சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்தை பொலிஸ் பிரிவில் உள்ளது கொட்டகெதன. வயோதிப மாதுக்களின் திடீர் படுகொலைகளால் நாடளாவிய ரீதியில் அறியப்பட்ட ஒரு பிரதேசமே இந்த கஹவத்தை – கொட்டகெதன.
கடந்த காலங்களில் இந்த பிரதேசத்தில் இடம்பெற்ற மர்மக் கொலைகள் தொடர்பிலான நீதிமன்ற தீர்ப்பொன்று மிக விரைவில் அளிக்கப்படவுள்ள நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மர்மக் கொலைகள் தொடர்பில் பேச வேண்டியேற்பட்டது.
அது, கஹவத்தை – கொட்டகெதன பிரதேசத்தின் சந்திரா மல்காந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாயின் கொலையுடன் அது தொடர்பில் மீண்டும் மக்கள் பேச ஆரம்பித்தனர்.
சந்திரா மல்காந்தி கொட்டகெதன பெண் கொலைகளை தடுக்க ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் முகாமிலிருந்து 600 மீற்றர்கள் தொலைவிலேயே வாழ்ந்தவர்.
12,18 மற்றும் 20 வயதுகளையுடைய மூன்று மகன் மாரே சந்திரா மல்காந்திக்கு இருந்தனர்.
இளையவன் உறவினர் வீடொன்றில் இருந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி சனிக்கிழமை இரவு கொட்டகெதன பிரதேசத்தில் மரண வீடொன்றுக்கு சந்திராவின் கணவர் சென்றிருந்தார்.
இந் நிலையில் அன்றைய தினம் நள்ளிரவுக்கு பின்னர் 1.45 மணியளவில் வீடு திரும்பிய கணவர் தனது மனைவியை வீடு முழுவதும் தேடி காணாமல் வீட்டில் பிறிதொரு அறையில் உறக்கத்தில் இருந்த தனது இரண்டாவது மகனான குஷான் மகேஷிடம் அது தொடர்பில் வினவியுள்ளார்.
மகனும் தனக்கு தெரியாது எனவும் அம்மா 7.30 மணிக்கெல்லாம் நித்திரைக்கு சென்றுவிட்டதாகவும் தானும் அதன் போது நித்திரைக்குச் சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து வீடு முழுவதும் தேடிய கணவருக்கு மனைவியின் படுக்கை, சமையலறைப் பகுதிகளிலும் பின் பக்க முற்றத்திலும் இரத்தக் கறைகள் இருப்பதை அவதானிக்க முடிந்துள்ளதுடன் சமையலறைக் கதவும் திறந்து கிடந்துள்ளது.
இந் நிலையில் தான் ஞாயிறன்று சந்திரா மல்காந்தியை தேடும் படலம் ஆரம்பமானது.
இதற்கிடையில் கஹவத்தை கொட்டகெதன பகுதியில் நீரோடை ஒன்றிலிருந்து சந்திரா சடலமாக ஒன்றரை நாட்களின் பின்னர் மீட்கப்பட்டார்.
வீட்டிலிருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் உள்ள நீரோடை ஒன்றுக்குள் இருந்தே இவ்வாறு அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் விஷேட விசாரணை ஒன்றினை சப்ரகமுவ மாகாணத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் டயஸ் மற்றும் இரத்தினபுரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் பாலித்த பெர்ணான்டோ ஆகியோரின் நேரடி கட்டுப்பாட்டில் இரத்தினபுரி உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழும் கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதேபோன்று கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரொஷான் டீ சில்வாவின் மேற்பார்வையில் அதன் பிரதிப் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் வெதசிங்கவின் ஆலோசனையில் ……….
உதவி பொலிஸ் அத்தியட்சரின் கீழ் ஒரு பொலிஸ் குழுவும் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ரணவீரவின் மேற்பார்வையின் கீழ் ஒரு குழுவும் விசாரணைகளை ஆரம்பித்தன.
