மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி போலீஸ் சரகத்திற்குட்டது குமாரபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் வேலு (வயது 65). இவரது மனைவி பேச்சியம்மாள் (58). இவர்களது மகள் சுகந்தி (35), மகன் கண்ணன் (27), பி.காம் பட்டதாரி.

கண்ணனுக்கு கடந்த 2013–ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த தங்கவேலு–முருகேஸ்வரி தம்பதியரின் மகள் பாண்டீசுவரி (25) என்பவருடன் திருமணம் நடைபெற்றது.

ஆனால் 1½ மாதத்திலேயே கணவன்–மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் பாண்டீசுவரி தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அதன் பின்னர் கண்ணனும் சென்னையில் உள்ள ஓட்டலுக்கு வேலைக்கு சென்றுவிட்டார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் ஊருக்கு வந்தார்.

அப்போது முன்னாள் ராணுவ வீரர் சுப்பையா தலைமையில் பெரியகட்டளை என்ற ஊரில் வைத்து கண்ணன் மற்றும் பாண்டீசுவரி குடும்பத்தினரை அழைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

மனைவிக்கு ஒரு குறிப்பிட்ட தொகை இழப்பீடு தருவதாகவும், அவரை பிரித்து விடுமாறும் கண்ணன் கூறினார். ஆனால் பாண்டீசுவரி கணவனுடன் வாழவேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்.

இதனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. அப்போது பாண்டீசுவரி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டலும் விடுத்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு கண்ணன் தனது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள் ஆகியோருடன் வீட்டில் இருந்தார்.

அவர்களுடன் கணவரை பிரிந்த வேலுவின் மகள் சுகந்தி, அவரது மகள் சங்கீதா (17), மகன்கள் சஞ்சித் (13), சின்னு என்ற வினீத் (12) என மொத்தம் 7 பேர் அந்த வீட்டில் இருந்தனர்.

இவர்கள் அனைவரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது இன்று அதிகாலை 2.30 மணியளவில் பாண்டீசுவரி, அவரது தாய் முருகேஸ்வரி, சகோதரன் ராஜபாண்டி ஆகியோர் அங்கு வந்துள்ளனர்.

அவர்கள் கண்ணன் வீட்டின் கதவை வெளிப்புறமாக பூட்டிவிட்டு மண்எண்ணெய் மற்றும் பெட்ரோலை வீட்டுக்குள் ஊற்றியுள்ளனர்.

மேலும் வீட்டின் மேலே ஏறி ஓடுகளை பிரித்து அதன் வழியாகவும் பெட்ரோல், மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து உள்ளனர்.

வீட்டுக்குள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தவர்கள் என்ன நடந்தது என்று அறிவதற்குள் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.

அவர்கள் அய்யோ… அம்மா… என கூக்குரல் எழுப்பி அலறினர். இதனை கேட்டு அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர்.

ஆனால் அதற்குள் வீட்டுக்குள் இருந்த கண்ணன், அவரது தந்தை வேலு, தாய் பேச்சியம்மாள், சகோதரி சுகந்தி, அவரது மகள் சங்கீதா, மகன் சஞ்சீத் ஆகிய 6 பேரும் கரிக்கட்டையாகி இறந்தனர்.

சின்னு என்ற வினீத் காயத்துடன் மீட்கப்பட்டு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டான். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவனும் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டுக்கு தீ வைத்த பாண்டீசுவரி சேடப்பட்டி போலீசில் சரண் அடைந்தார். அப்போது கணவன் வாழ மறுத்ததால் ஆத்திரத்தில் அவரது வீட்டுக்கு தீ வைத்ததாக தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயேந்திரபிதாரியும் சம்பவ இடம் சென்று பார்வையிட்டார்.

கரிக்கட்டையாக கிடந்த 6 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் முருகேஸ்வரி, அவரது மகன் ராஜபாண்டி ஆகியோரையும் கைது செய்தனர்

Share.
Leave A Reply

Exit mobile version