ஜனாதிபதித் தேர்தலின் பின் நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தையும் அதனூடு கிடைத்த சிறிய ஜனநாயக இடைவெளியையும் பல தரப்புக்களும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டன.
ஆனால், வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் மக்களின் அரசியல் தலைமை முன்னோக்கிப் பயணிப்பதற்குப் பதிலாக, மீண்டும் மீண்டும் சிக்கலான களத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதோ என்று அஞ்ச வேண்டியிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நிலைப்பாடு என்ன, எதிர்காலத் திட்டங்கள் என்ன, மேற்குலகின் ஆதரவு பெற்ற மைத்திரி அரசோடு முட்டி மோதி இனப்பிரச்சினைக்கான தீர்வினை நோக்கி பயணிப்பதற்கான முனைப்புக்கள் என்ன? என்பது தொடர்பில் பெரும் குழப்பம் நீடிக்கின்றது.
தவிர்க்க முடியாமல் தொடர்ந்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமது அரசியல் தலைமையாக முன்மொழிந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இது எரிச்சலை ஊட்டியிருக்கின்றது.
எதிர்கால நலன்களை கருத்திற் கொண்டு தெளிவான திட்டங்களை வகுத்து பெரும் பாய்ச்சல் நிகழ்த்த வேண்டிய கால கட்டத்தில் தமிழர் அரசியல் இருக்கின்றது.
ஆனால், அப்படியான புரிதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளிப்படுத்தவில்லை. மாறாக, உள்ளக முரண்பாடுகள் மற்றும் அதிகாரப் போட்டிகளின் சிக்கல்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருங்கிணைக்கப்பட்ட காலம் தொட்டு, அதற்குள் அதிகாரப் போட்டி இருப்பது உண்மைதான்.
ஆனால், அந்தப் போட்டியின் அளவு விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் நாளுக்கு நாள் அதிகரித்து வந்திருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய நீட்சி என்பது, தமிழ் மக்களின் வாக்குகளுக்காக மட்டுமே என்கிற நிலையை அடைந்துவிட்டது. கொள்கை, கோட்பாடுகள் என்கிற எந்தவொரு புள்ளியிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் பெருமளவுக்கு இணைந்து கொள்ளவில்லை.
தமிழ்த் தேசியம் எனும் புள்ளியை தமது இணக்கத்துக்கான இடமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் காட்டிக் கொண்டாலும் உண்மை வேறு மாதிரியானது.
ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னரான காலம், தமிழர் அரசியலில் கத்திமுனைப் பயணத்தை ஒத்தது. எந்தவொரு தருணத்திலும் கவனத்தை சிதறவிட முடியாதது.
கொஞ்சம் அசைந்தாலும் பலமான காயங்களைப் பெற்றுக் கொள்ள வேண்டி வரும். ஆனால். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் பலர் அதீத விட்டுக்கொடுப்பு எனும் நிலையின் பக்கம் நகர்ந்து பெரும் தூக்கத்துக்கு தயாராகிவிட்டார்கள்.
அவர்களின் தூக்கம், தமிழ் மக்களின் தலை விதியை இன்னும் இன்னும் மோசமாக எழுதிவிடும் வாய்ப்புள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் மென்போக்குள்ள தலைமைகள், கடும்போக்குள்ள தலைமைகள் என்கிற இரு பெரும் பிரிவுகள் இருப்பது போல வெளிப்படுத்தப்பட்டாலும், பெரும்பாலாக அதீத மென்போக்குள்ள தலைமைகள் மற்றும் மென்போக்குள்ள தலைமைகள் என்கிற இரு பிரிவுகளே உண்டு.
கடும்போக்குள்ள தலைமை என்று கொள்ளக் கூடிய சிலர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளியிலேயே இருக்கின்றார்கள். அல்லது. அப்படி அவர்கள் தங்களை உருமாற்றிக் காட்டுகின்றனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதீத மென்போக்குள்ள தமிழ்த் தலைமைகளாக தங்களை தென்னிலங்கையிடம் வெளிப்படுத்தி வருகின்றனர்.
சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சி சாராத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தங்களை கடும்போக்குள்ள தமிழ்த் தலைமைகள் போல காட்டிக் கொண்டாலும் மென்போக்குள்ள தலைமைகளாகவே இருக்கின்றனர்.
இங்கு, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா எந்த இடத்தில் இருக்கின்றார் என்பதை தெரிவு செய்வதில் பெரும் சிக்கல் இருக்கின்றது. ஏனெனில், அவர், கொழும்பில் ஒருநிலையையும் யாழ்ப்பாணத்தில் இன்னொரு நிலையையும் எடுக்கின்றார்.