இந்த விசாரணைகளில் பல்வேறு கோணங்களில் தமது அவதானத்தினைச் செலுத்தினர். இறந்த பெண்ணின் கணவர், கணவரின் சகோதரர், மகன்மார் மற்றும் அயலவர்கள் என பலரிடம் சுமார் 40 இற்கும் மேற்பட்ட வாக்கு மூலங்களை பொலிஸார் பதிவு செய்து கொண்டனர்.
இந்தக் கொலை இடம்பெற்றதாக கூறப்படும் இரவு மரண வீடொன்றுக்கு கணவர் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படும் நிலையிலேயே அது தொடர்பில் விரிவாக விசாரித்து மேலும் பல விடயங்களை உள்ளடக்கி வாக்கு மூலம் பெறப்பட்டிருந்தது.
அத்துடன் கணவருக்கு மேலதிகமாக கணவரின் இளைய சகோதரன், சம்பவத்தின் போது வீட்டில் இருந்த இரண்டாவது மகன், அயலவர்கள் என 40 பேரின் வாக்கு மூலங்களையும் இந்த பொலிஸ் குழுக்கள் விரிவாக ஆராய்ந்தன.
இதனிடையே இரத்தினபுரி வைத்தியசாலையில் சந்திராவின் சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இடம்பெற்றன.
பிரேத பரிசோதனையில் அவரது உடலில் 6 பலத்த வெட்டுக்காயங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அத்துடன் தலையில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் மண்டை ஓடு சுக்கு நூறானதில் மரணம் சம்பவித்ததாக தெரியவந்தது.
இதனையடுத்து அந்த பெண்ணை படுகொலை செய்த சந்தேக நபர்கள் கைவிரல் ரேகை, டீ.என்.ஏ. மூலக் கூறுகளை அழிக்கும் விதமாக அவரது சடலத்தை கொட்டகெதன நீரோடைக்குள் வீசியிருக்க வேண்டும் என சந்தேகித்த பொலிஸார் அது தொடர்பிலும் விரிவான விசாரணைகளை ஆரம்பித்தனர்.
இந் நிலையில் தான் பொலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் இணைந்து விஞ்ஞான ரீதியிலான தடயங்களை சேகரிக்கலாயினர்.
இதன் பலனாக குறித்த பெண்ணின் இரண்டாவது மகனின் வாக்குமூலம் தடயங்கள் சிலவற்றுடன் ஒத்துப் போகாமல் இருப்பதை பொலிஸார் அவதானித்தனர்.
இந் நிலையில் தொடர்ந்தும் அது தொடர்பில் அவதானம் செலுத்திய பொலிஸார் மகன் மீது ஒரு கண் வைத்த நிலையிலேயே விசாரணைகளைத் தொடர்ந்தனர்.
இந் நிலையில் நேற்று முன் தினம் வியாழக்கிழமை இறந்த பெண்ணின் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து அவரது மகன் குஷான் மகேஷை பொலிஸார் கைது செய்தனர்.
ஏனெனில் அவனது தாய் கொலையுண்ட போது வீட்டில் இருந்த ஒரே நபர் குஷான் மட்டுமே. அத்துடன் அவன் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தில் தானும் தாயும் இரவு 7.30 மணிக்கெல்லாம் விளக்குகளை அணைத்துவிட்டு வெவ்வேறு அறைகளில் நித்திரைக்கு சென்றுவிட்டதாக தெரிவித்திருந்தார்.
எனினும் பொலிஸார் சேகரித்த அறிவியல் ரீதியிலான தடயங்களில் அந்த வாக்கு மூலம் முரண்பட்டது.
ஏனெனில் குஷான் இரவு 10.30 மணியையும் தாண்டி ஒரு தொலைபேசி இலக்கத்துக்கு காதல் குறுஞ் செய்திகளைப் பரிமாறியுள்ளதை பொலிஸார் கண்டறிந்தனர்.
