முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ச, அலரி மாளிகைக்கு பிரியாணி விநியோகித்ததாக கூறப்படும் ஒருவரிடம் 150 மில்லியன் ரூபாவை கொடுத்து அதனை திரும்பப்பெற முடியாத நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ராஜபக்ச குடும்பத்தினர் அலரி மாளிகையில் வசித்து வந்த காலத்தில் அவர்களுக்கு டுபாய், பாய் என்று அழைக்கப்படும் முஸ்டாக் பாய் என்பவர் பிரியாணி விநியோகித்து வந்துள்ளார்.

தற்போது அவர் ராஜபக்ச குடும்பத்தினரை வசைபாடி வருவதுடன் அந்த குடும்பத்தினர் நாட்டை அழித்து விட்டதாக குறைகூறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ராஜபக்ச புதல்வர்களான நாமல், யோஷித்த மற்றும் ரோஹித்த ஆகியோர் தமது கோடிக்கணக்கான பெறுமதிமிக்க சபாரி, லம்போகினி மற்றும் மார்டின் ரக கார்களை பாதுகாப்பு கருதி முஸ்டாக் பாயின் வீட்டுக்கே அனுப்பி வைத்தனர்.

மேலும் தேர்தல் நாட்களில் அலரி மாளிகைக்கு சென்றிருந்தார். முஸ்டாக் பாயை கண்ட யோஷித்த ராஜபக்ச, அவரது கையை பிடித்து அலரி மாளிகையில் இருந்த தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

தனது அறைக்கு அவரை அழைத்துச் சென்ற யோஷித்த ராஜபக்ச தான் பொதி செய்து வைத்திருந்த 150 மில்லியன் (1500 லட்சம்) ரூபாவை கொடுத்து அதனை பாதுகாப்பாக வைக்குமாறு தான் பின்னர் அதனை பெற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அலரி மாளிகையில் இருந்த பணியாளர்களின் உதவியுடன் முஸ்டாக் பாய் தான் வந்த வாகனத்தில் பணத்தை ஏற்றியதுடன் அதனை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்த நிலையில், கொண்டு சென்ற பணத்தை தன்னிடம் மீண்டும் வழங்குமாறு யோஷித்த சில தினங்களுக்கு முன்னர் முஸ்டாக் பாயிடம் கேட்டுள்ளார்.

பெருந்தொகை பணம் என்பதால், அதனை வீட்டில் வைத்திருக்க முடியாத காரணத்தினால் வர்த்தகத்தில் முதலீடு செய்து விட்டதாக முஸ்டாக் பாய் யோஷித்தவிடம் கூறியுள்ளார்.

அப்படியானால், பணத்தை எப்போது திரும்ப பெற முடியும் என யோஷித்த கேட்டுள்ளார். வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளதால், இலாபம் கிடைக்கும் போது கொஞ்சம் கொஞ்சமாக செலுத்தி விடுவதாக முஸ்டாக் பாய் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது பாய் , யோசித ராஜபக்ஷவை வேண்டும் என்றே தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version