பதினெட்டு வருடங்களாக என்னைப் பற்றிய எந்தவொரு தகவலும் இல்லையென ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு செய்யப்பட்ட முறைப்பாட்டினாலேயே நான் காப்பாற்றப்பட்டேன்” என இலங்கை வந்துள்ள ஆர். பிரேமவத்தி தெரிவித்தார்.

சவூதி அரேபியாவிலுள்ள வீடொன்றில் 18 வருடங்களாக சிறை வைக்கப்பட்டிருந்த ஆர். பிரேமவத்தி என்னும் இலங்கை பணிப்பெண் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.

பிரேமவத்திக்கு 18 வருட காலத்திற்கும் கிடைக்க வேண்டிய சம்பள பணமாக 18 இலட்சம் ரூபா காசோலையினை அமைச்சர் தலதா அத்துகோரல நேற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சில் வைத்து பெற்றுக் கொடுத்ததுடன் அவரது சொந்த ஊருக்கு அவரை அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகளையும் அமைச்சு மேற்கொண்டிருந்தது.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து அமைச்சில் விசேட செய்தியாளர் மாநாடொன்று நடத்தப்பட்டது.

இதன்போது குறித்த முகவர் நிலையம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யப்பட்டதா என்பதனை உறுதி செய்ததன் பின்னரே செயலில் இறங்க வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சர் தலதா முன்வைத்தார்.

எதிர்காலத்தில் பணிப்பெண்களாக செல்வோருக்கான ஆகக்கூடிய சம்பளம் வரையறை செய்யப்படுமென தெரிவித்த அமைச்சர், அரசாங்கத்திற்கு அதிகூடிய வருமானத்தை பெற்றுத் தரும் அமைச்சு என்றவகையில் பணிப்பெண்கள் வெளிநாடு செல்வதனை தடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை என்கின்ற போதிலும் பிரேமவத்தி போன்ற பெண்களின் அவஸ்தைகளையும் வேதனைகளையும் உணர்ந்து பெண்கள் தாமாகவே வெளிநாடு செல்வதிலிருந்து பின்வாங்குவார்களாயின்  ஒரு பெண்ணாக நான் மிகவும் சந்தோஷப்படுவேன் என்றும் கூறினார்.

ஆர். பிரேமவத்தி தனது அனுபவம் குறித்து தெரிவித்ததாவது, “நான் மருதானையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையமொன்றிற்கூடாக சவூதி அரேபியாவிற்கு பணிப்பெண்ணாக சென்றேன்.

அதன் தலைநகரான ரியாத்திலிருந்து சுமார் 100 கிலோமீற்றர் தொலைவிலுள்ள சகாக்கா என்னும் கிராமத்திலுள்ள வீடொன்றில் வேலைக்கமர்த்தப்பட்டேன்.

மூன்று வருடங்கள் அந்த வீட்டில் வேலை செய்த பின்னர் அவரது மகள் என்னை அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அந்த வீட்டில் 8 பேர் இருந்தனர். நான் காலை 5 மணி முதல் இரவு வரை வேலை செய்தேன். சில நாட்களில் ஒரு மணித்தியாலம் மாத்திரமே நான் உறங்குவேன்.

இவர்கள் எனது குடும்பத்தாருடனான தொடர்பினை துண்டித்து விட்டார்கள். சம்பள பணமும் கொடுப்பதில்லை. அந்த வீட்டு பெண் எனது வங்கி புத்தகத்தை கிழித்து எறிந்து விட்டார்.

தான் வீட்டாருடன் கதைப்பதற்கும் சம்பளத்தை பெறுவதற்காகவும் மிகவும் போராடி வந்தேன். இந்நிலையில் எனது கடவுச் சீட்டை புதுப்பிப்பதற்காக எனது எஜமானுடன் நான் அருகிலுள்ள இலங்கை அலுவலகமொன்றுக்குச் சென்றேன்.

நீண்டகாலமாக இது புதுப்பிக்கப்படாமையினால் அதனை ரியாத்திலுள்ள தூதரகத்திற்கு அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.

இதற்கிடையில் என்னை தேடி எனது குடும்பத்தார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு செய்திருந்த முறைப் பாட்டினால் நான் ஏற்கனவே ரியாத் தூதரகத்தில் தேடப்பட்டு வந்துள்ளேன்.

எனது கடவுச் சீட்டு கிடைத்ததும் அதில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என ஏதோவொரு காரணத்தைக் கூறி உடனடியாக என்னை தூதரகத்துக்கு வருமாறு அழைப்பு கிடைத்தது.

நான் எஜமானுடன் அங்கு சென்றிருந்த போது அதிகாரிகள் என்னைக் காப்பாற்றி மீண்டும் எஜமானிடம் ஒப்படைக்க முடியாது என தெரிவித்து என்னை நாட்டிற்கு திருப்பி அழைத்து வந்தார்கள்.

நான் வெளிநாடு சென்றபோது எனது மகளுக்கு 8 வயது மகனுக்கு 6 வயது. அவர்கள் இப்போது 21 மற்றும் 19 வயதுகளில் உள்ளனர்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version