சப்­ர­க­முவ மாகா­ணத்தின் இரத்­தி­ன­புரி மாவட்­டத்தின் கஹ­வத்தை பொலிஸ் பிரிவில் உள்­ளது கொட்ட­கெ­தன. வயோ­திப மாதுக்­களின் திடீர் படு­கொ­லை­களால் நாட­ளா­விய ரீதியில் அறி­யப்­பட்ட ஒரு பிர­தே­சமே இந்த கஹ­வத்தை – கொட்­ட­கெ­தன.

கடந்த காலங்­களில் இந்த பிர­தே­சத்தில் இடம்­பெற்ற மர்மக் கொலைகள் தொடர்­பி­லான நீதி­மன்ற தீர்ப்பொன்று மிக விரைவில் அளிக்­கப்­ப­ட­வுள்ள நிலையில் கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை மீண்டும் மர்மக் கொலைகள் தொடர்பில் பேச வேண்­டி­யேற்­பட்­டது.

அது, கஹ­வத்தை – கொட்­ட­கெ­தன பிர­தே­சத்தின் சந்­திரா மல்­காந்தி என்ற மூன்று பிள்­ளை­களின் தாயின் கொலை­யுடன் அது தொடர்பில் மீண்டும் மக்கள் பேச ஆரம்­பித்­தனர்.

சந்­திரா மல்­காந்தி கொட்­ட­கெ­தன பெண் கொலை­களை தடுக்க ஆரம்­பிக்­கப்­பட்ட பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின்   முகா­மி­லி­ருந்து 600 மீற்­றர்கள் தொலை­வி­லேயே வாழ்ந்­தவர்.

12,18 மற்றும் 20 வய­து­க­ளை­யு­டைய மூன்று மகன் மாரே சந்­திரா மல்­காந்­திக்கு இருந்­தனர்.

tanayanமூத்­தவன் கொழும்பில் வேலை பார்க்க, இரண்­டா­வது மகன் நிவித்­தி­கல பிர­தே­சத்தில் தொழில் பயிற்சியை முன்­னெ­டுத்து வந்தான்.

இளை­யவன் உற­வினர் வீடொன்றில் இருந்த நிலையில், கடந்த 4 ஆம் திகதி சனிக்­கி­ழமை இரவு கொட்ட­கெ­தன பிர­தே­சத்தில் மரண வீடொன்­றுக்கு சந்­தி­ராவின் கணவர் சென்­றி­ருந்தார்.

இந் நிலையில் அன்­றைய தினம் நள்­ளி­ர­வுக்கு பின்னர் 1.45 மணி­ய­ளவில் வீடு திரும்­பிய கணவர் தனது மனை­வியை வீடு முழு­வதும் தேடி காணாமல் வீட்டில் பிறி­தொரு அறையில் உறக்­கத்தில் இருந்த தனது இரண்­டா­வது மக­னான குஷான் மகே­ஷிடம் அது தொடர்பில் வின­வி­யுள்ளார்.

மகனும் தனக்கு தெரி­யாது எனவும் அம்மா 7.30 மணிக்­கெல்லாம் நித்­தி­ரைக்கு சென்­று­விட்­ட­தா­கவும் தானும் அதன் போது நித்­தி­ரைக்குச் சென்­று­விட்­ட­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து வீடு முழு­வதும் தேடிய கண­வ­ருக்கு மனை­வியின் படுக்கை, சமை­ய­லறைப் பகுதிகளிலும் பின் பக்க முற்­றத்­திலும் இரத்தக் கறைகள் இருப்­பதை அவ­தா­னிக்க முடிந்­துள்­ள­துடன் சமை­ய­லறைக் கதவும் திறந்து கிடந்­துள்­ளது.

இத­னை­ய­டுத்து கல­வ­ர­ம­டைந்த கணவர் தனது மனை­வியை காண­வில்லை எனவும் வீட்டில் இரத்தக் கறைகள் இருப்­ப­தா­கவும் கொட்­ட­கெ­தன விஷேட அதி­ர­டிப்­படை முகாமில் முறைப்­பா­ட­ளித்­து­விட்டு அது தொடர்பில் கஹ­வத்தை பொலி­ஸா­ருக்கும் முறைப்­பாட்­டினை வழங்­கி­யுள்ளார்.

