“லிவிங் டூ கெதர்” (living together) இது காதல் திருமணமும் அல்ல, நிச்சயித்த திருமணமும் அல்ல. இரு மனம் ஒத்துபோகும் வரை சேர்ந்து வாழ்வது, வாழ்க்கை கசக்க ஆரம்பிக்கிறது என உணரும் தருவாயிலேயே பிரிந்துவிடலாம் என்று “டாட்டா” சொல்லிவிடுவது என்னும் 21ஆம் நூற்றாண்டின் கலாச்சாரம் தான் இந்த “லிவிங் டூ கெதர்”
பெற்றோர்கள், “அய்யோ அபச்சாரம், அபச்சாரம்..” என்று கூறுகையில். பிள்ளைகளோ,” ஆஹா, இதுதானே வாழ்வின் சாராம்சம்” என்று மகிழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். அந்த காலத்து சாஸ்திர, சம்பிரதாயங்கள் தான், இந்த காலத்து இளைஞர்களை “திருமணம் ஒரு பழைய பஞ்சாங்கம்” என்று சொல்ல வைக்கிறது.
இனி, இன்றைய இளைஞர்களுக்குள் இருக்கும் ஓ காதல் கண்மணியின் எஃபெக்ட்டிற்கு என்ன காரணங்கள் என்று பார்க்கலாம்…
சுதந்திரம்
ஒருவரை ஒருவர் சார்ந்து இல்லாமல், சுதந்திரமாக இருக்க முடியும் என்று லிவிங் டூ கெதராக வாழ்பவர்கள் நினைகின்றனர்.
அவரவர் வழியில் பயணம் திருமணம் செய்துக் கொண்டால், யாரேனும் ஒருவர் அவரது பயணத்தில் இருந்து வெளிவந்து, மற்றொருவரின் பயணத்தில் சேர்ந்து வாழ வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால், லிவிங் டூ கெதரில் அப்படி இருக்க தேவை இல்லை.
லட்சியம்
ஒவ்வொருவருக்கும் ஒரு கனவு, லட்சியம் இருக்கும். திருமணம் என்ற ஒன்று, பெரும்பாலும் ஆண்களின் லட்சியத்திற்கு மட்டும் தான் வழிவகுக்கிறது. பெண்கள், ஆண்களை சார்ந்து இருந்து அவர்களது லட்சியத்தை தொலைத்துவிடுவதாக கருதுகின்றனர். லிவிங் டூ கெதர் உறவில் இந்த பிரச்சனைகளுக்கே இடமில்லை.
விட்டுக்கொடுத்தல்
திருமணத்திற்கு பிறகு, கண்டிப்பாக ஒவ்வொரு நாளும், ஏதேனும் ஒரு காரணத்திற்காகவோ, அல்லது விஷயதிற்காகவோ யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்து தான் போக வேண்டியிருக்கும். ஆனால், லிவிங் டூ கெதரில், பிடிக்கும் வரை ஒத்துபோய் வாழ்ந்தால் போதும் என்ற நிலை என்பதால் விட்டுக்கொடுத்து போக வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகின்றனர், தற்போதைய இளைஞர்கள்.
வலி
கண்டிப்பாக தங்களுக்கு பிடித்த விஷயங்களையோ, இலட்சியங்களையோ விட்டுக்கொடுத்து, இழந்து நிற்கும் போது வலி ஏற்படும். இந்த வலி லிவிங் டூ கெதரில் ஏற்பட வாய்ப்புகள் இல்லை.
சண்டைகள்
சண்டை, வலி, விட்டுக்கொடுத்தல் போன்ற எந்த பிரச்சனைகளும் இல்லாததினால், சண்டைகள் எழுவதற்கு வாய்ப்புகள் குறைவு.
நிம்மதி
அவரவர் வாழ்கையை அவரவருக்கு பிடித்தது போல, அவர்களால் முடிந்த உதவியை செய்துக் கொண்டு வாழ்வது, திருமணங்களை விட அதிக நிம்மதி தருகிறதாம்.
முடிவு
என்னதான் லிவிங் டூ கெதர் பிரச்சனையற்றது, அதிக நிம்மதி, மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினாலும். நினைவுகள் என்பது நெஞ்சின்னுள் பசுமரத்தாணி போல நிலைத்து இருக்கும். வாழ்ந்தது போதும் என்று பிரிந்த அடுத்த நொடியில் இருந்து அது நெஞ்சை குடைய ஆரம்பிக்கும்.
என்னதான் இருந்தாலும் நிரந்தரமான துணை என்பது ஆண், பெண் இருபாலருக்கும் தேவையான ஒன்று ஆகும்!