ஆனால், வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அதீத மென்போக்குள்ள தமிழ்த் தலைமை எனும் நிலையிலிருந்து கடும்போக்கு தமிழ்த் தலைமை எனும் நிலையை நோக்கி பயணிக்கின்றார். ஆம், அப்படித்தான் கொள்ள வேண்டியிருக்கின்றது.
வட மாகாண சபைத் தேர்தலின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால், அதிகமான அழுத்தங்களுக்கு மத்தியில் சி.வி.விக்னேஸ்வரன் முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழியப்பட்ட போது இருந்த நிலைமை தற்போது இல்லை.
இரா.சம்பந்தனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான இடைவெளி இப்பொது பெருமளவு அதிகரித்து விட்டது. அது, வெளிப்படையாகவே பல இடங்களிலும் வெளிப்பட்டிருக்கின்றது.
அதுவும் கூட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முரண்பாடுகளை இன்னும் மோசமாக்கி விட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒட்டுமொத்த அதிகாரமும் தன்னுள்ளேயே இருக்க வேண்டும் என்று இரா.சம்பந்தன் கருதுகின்றார். ஆனால், அதனை விரும்பாத குழுவினர்,
சி.வி.விக்னேஸ்வரனுக்கு பின்னால் இருந்து உந்துதல்களை வழங்குகின்றனர். அந்த உந்துதல்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி குறித்த கனவை சி.வி.விக்னேஸ்வரனுக்குள்ளும் வளர்த்து விட்டிருக்கின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சிக்குள்ளும் அதிகாரப் போட்டிகள் பலமாக எழுந்துள்ளன. தற்போதைய தலைவரான மாவை சேனாதிராஜா தன்னுடைய இடத்தை குறிவைத்து பலரும் நகர்ந்து வருகின்றார்கள் என்ற அச்ச உணர்வோடு இருக்கின்றார்.
அவரினால், அழுத்தங்களின்றி தீர்க்கமான முடிவுகளை எடுக்க முடியவில்லை. அத்தோடு, அவரை மீறிச் செயற்படுகின்றவர்கள் மீதும் எந்தவொரு பணிப்புரைகளையும் விட முடியவில்லை. மாறாக, தலைமைப் பதவியைப் பாதுகாப்பது எப்படி என்பது பற்றி மட்டுமே சிந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டார்.
இதனால், அதிகார அனுசரணையோடு தலையெடுப்பவர்கள் மாவை சேனாதிராஜாவைத் தாண்டி செயலாற்றுகின்றனர். அது, பல நேரங்களில் வேண்டாத நிகழ்வுகளையும் அரங்கேற்றி விடுகின்றது.
இதனிடையே, தந்தை செல்வாவின் 38ஆவது சிரார்த்த தினத்தையொட்டி தமிழரசுக் கட்சியின் கொழும்புக்கிளை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க நினைவுப் பேருரை ஆற்றும் அளவுக்கு நிலைமைகள் தலைகீழாகவும் மாறியிருக்கின்றன.
நல்லிணக்கத்துக்கான சமிஞ்ஞைகளை தமிழர் தரப்பு(ம்) வெளிப்படுத்த வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது தான்.
ஆனால், பௌத்த தேசிய மேலாதிக்க வாதத்தின் குறியீடாக தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதும் செயற்பட்ட சந்திரிகா குமாரதுங்கவை அழைந்து வந்து,
தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடிய தந்தை செல்வாவின் நினைவுப் பேருரை நிகழ்த்தக் கோருபவர்களின் எண்ணப்பாடு எப்படிப்பட்டது?
அதீத மென்போக்குள்ள தமிழ்த் தலைமைகளாக தென்னிலங்கையிடம் தங்களை முன்னிறுத்த முனையும் சிலரினால் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்று கொள்ளப்பட்டாலும், சந்திரிகா குமாரதுங்கவை நினைவுப் பேருரை ஆற்றுமாறு அழைப்பதற்கு முன்னால், தமிழ் மக்கள் பற்றியும் அவர்கள் கொஞ்சமாகவேனும் யோசித்திருக்க வேண்டும்.
ஏன், பண்டா- செல்வா ஒப்பந்தம் மற்றும் அதனை பௌத்த தேசியவாதத்தின் கோரிக்கைகளுக்கு அமைய கிழித்த சம்பவத்தையும் ஞாபகப்படுத்திப் பார்த்திருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட நிலையில், சந்திரிகா குமாரதுங்க தன்னுடைய கையில் இரத்தக்கறைகள் இல்லை என்பது மாதிரியான முன்வைப்போடு இனநல்லிணக்கம், சகோதரத்துவம் பற்றியெல்லாம் தமிழ் மக்களுக்கு வகுப்பெடுத்துவிட்டுச் சென்றிருக்கின்றார்.