இந் நிலையில் தான் ஞாயி­றன்று சந்­திரா மல்­காந்­தியை தேடும் படலம் ஆரம்­ப­மா­னது.

இதற்­கி­டையில் கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பகு­தியில் நீரோடை ஒன்­றி­லி­ருந்து சந்­திரா சட­ல­மாக ஒன்­றரை நாட்­களின் பின்னர் மீட்­கப்­பட்டார்.

வீட்­டி­லி­ருந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் உள்ள நீரோடை ஒன்­றுக்குள் இருந்தே இவ்­வாறு அவர் சட­ல­மாக மீட்­கப்­பட்­டி­ருந்தார்.

இது தொடர்பில் விஷேட விசா­ரணை ஒன்­றினை சப்­ர­க­முவ மாகா­ணத்­துக்கு பொறுப்­பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் டயஸ் மற்றும் இரத்­தி­ன­புரி சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பாலித்த பெர்­ணான்டோ ஆகி­யோரின் நேரடி கட்­டுப்­பாட்டில் இரத்­தி­ன­புரி உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழும் கஹ­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­கா­ரியின் கீழும் விசா­ர­ணைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அதே­போன்று கொழும்பு குற்­றத்­த­டுப்புப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரொஷான் டீ சில்­வாவின் மேற்­பார்­வையில் அதன் பிரதிப் பணிப்­பாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் வெதசிங்கவின் ஆலோ­ச­னையில் ……….

உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் கீழ் ஒரு பொலிஸ் குழுவும் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் குற்றப் புல­னாய்வுப்  பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் ரண­வீ­ரவின் மேற்­பார்­வையின் கீழ் ஒரு குழுவும் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தன.

இந்த விசா­ர­ணை­களில் பல்­வேறு கோணங்­களில் தமது அவ­தா­னத்­தினைச் செலுத்­தினர். இறந்த பெண்ணின் கணவர், கண­வரின் சகோ­தரர், மகன்மார் மற்றும் அய­ல­வர்கள் என பல­ரிடம் சுமார் 40 இற்கும் மேற்­பட்ட வாக்கு மூலங்­களை பொலிஸார் பதிவு செய்து கொண்­டனர்.

இந்தக் கொலை இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் இரவு மரண வீடொன்­றுக்கு கணவர் சென்­றி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­படும் நிலை­யி­லேயே அது தொடர்பில் விரி­வாக விசா­ரித்து மேலும் பல விட­யங்­களை உள்­ள­டக்கி வாக்கு மூலம் பெறப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் கண­வ­ருக்கு மேல­தி­க­மாக கண­வரின் இளைய சகோ­தரன், சம்­ப­வத்தின் போது வீட்டில் இருந்த இரண்­டா­வது மகன், அய­ல­வர்கள் என 40 பேரின் வாக்கு மூலங்­க­ளையும் இந்த பொலிஸ் குழுக்கள் விரி­வாக ஆராய்ந்தன.

இத­னி­டையே இரத்­தி­ன­புரி வைத்­தி­ய­சா­லையில் சந்­தி­ராவின் சடலம் மீதான பிரேத பரி­சோ­த­னைகள் இடம்­பெற்­றன.

பிரேத பரி­சோ­த­னையில் அவ­ரது உடலில் 6 பலத்த வெட்­டுக்­கா­யங்கள் இருப்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அத்­துடன் தலையில் கூரிய ஆயு­தத்தால் தாக்­கி­யதில் மண்டை ஓடு சுக்கு நூறா­னதில் மரணம் சம்­ப­வித்­த­தாக தெரி­ய­வந்­தது.

இத­னை­ய­டுத்து அந்த பெண்ணை படு­கொலை செய்த சந்­தேக நபர்கள் கைவிரல் ரேகை, டீ.என்.ஏ. மூலக் கூறு­களை அழிக்கும் வித­மாக அவ­ரது சட­லத்தை கொட்­ட­கெ­தன நீரோ­டைக்குள் வீசி­யி­ருக்க வேண்டும் என சந்­தே­கித்த பொலிஸார் அது தொடர்­பிலும் விரி­வான விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இந் நிலையில் தான் பொலிஸ் தலை­மை­ய­கத்தின் குற்றப் புல­னாய்வுப் பிரிவும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவும் இணைந்து விஞ்­ஞான ரீதி­யி­லான தட­யங்­களை சேக­ரிக்­க­லா­யினர்.

