தூத்துக்குடி: திருமணம் செய்துகொள்ள மணப்பெண் மறுத்துவிட்டதால் உறவுக்கார பெண்ணுக்கு மாப்பிள்ளை தாலி கட்டினார். தூத்துக்குடி போல்பேட்டையை சேர்ந்தவர் ஞானராஜ்.

இவரது மகன் சுரேஷ்(29). இவர் தூத்துக்குடியில் ஆண்கள் அழகு நிலையம் நடத்துகிறார். இவருக்கும் சென்னையை சேர்ந்த 26 வயது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. தூத்துக்குடி இன்னாசியார்புரத்தில் உள்ள தேவாலயத்தில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது.

மாப்பிள்ளை மற்றும் பெண் வீட்டாரின் உறவினர்கள் அங்கு திரண்டனர். திருமண சடங்குகள் நடந்த நிலையில் தேவாலயத்தில் திருமணத்தை நடத்தி வைக்கும் பாதிரியார் மணப்பெண்ணிடம் ‘’ சுரேஷை திருமணம் செய்து கொள்ள சம்மதமா’’ என கேட்டார்.

அதற்கு மணப்பெண், ‘’ இந்த திருமணத்தில் தனக்கு விருப்பம் இல்லை’’ என்றார். இதனால் மாப்பிள்ளை வீட்டார் மற்றும் திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து திருமணம் நின்றது.

இருவீட்டாரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மணமகன் வீட்டார் அங்கிருந்து புறப்பட்டு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருந்த மண்டபத்திற்கு வந்து விட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில் தடைபட்ட திருமணத்தை குறித்த நாளில் நடத்தி முடிக்க மணமகன் குடும்பத்தினர் நினைத்தனர். நட்டாத்தியில் வசிக்கும் சுரேஷின் உறவுக்கார பெண் கவிதாவை அவருக்கு மணமுடிக்க ஏற்பாடு செய்தனர்.

இது தொடர்பாக அவரது பெற்றோரிடம் கேட்டபோது அவர்கள் திருமணத்துக்கு சம்மதித்தனர். இதையடுத்து கவிதா மணப்பெண் அலங்காரம் செய்யப்பட்டு மணமேடைக்கு அழைத்துவரப்பட்டார்.

உறவினர்கள் முன்னிலையில் மாலை மற்றும் மோதிரம் மாற்றிக்கொண்டனர். இதைத்தொடர்ந்து சுரேஷ், கவிதா திருமணம் நடந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version