அதனைவிட, முக்கியமானது அனைத்தையும் மறந்து ஒன்றிணைவோம் என்கிற அழைப்பையும் விடுத்திருக்கின்றார்.
நல்லிணக்கத்துக்கான செய்தி என்பது எம்முடைய முதுகெலும்பை அடகு வைத்துவிட்டு விடுக்கப்பட வேண்டியதில்லை என்பதை, சந்திரிகா குமாரதுங்கவை நினைவுப் பேருரை ஆற்றுவதற்கு அழைத்தவர்கள் எதிர்காலத்திலாவது கருத்திற் கொள்ள வேண்டும்.
மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதில் தமிழ் மக்களுக்கு கணிசமான பங்குண்டு.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிலவேளை, மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்காமல் விட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக வாக்களித்திருப்பார்கள்.
அது, இயல்பாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவானதாக மாறியிருக்கும். அப்படிப்பட்ட நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு செய்தியைப் புரிந்து கொள்ள வேண்டும். தமக்குத் தேவையான அரசியல் முடிவுகளை எடுக்கும் அளவுக்க தமிழ் மக்கள் தயாராகிவிட்டார்கள்.
அவ்வாறான நிலையில் தமிழ் மக்களின் மனங்களையும் எதிர்பார்ப்புக்களையும் புரிந்து கொண்டு செயலாற்றுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீட்சிக்கு உதவும். அதுதான். தமிழர் அரசியலுக்கு தற்போதைக்கு அவசியமானது.
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பேசுவது புதிதாக அமைந்த மைத்திரி அரசுக்கு நெருடல்களை ஏற்படுத்திவிடும் என்கிற நினைப்பில் தவிர்க்க நினைப்பதும் அதீத விட்டுக்கொடுத்தல்களைச் செய்வதும் என்றைக்குமே சரியான அரசியல் நகர்வாக இருக்காது.
ஏற்கெனவே, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் செல்லப்பிள்ளையாக மைத்திரி அரசு மாறியிருக்கின்றது.
அப்படிப்பட்ட நிலையில், இராஜதந்திர வெற்றிகளை தமிழ்த் தரப்பு பெற வேண்டியுள்ளது. அதற்கு, முறையான திட்டமிடல்கள் அவசியம். மாறாக, தென்னிலங்கைக்கான நற்செய்தி என்கிற பெயரில் எமது அரசியல் உரிமைகள் பற்றி பேசாமல் தவிர்த்துக் கொண்டிருப்பது மிகவும் மோசமான நகர்வு.
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜயத்தின் போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முன்வைத்த விடயங்கள் அதீத மென்போக்குள்ளவையாக இருந்தன. இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழ் மக்களின் இயல்பு வாழ்க்கை என்பன பற்றி எந்தவொரு தருணத்திலும் விட்டுக்கொடுப்புக்களை செய்வது சரியல்ல.
ஏனெனில், என்னவாக இருந்தாலும் பௌத்த தேசிய மேலாதிக்க வாதமே இன்னமும் இலங்கையை ஆண்டு கொண்டிருக்கின்றது.
தமிழ் மக்கள் கடந்த காலத்தில் இழந்தவை அதிகம். அந்த இழப்புக்கள் அரசியல் உரிமைகளுக்காகவே நிகழ்ந்திருக்கின்றன. அப்படிப்பட்ட நிலையில், அரசியல் உரிமைகளை எந்தவொரு தருணத்திலும் விட்டுக்கொடுப்பாக கொள்ளக் கூடாது.
அதனை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களும், ஏனைய தமிழ்த் தலைமைகளும் கருத்திற் கொள்ள வேண்டும். எமது அரசியல் என்பது எமது உரிமை, அதிகாரங்கள் எனும் கோரிக்கைகளினால் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது.
அவற்றைப் புறந்தள்ளிவிட்டு செய்யப்படும், அரசியலினால் யாருக்கும் நன்மை கிடையாது. அது, அடிமை சாசனத்தை எழுதிக் கொடுப்பதற்கு ஒப்பானது. ஆகவே, விழித்துக் கொண்டு செயலாற்ற தமிழ்த் தலைமைகள் துணிய வேண்டும்!
-புரு்ஜோத்தமன் தங்கமயில்-