இதன் பல­னாக குறித்த பெண்ணின் இரண்­டா­வது மகனின் வாக்­கு­மூலம் தட­யங்கள் சில­வற்­றுடன் ஒத்துப் போகாமல் இருப்­பதை பொலிஸார் அவ­தா­னித்­தனர்.

இந் நிலையில் தொடர்ந்தும் அது தொடர்பில் அவ­தானம் செலுத்­திய பொலிஸார் மகன் மீது ஒரு கண் வைத்த நிலை­யி­லேயே விசா­ர­ணை­களைத் தொடர்ந்­தனர்.

இந் நிலையில் நேற்று முன் தினம் வியா­ழக்­கி­ழமை இறந்த பெண்ணின் இறுதிக் கிரி­யைகள் இடம்­பெற்ற நிலையில் அதனைத் தொடர்ந்து அவ­ரது மகன் குஷான் மகேஷை பொலிஸார் கைது செய்­தனர்.

ஏனெனில் அவ­னது தாய் கொலை­யுண்ட போது வீட்டில் இருந்த ஒரே நபர் குஷான் மட்­டுமே. அத்­துடன் அவன் பொலி­ஸா­ருக்கு வழங்­கிய வாக்­கு­மூ­லத்தில் தானும் தாயும் இரவு 7.30 மணிக்­கெல்லாம் விளக்கு­களை அணைத்­து­விட்டு வெவ்­வேறு அறை­களில் நித்­தி­ரைக்கு சென்­று­விட்­ட­தாக தெரிவித்திருந்தார்.

எனினும் பொலிஸார் சேக­ரித்த அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களில் அந்த வாக்கு மூலம் முரண்பட்டது.

ஏனெனில் குஷான் இரவு 10.30 மணி­யையும் தாண்டி ஒரு தொலை­பேசி இலக்­கத்­துக்கு காதல் குறுஞ் செய்­தி­களைப் பரி­மா­றி­யுள்­ளதை பொலிஸார் கண்­ட­றிந்­தனர்.

அந்த இலக்­கத்தைத் தேடிய போது அது அவ­னது காதலி என்­பதைப் பொலிஸார் உறு­திப்­ப­டுத்திக் கொண்­டனர். இத­னை­ய­டுத்து மேலும் சில விட­யங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இறுதிக் கிரியைகள் முடிந்­ததும் குஷானை பொலிஸார் கைது செய்­தனர்.

பொலிஸார் அவனை கைது செய்து விசா­ரித்த போது அந்த கொலை­யினை தானே செய்­த­தாக அவன் ஒப்­புதல் வாக்கு மூலம் அளித்­துள்ளான்.

சந்­தேக நபர் பொலி­ஸா­ருக்கு அளித்­துள்ள வாக்கு மூலத்தின் படி, குஷான் ஒருநாள் தனது காதலியுடன் பாதையில் கதைத்துக் கொண்­டி­ருந்த போது அவ­ரது மூத்த சகோ­தரர் கண்டு அது தொடர்பில் பெற்­றோ­ரிடம் கூறி­யுள்ளார்.

இந் நிலையில் அந்த தொடர்­புக்கு வீட்டில் எதிர்ப்பு தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந் நிலையில் தொழில்­நுட்ப பயிற்சி ஒன்­றினை முன்­னெ­டுத்து வந்த நிலையில் கடந்த ஏப்ரல் மூன்றாம் திக­தியே குஷான் வீட்­டுக்கு வந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து நான்காம் திகதி குறித்த தினம் எதிர்­வரும் தமிழ் சிங்­கள புத்­தாண்­டுக்­காக தனது காத­லிக்கு புத்­தாடை வாங்­கிக்­கொ­டுக்க தனது தாயிடம் 1500 ரூபா வரையில் கோரி­யுள்ளார். ஆனாலும் அதனை வழங்க தாய் மறுத்­துள்ளார்.

