்கள் குருநாதர் கே.பாலச்சந்தர் நடித்திருப்பது பற்றி?

கே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நீண்ட காலம் முயற்சித்தேன். ஏற்கனவே பிதாமகன் என்ற பெயரில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டு, அதில் சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தருடன் இணைந்து நடிக்க நான் முடிவு செய்தேன். ஆனால் அது கைகூட வில்லை. அந்த தலைப்பை தான் ரைடக்டர் பாலா தனது படத்துக்கு வைத்தார்.

உத்தமவில்லன் படத்தில் நடிக்கும்படி அவரிடம் கேட்டபோது படத்தை பாதியில் நிறுத்த வேண்டி வருமே என்றார்.

அதற்கு நான், அப்படி நேர்ந்தால் கதையை மாற்றிக் கொள்கிறேன் என்றேன். அதன்பிறகு நடித்தார். நடித்து முடித்ததும் தொழில் நுட்ப பணிகளை விரைந்து முடிக்க வற்புறுத்தினார்.

படத்தை போட்டுக்காட்டும் படியும் கேட்டுக் கொண்டார். வெளிநாட்டில் படத்தின் மிக்சிங் பணியில் நான் இருந்த போது அவரது உடல் நலம் குன்றியது. போனில் பேசினேன். வந்துவிடவா என்றேன். வேலையை முடித்து விட்டுவா என்றார்.

இப்போது நம்மிடம் அவர் இல்லை. மார்கதரிசி என்ற பாத்திரத்தில் வருகிறார். உத்தமவில்லன் இரண்டு காலகட்டத்தை பற்றிய கதை. அந்த இருகால கட்டத்தையும் இணைக்கும் காலகட்டத்தில் அவர் வருகிறார்.

ஊர்வசி, ஆண்டிரியா, பூஜாகுமார், கே.விஸ்வநாத், பார்வதிமேனன், எம்.எஸ். பாஸ்கர், நாசர், ஜெயராம் போன்ற எல்லோரும் வித்தியாசமான கேரக்டரில் சிறப்பாக நடித்துள்ளனர்.

உத்தமவில்லன், பாபநாசம், விஸ்வரூபம்-2 படங்கள் முடிந்துள்ளன. உத்தம வில்லன் அடுத்தமாதம் ரிலீஸ் ஆகிறது. தொடர்ந்து பாபநாசம் வரும். விஸ்வரூபம்-2 எப்போது வரும் என்பது தயாரிப்பாளருக்குத்தான் தெரியும்.

இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.

காதலாம் கடவுள் முன் – உத்தமவில்லன்

Share.
Leave A Reply

Exit mobile version