தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பில் புதிய அரசுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ள நம்பிக்கை அடிப்படையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நம்பிக்கையற்றவை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணித் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் எழுத்து மூலமாக சிங்களத் தலைவர்களுடன் செய்துகொள்ளப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்களுக்கு என்ன நடந்தன என்ற வரலாறு எமக்குத் தெரியும்.

இந்த நிலையில் எழுதப்படாத ஒப்பந்தங்களை தமிழ்க் கூட்டமைப்பு நம்புவதில் பயனில்லை எனவும் அவர் கூறினார்.

தமிழ் மக்களுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசுடன் கொள்கையளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செய்துள்ளது.

அதன் அடிப்படையிலேயே அரசுக்கு ஆதரவளித்து வருகிறது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும்போதே கஜேந்திரகுமார் இவ்வாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் யுரோவில் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில் சுமந்திரனின் கருத்துக்குப் பதிலளித்து அவர் மேலும் தெரிவிக்கும்போது, நாம் சுய ஆட்சி கோரி போராடி வருவதால் தமிழர்கள் மீது சிங்களவர்கள் மத்தியில் பயம் உண்டு.

இந்த பயத்தை விடுதலைப்புலிகள் ஏற்படுத்தவில்லை. ஆரம்ப காலம் தொட்டே சிங்கள மக்கள் தமிழர்கள் மீது பயம் கொண்டவர்களாக இருந்து வந்துள்ளனர். இதனை மகாவம்சமும் சுட்டிக்காட்டுகின்றது.

சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் அவர்களுக்கென வேறு ஒரு நாடு இல்லை. ஆனால் தமிழர்கள் அவ்வாறு இல்லை அவர்கள் இந்தியா உட்பட உலகின் பெரும்பாலான நாடுகளில் உள்ளனர்.

ஆசிய பிராந்தியத்திற்குள் உள்ள மிகச்சிறிய இனமாக உள்ள தம்மை தமிழ் இனம் விழுங்கிவிடும் என்ற பயம் உள்ளது. ஆகையால் தமிழர் தேசம் என்பதனை இல்லாமல் செய்து இலங்கை தீவு முழுவதையும் தம்முடையதாக்க வேண்டும் என்ற ஆசை சிங்களவர்களுக்கு உண்டு.

இந்நிலையிலேயே எமது தேசத்தை அவர்கள் திட்டமிட்டு பலவழிகளில் இல்லாமல் செய்யும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.

இவ்வாறு எமது தேசத்தை அழிக்கும் முயற்சிக்கு தீர்வாக தமிழர்கள் ஒரு தேசம் ஒன்றினை பெறுவதாகத்தான் இருக்கும். இதனையே வட்டுக்கோட்டை தீர்மானத்தில் தந்தை செல்வாவும் தமிழீழ கோட்பாடு ஒன்றினை முன்வைத்து தமிழ்த்தேசத்தை காப்பாற்ற முயன்றார்.

இந்தியா எமக்கான அதிகாரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு அன்று எமக்கு ஆதரவளித்தாலும் தமிழீழ கோரிக்கைக்கு ஆதரவளிக்கவில்லை.

திம்பு மாநாட்டிலும் தனிநாட்டு கோரிக்கைக்கு பதிலாக தீர்வு பற்றிய யோசனை ஒன்றை முன்வையுங்கள் என்றே இந்தியாவினால் தமிழ் தரப்பிடம் கூறப்பட்டது.

தமிழ் இனத்தின் கடந்தகால சரித்திரங்களை பார்க்கும் போது தேசம் அல்லது தேசியம் அடிப்படையில் தான் தமிழர் அரசியல் வளர்ந்து வந்துள்ளது.

2001 ஆம் ஆண்டு தமிழ் கட்சிகளின் கூட்டமைப்பு என இருந்த கட்சி தேசிய கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என பெயர் மாற்றப்பட்டு அதிலேயே தேர்தலிலும் போட்டியிட்டியிருந்தோம். இந்த நிலைப்பாட்டையே தொடர்ந்தும் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.

13 ஆம் திருத்தத்தையே தரமறுக்கும் இந்த அரசு தேசியத்தை தருமா? என கேள்வி எழுப்பமுடியும். தேசியம் என்பது அரசியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. மக்கள் கூட்டமொன்று தனித்துவமாக வாழ்வதை அடையாளப்படுத்துவது நாடு என்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இலங்கை என்பது பல தேசியங்கள் கொண்ட நாடாக அங்கீகரிக்கப்படல் வேண்டும்.

ஆனால் சிங்கள இனம் தாம் இலங்கை முழுவதும் ஒரு தேசம் எனவும் நாங்கள்  தமிழர்கள் சிறுபான்மை என்றே கூறுகின்றது. இலங்கையில் உள்ள இனப்பிரச்சினைக்கு சர்வதேச பரிமாணமும் ஒன்று உள்ளது. இலங்கையை மையப்படுத்தி கடும் பூகோள அரசியல் போட்டி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்திய இலங்கை ஒப்பந்தம் சீனாவை இலங்கையிலிருந்து  வெளியேற்றவே கொண்டுவரப்பட்டது. இவ் ஒப்பந்தத்திலேயே பதின்மூன்றாம் திருத்தமும் தோன்றியது.

இந்த இலங்கை  இந்திய ஒப்பந்தத்தை நாம் நிராகரித்து இருந்தால் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கும் என்ற நிலை காணப்பட்டது. இவ்வாறான அடுத்தவரின் நலனுக்காக உருவாக்கப்பட்ட பதின்மூன்றாவது திருத்தத்தையே நாம் இன்று பேசிக்கொண்டிருக்கிறோம்.

மூன்றாம் உலக மகாயுத்தம் தோன்றினால் அதில் இலங்கைக்கும் ஒரு பங்கு உண்டு என்ற சூழ்நிலையில் தான் தமிழ் மக்கள் இந்த நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இந்த போட்டியில் நடைபெற்று முடிந்த யுத்தத்தின் வெற்றியை இருதரப்புமே கொண்டாடியது. இருதரப்பிலும் என்ன வேறுபாடு? பாமர மக்கள் தம்மை அழித்தவனை பழிவாங்கும் உணர்விலேயே இருப்பர்.

அதனை அரசியல் தலைவர்கள் தான் தெளிவுபடுத்தி ஒரு ராஜபக்ஷவை வீழ்த்தி இன்னொரு ராஜபக்ஷவை கொண்டுவருவதில் அர்த்தமில்லை. என கூறியிருக்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழர்களுக்கான தீர்வு என்ன? மகிந்த மீண்டும் ஜனாதிபதியாகியிருந்தால் பூகோள அரசியல் போட்டி அழுத்தம் காரணமாக தமிழ் மக்களுக்கு சிலவேளை சமஷ்டி கிடைத்திருக்கக் கூடிய வாய்ப்பும் இருக்கலாம்.
ஆனால் வெறும் வாய்மூல வாக்குறுதியை மட்டும் நம்பி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவளித்தது.

வடக்கு, கிழக்கு ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டாது எனவும் இரண்டு வருடங்களுக்கு தான் பயங்கரவாத தடை சட்டம் எனவும் முன்னர் ஆட்சியில் இருந்தவர்களால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார்.

யாழ்ப்பாணம் யுரோவில் மாநாட்டு மண்டபத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கலந்துரையாடல் (வீடியோ)

Share.
Leave A Reply

Exit mobile version