அந்த இலக்கத்தைத் தேடிய போது அது அவனது காதலி என்பதைப் பொலிஸார் உறுதிப்படுத்திக் கொண்டனர். இதனையடுத்து மேலும் சில விடயங்களை அடிப்படையாகக் கொண்டு இறுதிக் கிரியைகள் முடிந்ததும் குஷானை பொலிஸார் கைது செய்தனர்.
பொலிஸார் அவனை கைது செய்து விசாரித்த போது அந்த கொலையினை தானே செய்ததாக அவன் ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளான்.
சந்தேக நபர் பொலிஸாருக்கு அளித்துள்ள வாக்கு மூலத்தின் படி, குஷான் ஒருநாள் தனது காதலியுடன் பாதையில் கதைத்துக் கொண்டிருந்த போது அவரது மூத்த சகோதரர் கண்டு அது தொடர்பில் பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இந் நிலையில் அந்த தொடர்புக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் தொழில்நுட்ப பயிற்சி ஒன்றினை முன்னெடுத்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் திகதியே குஷான் வீட்டுக்கு வந்துள்ளார்.
இதனையடுத்து நான்காம் திகதி குறித்த தினம் எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்காக தனது காதலிக்கு புத்தாடை வாங்கிக்கொடுக்க தனது தாயிடம் 1500 ரூபா வரையில் கோரியுள்ளார். ஆனாலும் அதனை வழங்க தாய் மறுத்துள்ளார்.
இந் நிலையில் நான்காம் திகதி இரவு 10 மணியளவில் இருவருக்கும் இடையே சிறு வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.
சமயலறையில் வைத்து ஏற்பட்ட இந்த வாக்குவாதம் முற்றவே குஷான் தனது தாயை பலமாக தள்ளிவிட்டுள்ளான். அப்போது சுவரில் சென்று மோதுண்ட சந்திரா அங்கேயே மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.
இந் நிலையில் அம்மா தான் தள்ளிவிட்டதில் இறந்துவிட்டார் என எண்ணிய குஷான் சமையலறை கத்தி ஒன்றை எடுத்து தாயின் தலைப்பகுதியை கடுமையாக வெட்டியுள்ளான்.
இதனையடுத்து சமையலறையில் இருந்து சடலத்தை படுக்கை அறை வரையும் எடுத்துச் சென்று படுக்கையிலும் இரத்தத்தை ஓடவிட்டுள்ளதுடன் வீடெங்கும் இரத்தக் கறையை ஓட விட்டு தாயின் உடைகளை களைந்து தலையில் பொலித்தீன் பை ஒன்றினை கட்டி கொட்டகெதன நீரோடைக்குள் கொண்டு போய் போட்டுள்ளான்.
அத்துடன் கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் அவன் அந்த ஓடைக்குள்ளேயே வீசியுள்ளான். வழியில் இரத்தம் சொட்டாமல் இருக்கவே தாயின் தலைப்பகுதியை பொலித்தீனினால் சுற்றியுள்ள குஷான், தனது இரத்தம் தோய்ந்த உடைகளையும் ஒளித்துள்ளதுடன் எதுவும் அறியாதவனைப் போல் நடித்துள்ளான்.
அவன் அவ்வாறு செய்ய கடந்த காலங்களில் கஹவத்தையை உலுக்கிய கொலைகள் அவனுக்கு சிந்தனையைக் கொடுத்ததாகவும் கொலை குற்றத்தில் இருந்து தப்பவே தாம் அவ்வாறு செய்ததாகவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் குஷான் வாக்குமூலம் அளித்துள்ளான்.
கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை அப்பிரதேசத்தில் 17 பெண்கள் இரவு வேளைகளில் மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ள நிலையில் மீண்டும் அது போன்ற ஒரு சூழல் உருவாகிறதா எனவும் அதன் தொடரில் இது 18 ஆவது சம்பவமாக இருக்குமோ எனவும் பிரதேச மக்கள் அச்சமடைந்திருந்தனர்.
