முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கடந்த நாட்களில் பாராளுமன்றில் பகலிரவாக ஆர்ப்பாட்டம் செய்தார்கள். இதுவும் நல்லாட்சியின் வெளிப்பாடே ஆகும்.
மஹிந்த ராஜபக்ஷ மாத்திரம் ஜனாதிபதியாக இருந்திருந்தால் பாராமன்றத்தில் ஆர்ப்பாட்டம் செய்த தினத்தன்று இரவில் மின்சாரத்தை துண்டித்து குளிரூட்டியை தடைசெய்திருப்பார்.
நாங்கள் அவ்வாறு செய்திருந்தால் அவர்களால் எவ்வாறு ஆர்ப்பாட்டம் செய்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
இதுவே நல்லாட்சியின் வெளிப்பாடாகும். மேலும் அவர்களின் ஜனநாயக உரிமை என அமைச்சரவையின் பேச்சாளர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
100 நாள் வேலைத் திட்டம்
100 நாள் வேலைத்திட்டம் இன்றுடன் முடிவடைகின்றது. இந்த வேலைத் திட்டத்தில் குறிப்பிட்ட விடயங்களை நிறைவேற்றியுள்ளோம். சில விடயங்கள் கட்டாயம் நிறைவேற்றப்படும்.
அதாவது தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அமெரிக்க ஜனாதிபதி கூட இவ்வாறு நிறைவேற்றியது இல்லை என ஜோன் கெரி புகழ்ந்துரைத்திருந்தார்.
எனவே இதனை யாரும் குறை கூற முடியாது. இந்த 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பில் எனக்கு மிகவும் சந்தோசம்.
நிறைவேற்று அதிகாரம்
மஹிந்த ராஜபக்ஷ 2005 ஆம் ஆண்டுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் எம்மோடு இணைந்து வீதியில் ஆர்ப்பாட்டம் செய்தார்.
ஆனால் யுத்தம் நிறைவுக்கு வந்ததன் பின்னர் அவருடைய மனநிலை மாற்றமடைந்துள்ளது. ஒரு விடயத்தை முன்னெடுக்கும் போது அதற்கு எதிரப்புகள் எழுவது வழக்கம்.
எனினும் எமது 100 நாள் வேலைத்திட்டத்தின் பிரகாரம் நிறைவேற்று அதிகாரத்தை கட்டாயம் இல்லாதொழிப்போம்.
புதிய தேர்தல் முறை
புதிய தேர்தல் முறைப் பற்றி கதைத்துகொண்டேதான் இருக்கின்றோம். இதனை முதலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.
இதற்கமைய அமைச்சரவையும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. தேர்தல் முறையில் மாத்திரமே மாற்றம் உள்ளது. ஆனால் மக்கள் பிரதிநிதிதுவத்தில் பெரிதாக மாற்றம் ஏற்படாது. சகல இனத்தவரின் பிரதிநிதிகளையும் உள்வாங்கும் வகையிலேயே இந்த தேர்தல் முறை அமையும்.
மக்கள் விருப்பம்
புதிய தேர்தல் முறை தொடர்பில் மக்கள் விருப்பம் கட்டாயம் கேட்டறியப்படும். இதற்கான கால அவகாசமும் வழங்கப்படும்.