பலஸ்தீனத்தின் காஸா பிராந்தியத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்ரிக் போத்தல்கள் மூலம் படகு ஒன்றை நிர்மாணித்துள்ளனர்.
காஸா பிராந்தியமானது 2006 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலினால் தரை மற்றும் கடலால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
எகிப்துடனான எல்லையிலுள்ள ரஃபா மட்டுமே இஸ்ரேலிய படையினரின் முற்றுகையில் இல்லாத காஸா பகுதியாகும்.
மேற்குப் புறமாகவுள்ள மத்திய தரைக்கடலில் 6 கடல் மைல் தூரம் மாத்திரம் பலஸ்தீனியர்கள் செல்ல முடியும்.
அதன்பின் இஸ்ரேலிய கடற்படையினரால் அவர்கள் மறிக்கப்படுவர்.
பாஹா ஒபெயத் (25) அவரின் சகோதரர்களில் ஒருவரான சட்டத்தரணி மொமஹட் ஒபெய்த் (25) மேலும் 3 நண்பர்களுடன் இணைந்து இப்படகை நிர்மாணித்தனர்.
குப்பைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட 1000 இற்கும் அதிகமான பிளாஸ்ரிக் போத்தல்கள் இதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
உலோகத்தின் மூலம் படகிற்கான சட்டத்தை உருவாக்கி அதை அடிப்படையாக கொண்டு போத்தல்கள் பிணைக்கப்பட்டுள்ளன.
இப்படகை நிர்மாணிப்பதற்கு சுமார் 3 மாதகாலம் தேவைப்பட்டதாக பாஹா ஒபெய்த் கூறுகிறார்.
“தினமும் 6 மணித்தியாலங்கள் மாத்திரமே எமக்கு மின்சாரம் கிடைக்கிறது.
அதனால் இப்படகை செய்வதற்கு சிறிது நீண்டகாலம் தேவைப்பட்டது.
இதற்காக சுமார் 500 டொலர்களை நாம் செலவிட்டுள்ளோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
13 அடி நீளமான இப்படகை பார்வையிடுவதற்கு காஸா பிராந்திய மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.