இந் நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட கொட்டகெதன நீரோடையில் கடந்த காலங்களிலும் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டு போடப்பட்டிருந்தார்.
கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்தில் முதலாவது வயோதிப மாதுவின் கொலை 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்றது.
கொட்டகெதன, ஓபாத தோட்டத்தை சேர்ந்த 56 வயதுடைய வயோதிப மாது ஒருவர் அப்போது கொல்லப்பட்டிருந்தார்.
இதனைத் தொடர்ந்து கொட்டகெதன பிரதேசத்தின் வராபிட்டிய, நில துர, திவுல் வெல உள்ளிட்ட பல இடங்களிலும் தொடர்ச்சியாக இவ்வாறு வயோதிப மாதுக்கள் கொலை செய்யப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டு வரை இவ்வாறு 9 மாதுக்கள் கொலை செய்யப்பட்டனர். தனித்தனியாக கொலை செய்யப்பட்டிருந்த இந்த மாதுக்களின் சடலங்கள் வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள இடங்களில் இருந்து மீட்கப்பட்டிருந்தன.
இவ்வாறானதொரு நிலையில் 2012 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இப்பிரதேசத்தில் முதல் இரட்டைக் கொலை பதிவானது.
கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்தைச் சேர்ந்த நில்மினி என்ற 52 வயது மாதுவும் 19 வயதுடைய அவரது மகள் சத்துரங்கனியும் அப்போது கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தயாவதி என்ற 61 வயது பெண்ணும் அவருடன் இருந்த 51 வயதுடைய திருமணமாகாத திலகவதி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்தனர். இவர்களது உடல் தீயில் கருகியிருந்தது.
இதனையடுத்தே கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்துக்கு பொலிஸ் காவலரண் ஒன்று அமைக்கப்பட்டது. பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரின் ஒத்துழைப்புடன் இந்த காவலரண் அமைக்கப்பட்டது.
எனினும் அதே ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி 65 வயதுடைய பிரேமலதா, அவரது மகள் 35 வயதுடைய புஷ்பகுமாரி ஆகியோர் எரித்துக் கொல்லப்பட்டிருந்தனர். இந் நிலையில் மொத்த உயிரிழப்புக்கள் 15 ஆக அப்போது அதிகரித்திருந்தன.
இதனையடுத்து பலரும் கஹவத்தை கொட்டகெதன பகுதியை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இந் நிலையில் கஹவத்தை கொட்டகெதன பிரதேசத்துக்கு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்த்தன 2012 ஜூலை மாதம் பொறுப்பாக அமர்த்தப்பட்டார்.
இதனையடுத்து கஹவத்தை கொட்டகெதன கொலைகள் ஓரளவு ஓய்ந்தாலும் மீண்டும் அதே ஆண்டு ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி வராபிட்டிய, பன்சலை வீதியில் 66 வயதுடைய சந்திராவதி என்ற மாது கொலை செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அப்பிரதேசத்தில் கொலை சம்பவங்கள் பதிவாகவில்லை.
எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஓபான வத்தை பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்தே மொத்த பெண்களின் கொலைகள் அப்பிரதேசத்தில் 17 ஆக அதிகரித்தது.
இந் நிலையில் இறுதியாக 39 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை அப்பிரதேசத்தில் மர்மமாக உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த காலங்களில் இடம்பெற்ற மரணங்களில் ஒன்றைத் தவிர மற்றையவை அனைத்தையும் விசாரித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்த சம்பவத்திலும் மிக விரைவாகவே சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் சந்தேக நபரான 18 வயதுடைய குஷானுக்கு எதிராக நேற்று பெல்மதுளை நீதிவானிடம் 48 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்துகின்றது.
எம்.எப்.எம்.பஸீர்