சிகிரியா சுவரோவிய சுவரில் எழுதினார் என்ற குற்றச் சாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டிருந்த சித்தாண்டி யுவதி சின்னத்தம்பி உதயசிறி, இன்று வியாழக்கிழமை காலை விடுதலை செய்யப்பட்டார்.
அவர், சிறைச்சாலையிலிருந்து வெளியேறிய அவர், சிறை கதவுக்கு வெளியே நின்றியிருந்த சிறைச்சாலை அதிகாரியின் காலை குனிந்து வணங்கிவிட்டு வெளியே சற்று தூரம் நடக்கையில் அவருடைய அம்மா, அக்கா மற்றும் அண்ணா ஆகிய மூவரும் ஓடோடி சென்று உதயசிறியை கட்டியணைந்துகொண்டனர்.
மூவரின் கட்டியணைப்பில் கண்ணீர் மல்கிய உதயசிறி, அந்த சுவரில் தெரியாமல் எழுதிவிட்டேன். என்னை மன்னியுங்கள். இனிமேல், இவ்வாறான தவறுகளை விடவே மாட்டேன். இவ்வாறான தவற்றை இனியாரும் செய்யமாட்டார்கள்.
எனக்கு மன்னிப்பு வழங்கிய ஜனாதிபதிக்கு நன்றி கூறுகின்றேன். என் விடுதலைக்காக உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி கூறிக்கொள்கின்றேன் என்றும் அவர் கூறினார்.
சிகிரியா குன்றின் புராதன பளிங்குச் சுவரில் தனது பெயரை எழுதி, அதனைச் சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவித்து வந்த, மட்டக்களப்பு சித்தாண்டியைச் சேர்ந்த, சின்னத்தம்பி உதயசிறி என்ற இளம் பெண் இன்று விடுவிக்கப்படவுள்ளார்.
தம்புள்ள நீதிமன்றத்தினால் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அனுராதபுர சிறைச்சாலையில், தண்டனையை அனுபவித்து வந்த, உதயசிறி, சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பின் கீழ், இன்று காலை 8 மணியளவில் விடுவிக்கப்படவுள்ளதாக அனுராதபுர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கான உத்தரவு, நீதி அமைச்சின் செயலரினால், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஊடாக, அனுராதபுர சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவரது தண்டனையை எதிர்த்து கண்டி மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மேல்முறையீட்டு மனுவை அவரது சட்டத்தரணிகள் நேற்று விலக்கிக் கொண்டதையடுத்தே, இன்று உதய சிறி விடுவிக்கப்படவுள்ளார்.
முன்னதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கடந்த மாதம், இவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டிருந்தார்.
எனினும், மேல்முறையீட்டு மனு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் போது சிறிலங்கா அதிபர் பொதுமன்னிப்பு அளித்தாலும், விடுதலை செய்ய முடியாது என்பதால், பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட பின்னரும் உதயசிறி 31 நாட்களாக சிறைவாசம் அனுபவிக்க நேரிட்டுள்ளது.