இந் நிலையில் நான்காம் திகதி இரவு 10 மணி­ய­ளவில் இரு­வ­ருக்கும் இடையே சிறு வாக்கு வாதம் ஏற்பட்­டுள்­ளது.

சம­ய­ல­றையில் வைத்து ஏற்­பட்ட இந்த வாக்­கு­வாதம் முற்­றவே குஷான் தனது தாயை பல­மாக தள்­ளி­விட்­டுள்ளான். அப்­போது சுவரில் சென்று மோதுண்ட சந்­திரா அங்­கேயே மயக்­க­முற்று வீழ்ந்­துள்ளார்.

இந் நிலையில் அம்மா தான் தள்­ளி­விட்­டதில் இறந்­து­விட்டார் என எண்­ணிய குஷான் சமை­ய­லறை கத்தி ஒன்றை எடுத்து தாயின் தலைப்­ப­கு­தியை கடு­மை­யாக வெட்­டி­யுள்ளான்.

இத­னை­ய­டுத்து சமை­ய­ல­றையில் இருந்து சட­லத்தை படுக்கை அறை வரையும் எடுத்துச் சென்று படுக்­கை­யிலும் இரத்­தத்தை ஓட­விட்­டுள்­ள­துடன் வீடெங்கும் இரத்தக் கறையை ஓட விட்டு தாயின் உடை­களை களைந்து தலையில் பொலித்தீன் பை ஒன்­றினை கட்டி கொட்­ட­கெ­தன நீரோ­டைக்குள் கொண்டு போய் போட்­டுள்ளான்.

அத்­துடன் கொலைக்கு பயன்­ப­டுத்­திய கத்­தி­யையும் அவன் அந்த ஓடைக்­குள்­ளேயே வீசி­யுள்ளான். வழியில் இரத்தம் சொட்­டாமல் இருக்­கவே தாயின் தலைப்­ப­கு­தியை பொலித்­தீ­னினால் சுற்­றி­யுள்ள குஷான், தனது இரத்தம் தோய்ந்த உடை­க­ளையும் ஒளித்­துள்­ள­துடன் எதுவும் அறி­யா­த­வனைப் போல் நடித்­துள்ளான்.

அவன் அவ்­வாறு செய்ய  கடந்த காலங்­களில் கஹ­வத்­தையை உலுக்­கிய கொலைகள் அவ­னுக்கு சிந்த­னையைக் கொடுத்­த­தா­கவும் கொலை குற்­றத்தில் இருந்து தப்­பவே தாம் அவ்­வாறு செய்­த­தா­கவும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரி­விடம் குஷான் வாக்­கு­மூலம் அளித்­துள்ளான்.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இது­வரை அப்­பி­ர­தே­சத்தில் 17 பெண்கள் இரவு வேளைகளில் மர்­ம­மான முறையில் கொல்­லப்­பட்­டுள்ள  நிலையில்   மீண்டும் அது போன்ற ஒரு சூழல் உரு­வா­கி­றதா எனவும் அதன் தொடரில் இது 18 ஆவது சம்­ப­வ­மாக இருக்­குமோ எனவும் பிர­தேச மக்கள் அச்­ச­ம­டைந்­தி­ருந்­தனர்.

இந் நிலையில் குறித்த பெண்ணின் சடலம் மீட்­கப்­பட்ட கொட்­ட­கெ­தன நீரோ­டையில் கடந்த காலங்களிலும் பெண்­ணொ­ருவர் கொலை செய்­யப்­பட்டு போடப்­பட்­டி­ருந்தார்.

கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பிர­தே­சத்தில் முத­லா­வது வயோ­திப மாதுவின் கொலை 2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்­பெற்­றது.

கொட்­ட­கெ­தன, ஓபாத தோட்­டத்தை சேர்ந்த 56 வய­து­டைய வயோ­திப மாது ஒருவர் அப்­போது கொல்­லப்­பட்­டி­ருந்தார்.

இதனைத் தொடர்ந்து கொட்­ட­கெ­தன பிர­தே­சத்தின் வரா­பிட்­டிய, நில துர, திவுல் வெல உள்­ளிட்ட பல இடங்­க­ளிலும் தொடர்ச்­சி­யாக இவ்­வாறு வயோ­திப மாதுக்கள் கொலை செய்­யப்­பட்­டனர்.

