சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். அமைப்பு தங்களிடம் பிடிபட்ட கிட்டத்தட்ட1,878 பேரை சுட்டுக் கொன்று மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

இதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள். பிரிட்டனைச் சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமிய சட்டப்படி அரசு அமைக்கும் நோக்கத்துடன் ஐ.எஸ். அமைப்பு சிரியாவில் அரசுக்கு எதிராக போரில் ஈடுபட்டது ஈடுபட்டு வருகிறது.

ஈராக் மற்றும் சிரியாவில் பெரும்பகுதியை இந்த அமைப்பு கைப்பற்றியுள்ளது.

ஐ.எஸ். சிரியா, ஈராக் இராணுவத்தினர் மற்றும் குர்திஸ் படையினருடன் போரிட்டு வருகின்றனர்.

பிற நாடுகளின் படையும் ஐ.எஸ்.ஸுக்கு எதிராகக் களமிறங்கியுள்ளன.  ஏன் ஈரான் கூட ஐ.எஸ்.ஸுக்கு எதிராகத்தான் பேசிக்கொண்டிருக்கிறது.

ஐ.எஸ். அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இஸ்லாமிய சட்டத்தை மீறியவர்களுக்கு, பொது இடத்தில் தலையைத் துண்டித்துக் கொலை செய்தல், கல்லால் அடித்துக் கொலை செய்தல் போன்ற தண்டனைகளை ஏராளமானவர்களுக்கு வழங்கியுள்ளது.

மேலும், தங்களிடம் பிடிபட்ட எதிரி இராணுவத்தினர், சமூக ஆர்வலர்கள், செய்தியாளர்கள் ஆகியோரை சுட்டுக் கொலை செய்யும் வீடியோவையும் ஐ.எஸ். அமைப்பு வெளியிட்டுள்ளது.

தங்களிடம் பிடிபட்டவர்கள், எதிரிப்படையைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிப்பவர்களை கும்ப லாக சுட்டுக் கொலை செய்யும் புகைப்படத்தையும் ஐ.எஸ். வெளி யிட்டுள்ளது.

இதையெல்லாம் செய்வதற்கே ஒரு துணிவு வேண்டும். அதையும் படம் பிடித்து வெளியிடுகிறது என்றால் அவர்களின் மன நிலை நிச்சயமாக சாதாரண மக்களுடையதை ஒத்ததாக இருக்க வாய்ப்பே இல்லை.

அரசின் தாக்குதல்களால் வெறுத்துப் போன பொது மக்களில் பலரும் ஐ.எஸ்.அமைப்பில் சேர்கிறார்கள். ‘’என் அண்ணனைக் கொன்ற இந்த அரசை சும்மா விடமாட்டேன்’’ என்பதுபோல தனிப்பட்ட பகைமை காரணங்களை தனக்கெதிராக ஏராளமாக உருவாக்கி வருகிறது சிரியா அரசு.

அமெரிக்காவில் கொலாரடோ பகுதியின் டென்வர் நகரில் சமீபத்தில் நடந்துள்ள ஒரு நிகழ்ச்சி அதிர்ச்சிகரமானது.

15லிருந்து 17 வயது கொண்ட மூன்று மாணவி கள் அமெரிக்காவிலிருந்து சிரியாவுக்குச் செல்ல முடிவெடுத்து கொலாரடோ விமான நிலையத்தை அடைந்துள்ளனர்.

பள்ளியிலிருந்து இவர்கள் வீடு திரும்பாததால் காவல்துறையிடம் பெற்றோர்கள் புகார் செய்தனர். தேடுதலில் அவர் களைக் கண்டுபிடித்த காவல் துறையினர் ‘’எதற்காக வீட்டுக்குத் தெரியாமல் கிளம்பினீர்கள்? எங்கே செல்வதாகத் திட்டம்?’’ என்று கேட்க, சிறிதும் தயக்கமில்லாமல் வந்த விடை இது. ‘’சிரியாவிலுள்ள ஐ.எஸ்.இயக்கத்தில் சேர்ந்து சிரியாவின் ஆட்சியை கீழே இறக்கச் செல்கிறோம்’’.

காவல்துறை அவர்களை மீண்டும் வீட்டுக்கு அனுப்பியது வேறு விஷயம்.

சிரியாவின் ஆட்சியை ஓரள வுக்கு மேல் ஐ.நா.வால் கண்டிக்க முடியவில்லை.

காரணம் பொதுச் சபையில் சிரியாவுக்கு எதிராகக் கொண்டுவரும் தீர்மானங்களை சீனாவும், ரஷ்யாவும் வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்து விடுகின்றன.

ஈரானும், லெபனானும் சிரியா அரசை ஆதரிக்கின்றன.

ஆக சிரியா – ஐ.எஸ். போர் என்பது உண்மையில் பலவித மறைமுகப் போர்களின் திரைபோலவே காட்சியளிக்கிறது.

அமெரிக்காவும், ரஷ்யாவும் கூட இதன் மூலம் தங்கள் பலத்தை சோதனை செய்து கொள்கின்றன.

