வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ள விடயம் இந்திய அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

´ரைம்ஸ் ஒவ் இந்தியா´ இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்தியப் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில்,

பிரேமானந்தா ஆசிரமத்தில் இடம்பெற்ற பாலியல் வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில், பிரேமானந்தாவுடன் தண்டனை விதிக்கப்பட்ட கமலானந்தா, பாலன் எனப்படும் பாலேந்திரன், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் ஆகிய மூவரையுமே விடுதலை செய்யுமாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கமலானந்தாவும், ஏனைய இருவரும், இந்த வழக்கில் போலியாக சிக்க வைக்கப்பட்டுள்ளதாகவும், பிரேமானந்தா ஆசிரமத்தையும், அதன் சொத்துக்களையும் பராமரிக்க வேண்டியுள்ளதால், அதனைப் பொறுப்பெடுக்க வேறு யாரும் இல்லாத நிலையில், அப்பாவிகளான இவர்களை விடுதலை செய்யுமாறும், இந்தியப் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் உச்சநீதிமன்ற முன்னாள் நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரன், இந்திய நீதியமைப்பை கேள்விக்குள்ளாக்கியிருப்பதாக இந்திய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளதுடன், குற்றவாளிகளை அப்பாவிகள் என்று தெரிவித்திருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

கொலை மற்றும் பாலியல் வழக்குகளில் சிக்கிய பிரேமானந்தா, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு, அவருக்கும் ஏனைய மூவருக்கும் 1997ம் ஆண்டு புதுக்காட்டை நீதிமன்றத்தினால் இரட்டை ஆயுள் தண்டனையும், 66.4 இலட்சம் ரூபா தண்டமும் விதிக்கப்பட்டது.

திருச்சியை அடுத்த பாத்திமா நகரில் உள்ள ஆசிரமத்தில் 13 பெண்களை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியது, மற்றும் ரவி என்பவரைக் கொலை செய்து ஆசிரமத்துக்குள் புதைத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் இவர்கள் மீது சுமத்தப்பட்டன.

எனினும், 2011ம் ஆண்டு பிரேமானந்தா பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டு, கூடலூர் சிறையில் இறந்து விட்டார்.

இவரது உதவியாளர்களான கமலானந்தா, பாலன், சதீஸ் ஆகிய மூவரும், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பிரேமானந்தா ஆசிரமத்தில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டதாக கூறப்படும், 13 பெண்களுமே இலங்கைத் தமிழர்களாவர்.

பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணிடம் நடத்தப்பட்ட மரபணுப் பரிசோதனையில் பிரேமானந்தா குற்றவாளியென நிரூபிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

பிரேம்குமார் என்ற இயற்பெயர் கொண்ட பிரேமானந்தா இலங்கையில் மாத்தளை மாவட்டத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேமானந்தா ஆசிரம வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுக்கவில்லை என்று வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

விக்னேஸ்வரனின் பெயரைக் கெடுக்க முயன்ற இந்திய ஆங்கில நாளிதழ் – உண்மை நிலை (இரண்டாம் இணைப்பு)
cm-Wigneswaran-300x200

ரைம்ஸ் ஒவ் இந்தியா நாளிதழில், வெளியானது போல, இந்திய நீதித்துறையில் தலையீடு செய்யும் வகையில், வடக்கு மாகாண முதலமைச்சர் கடிதம் எழுதவில்லை என்றும், தெரிவிக்கப்படுகிறது.

முதலமைச்சரின் மீது வீண்பழி சுமத்தும் வகையில், ரைம்ஸ் ஒவ் இந்தியா விசமத்தனமாக செய்தி வெளியிட்டுள்ளதாக வடக்கு மாகாணசபை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட, கமலானந்தாவின் மகன் சிவதி, கடிதம் மூலமும், மின்னஞ்சல் மூலமும், இந்தியப் பிரதமருக்கு அனுப்புவதற்கான கடிதம் ஒன்றை வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பியிருந்தார்.

அதில், கமலானந்தாவின் மனைவி, மற்றும் ஒற்றை ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டவர்களான, பாலன் எனப்படும் பாலேந்திராவின் சகோதரர், சதீஸ் எனப்படும் சதீஸ்குமார் என்பவரின் தாயார், நந்தா எனப்படும் நந்தகுமாரின் மனைவி ஆகியோர் ஒப்பமிட்டுள்ளனர்.

அந்தக் கடித்ததை, அனுப்பிய சிவதி மற்றும் அவரது தாயார் ஆகியோர், வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில், குறிப்பிட்ட கடிதத்தை, தங்களின் கவனத்துக்கு அனுப்பி வைப்பதாக, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார்.

எனினும், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை விடுதலை செய்யுமாறு கோரவோ, ஆசிரமம் தொடர்பாகவோ குறிப்பிடவோ இல்லை என்றும் தெரியவருகிறது.

இது தொடர்பாக, முதலமைச்சர் மூலம் இந்தியப் பிரதமருக்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் மற்றும் முதலமைச்சரின் குறிப்புரைக் கடிதம் என்பனவற்றின் பிரதியும், வெளியிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version