2012 ஆம் ஆண்டு வரை இவ்­வாறு 9 மாதுக்கள் கொலை செய்­யப்­பட்­டனர். தனித்­த­னி­யாக கொலை செய்­யப்­பட்­டி­ருந்த இந்த மாதுக்­களின் சட­லங்கள் வீட்­டி­லி­ருந்து வெகு தொலைவில் உள்ள இடங்­களில் இருந்து மீட்­கப்­பட்­டி­ருந்­தன.

இவ்­வா­றா­ன­தொரு நிலையில் 2012 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் இப்­பி­ர­தே­சத்தில் முதல் இரட்டைக் கொலை பதி­வா­னது.

கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பிர­தே­சத்தைச் சேர்ந்த நில்­மினி என்ற 52 வயது மாதுவும் 19 வய­து­டைய அவ­ரது மகள் சத்­து­ரங்­க­னியும் அப்­போது கொலை செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இதனைத் தொடர்ந்து அதே ஆண்டு மே மாதம் 31 ஆம் திகதி தயா­வதி என்ற 61 வயது பெண்ணும் அவருடன் இருந்த 51 வய­து­டைய திரு­ம­ண­மா­காத தில­க­வதி என்ற பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்­தனர். இவர்­க­ளது உடல் தீயில் கரு­கி­யி­ருந்­தது.

இத­னை­ய­டுத்தே கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பிர­தே­சத்­துக்கு பொலிஸ் காவ­லரண் ஒன்று அமைக்­கப்­பட்­டது. பொலிஸ் விஷேட அதி­ர­டிப்­ப­டை­யி­னரின் ஒத்­து­ழைப்­புடன் இந்த காவ­லரண் அமைக்­கப்­பட்­டது.

எனினும் அதே ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி 65 வய­து­டைய பிரே­ம­லதா, அவ­ரது மகள் 35 வய­து­டைய புஷ்­ப­கு­மாரி ஆகியோர் எரித்துக் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். இந் நிலையில் மொத்த உயி­ரி­ழப்­புக்கள் 15 ஆக அப்­போது அதி­க­ரித்­தி­ருந்­தன.

இத­னை­ய­டுத்து பலரும் கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பகு­தியை விட்டு வெளி­யேற ஆரம்­பித்­தனர். இந் நிலையில் கஹ­வத்தை கொட்­ட­கெ­தன பிர­தே­சத்­துக்கு முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குண­வர்த்­தன 2012 ஜூலை மாதம் பொறுப்­பாக அமர்த்­தப்­பட்டார்.

இத­னை­ய­டுத்து கஹ­வத்தை கொட்­ட­கெ­தன கொலைகள் ஓர­ளவு ஓய்ந்­தாலும் மீண்டும் அதே ஆண்டு ஒக்­டோபர் மாதம் 31 ஆம் திகதி வரா­பிட்­டிய, பன்­சலை வீதியில் 66 வய­து­டைய சந்­தி­ரா­வதி என்ற மாது கொலை செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் அப்பிரதேசத்தில் கொலை சம்பவங்கள் பதிவாகவில்லை.

எனினும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி ஓபான வத்தை பிரதேசத்தில் தமிழ் யுவதி ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்தார். இதனையடுத்தே மொத்த பெண்களின் கொலைகள் அப்பிரதேசத்தில் 17 ஆக அதிகரித்தது.

இந் நிலையில் இறுதியாக 39 வயதுடைய பெண் சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை அப்பிரதேசத்தில் மர்மமாக உயிரிழந்த பெண்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற மரணங்களில் ஒன்றைத் தவிர மற்றையவை அனைத்தையும் விசாரித்து குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடும் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் இந்த சம்பவத்திலும் மிக விரைவாகவே சந்தேக நபரை கைது செய்ய முடிந்ததாக சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பில் சந்தேக நபரான 18 வயதுடைய குஷானுக்கு எதிராக நேற்று பெல்மதுளை நீதிவானிடம் 48 மணி நேர தடுப்புக் காவல் உத்தரவு பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை நடத்துகின்றது.

எம்.எப்.எம்.பஸீர்

Share.
Leave A Reply

Exit mobile version