சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்துள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.
இன்று காலை சிறிலங்கா நாடாளுமன்றம் கூடியதும், 19வது திருத்தம் மீதான இரண்டாவது வாசிப்பு இடம்பெற்றது.

அதையடுத்து, நாடாளுமன்றத்தை நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இந்தநிலையில், மகிந்த ராஜபக்சவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் குரல் எழுப்பினர்.

அவர்கள் நாடாளுமன்றத்தின் மையத்துக்குச் சென்று தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

ஆணைக்குழுவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில், நிமால் சிறிபால டி சில்வா, அனுர பிரியதர்சன யாப்பா, வாசுதேவ நாணயக்கார, தினேஸ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, நாமல் ராஜபக்ச, மகிந்தானந்த அளுத்கமகே, பந்துல குணவர்த்தன உள்ளிட்டோரும் அடங்கியிருந்தனர்.

parliament-protest-1

சுமார் ஒரு மணிநேரம் வரை போராட்டம் நடத்திய இவர்கள் பின்னர் எழுந்து சென்றனர்.

இதற்கிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ள போதிலும், அவர் எதிர்வரும் 24ம் நாள் ஆணைக்குழு முன்பாக முன்னிலையாக மாட்டார் என்று அவரது ஊடகப் பேச்சாளர் ரொகான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.

அன்றைய தினம், மகிந்த ராஜபக்சவின் சட்டவாளர்கள் ஆணைக்குழு முன் தோன்றி, அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து கேள்வி எழுப்பவுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version