அமெரிக்கா எதற்காக சிரியா வின் உள்நாட்டுப் போரில் தலையிட வேண்டும்?

‘’வழக்கம்போல அது தன் பெரியண்ணன் தோரணையை காட்டுகிறது’’ என்று மட்டுமே முடிவெடுக்க முடியாது.

வேறு பல காரணங்களும் உள்ளன. சிரியா அரசுக்கு எதிரான ஐ.எஸ்., அல் கொய்தாவின் மேலும் தீவிரப்பட்ட வடிவம்.

ஐ.எஸ்.சிரியாவில் தன் ஆட்சியை நிறுவினால் அது அல் கொய்தாவின் செயல்களில் நிச்சயம் ஈடுபடும். ஏற்கனவே அமெரிக்காவின் முன்னாள் அதிபர் புஷ் ‘ஈரான், வடகொரியா, ஈராக் ஆகியவை தீயவற்றின் அச்சாணிகள்’ என்று கருத்து கூறியிருக்கிறார்.

சிரியாவில் ஐ.எஸ். ஜெயித்தாலும், தோற்றாலும் ஒரு காலத்தில் அமெரிக்கா அங்கு போரில் ஈடுபட வேண்டியிருக்கும்.

இது அமெரிக்கப் பொருளாதாரத்தைப் பெரிதும் பாதிக்கும்.

ஜேர்மனி, அமெரிக்கா, பிரிட்டன், வளைகுடா நாடுகள், பெல்ஜியம், கனடா, ஸ்பெயின் இப்படிப் பல நாடுகள் சிரியாவுட னான தூதரக உறவைத் துண்டித் துக் கொண்டுள்ளன.

43-bashar-al-assad-afpgtஅஸாத்

2004 ஜூன் 3 அன்று நடைபெற்ற அதிபர் தேர்தலில் அஸாத் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இதை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

காரணம் அரசின் வசம் முழுமையாக இருந்த பகுதிகளில் மட்டுமே தேர்தல் நடைபெற்றது. தவிர எதிர்க்கட்சிகள் தேர்தலைப் புறக்கணித்தன. இந்த நிலையில் அஸாத் வென்றது செல்லாது என்றார் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா.

உண்மைதான் என்று ஒத்துக் கொண்டன பல மேலை நாடுகள்.

ஒரு காலத்தில் ஸ்பெயின், ஜோர்டான், பாலஸ்தீனம் போன்றவற்றையெல்லாம் உள்ளடக்கிக் கொண்டிருந்த சிரியா இப்போது தன் சிறிய பரப்பே துண்டாடப்படுவதை நினைத்து தவிக்கிறது.

வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ள ஐ.எஸ். அமைப்பினர் சிரியா வீதியில் ஸ்கட் ஏவுகணையை ஊர்வலமாக கொண்டு சென்ற புகைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈராக்கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றையும் இணைத்து தனி இஸ்லாமிய நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும்.

இதுமட்டுமல்லாமல் எதிர்காலத்தில் பக்கத்து நாடான லெபனான், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டான், துருக்கி ஆகிய நாடுகளையும் ஒன்றிணைத்து பெரிய அளவிலான இஸ்லாமிய தேசத்தை உருவாக்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

அரபு நாடுகள் பலவற்றில் சுன்னி முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.

அவர்களும் இவர்களுக்கு பண உதவி செய்து வருகிறார்கள். இந்த படையின் தலைவராக அபூபக்கர் அல் பகாதி செயல்பட்டு வருகிறார்.

வடக்கு சிரியாவில் ஈராக் எல்லையோரம் பல பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஐ.எஸ். அமைப்பினர் அப்பகுதி முழுவதையும் ஒன்றிணைத்து ஐ.எஸ்.ஸின் ஆட்சிக்கு உட்பட்ட தனிநாடாக அறிவித்துள்ளனர்.

இந்த தேசத்தை உலகின் எந்த நாடும் அங்கீகரிக்கவில்லை.

இந்த அமைப்பினர் தங்களது அரசாட்சிக்கு உட்பட்ட பகுதி என்று அறிவித்துள்ள சிரியாவின் ரக்கா நகரின் வீதி வழியே ஒரு இராணுவ வாகனம் ‘ஸ்கட்’ ரக ஏவுகணையை ஏற்றிச் செல்லும் புகைப்படமும் ஐ.எஸ். இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

அந்த ’ஸ்கட்’ ஏவுகணை இயங்கும் நிலையில் உள்ளதா? அல்லது, பழுதடைந்த பழைய ஏவுகணையா? என்பதை புகைப்படத்தை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் உலக நாடுகளுக்கு தங்களது ஆயுத பலத்தை காட்டி ஐ.எஸ்.அமைப்பு மிரட்ட நினைப்பதாக சர்வதேச அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

தொடரும்..

எஸ்.ஜே.பிரசாத்

 

 

 

Share.
Leave A Reply

Exit mobile version