அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் உள்ள வைன்லேண்ட் பகுதியின் நடைபாதையில் சந்தேகத்துக்கிடமாக ஒருவர் நின்று கொண்டிருப்பதாக அப்பகுதி பொலிசாருக்கு கடந்த 31-ம் திகதி தகவல் வந்தது.
உடனடியாக அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிசார் அங்கு நின்றிருந்த பிலிப் வைட் (32) என்ற நபரை நெருங்கி சென்றனர். அவர்களிடம் பிடிபடாமல் தப்பிக்க அவர் முயன்றபோது இரண்டு பொலிசார் அவரை சுற்றிவளைத்து முரட்டுத்தனமாக மடக்கி பிடித்து கார் சக்கரத்தின் அருகே கவிழ்த்துப் போட்டு தாக்கினர்.
அது மட்டுமின்றி, பொலிஸ் நாயை ஏவி அவரை கடிக்க விட்டும் வேடிக்கை பார்த்ததாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் பலத்த காயம் அடைந்த அவரை நேராக வைன்லேண்ட் பொலிஸ் நிலையத்துக்கு இழுத்துச் சென்றனர்.
விசாரணைக் காவலின்போது பொலிசாரின் முரட்டுத்தனமான கைது நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட பிலிப் வைட்டின் உடல் நிலை மிகவும் மோசம் அடைந்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக பலியானார்.
இது தொடர்பான பொலிஸ் தரப்பு செய்தி உள்ளூர் ஊடகங்களில் வெளியானதும் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வீடியோ மூலம் இரகசியமாக படம் பிடித்த ஒரு சமூக ஆர்வலர் அந்த காட்சிகளை சமூக வலைத்தளங்களில் பரவ விட்டார்.
இதனையடுத்து, இந்த சம்பவத்துக்கு காரணமான வைன்லேண்ட் பொலிஸ் நிலைய அதிகாரிகளான லூயிஸ் பிளாண்டானியா மற்றும் ரிச்சர்ட் ஜனாசியாக் ஆகிய இருவரும் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், பொலிசாரிடம் இருந்த துப்பாக்கியை பறிக்க பிலிப் வைட் முயன்றதால்தான் அவர்கள் இப்படி முரட்டுத்தனமாக நடந்து கொள்ள நேரிட்டது என பொலிஸ் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.