என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை. காரணம், நான் துஷாரியை நம்பித்தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன்
இனி நான் வாழ அருகதையற்றவன் தான். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் துஷாரியைக் கொலை செய்து விட்டேன்.
அன்று வாரத்தின் கடைசி நாள். நானும் துஷாரியும் சேர்ந்து பழக்கடையின் கணக்கு வழக்குகளைச் சரி பார்த்துக்கொண்டிருந்தோம். அப்போது துஷாரி காரணமே இல்லாமல் என் மீது கோபப்பட்டாள்.
அன்று எனக்கு உண்ண உணவு பரிமாறாமலே அவள் மட்டும் தனியாகச் சாப்பிட்டாள். பின் என்னிடம் வந்து எங்கள் இருவருக்குமிடையிலான உறவு முறிந்து விட்டது.
என்னால் கடையை தனியாகக் கொண்டு நடத்த முடியும். இனி நீ இங்கிருந்து போய்விடு. உன் மூச்சுக் காற்றுக்கூட என் மீது படக்கூடாது என்று கூறினாள்.
அதுமட்டுமின்றி, வீட்டுக்குச் சென்று உன்னுடைய துணி வகைகளையும் எடுத்துக் கொண்டு சென்று விடு என்று கூறினாள். ஆனால், என்னால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியவில்லை.
காரணம், நான் துஷாரியை நம்பித் தான் பெருமளவான பணத்தை பழக்கடை வியாபாரத்தில் முதலீடு செய்துள்ளேன். எனவே, நான் அவளுடன் இது தொடர்பாக முரண்பட ஆரம்பித்தேன்.
ஆயினும், அவள் கேட்பதாய் இல்லை. இறுதியில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டுப் பழம் வெட்டும் கத்தியை எடுத்து அவள் வயிற்றில் பல தடவைகள் விடாமல் குத்தினேன்.
வலி தாங்காமல் சில மணி நேரங்கள் அவ்விடத்திலேயே துடிதுடித்து இறந்துவிட்டாள். அதன்பின் எனக்கு அவளைப் பார்க்க மனதுக்கு கஷ்டமாகவிருந்தது.
இருப்பினும், தொடர்ந்து அவ்விடத்திலேயே நின்றுகொண்டிருந் தால் பொலிஸாரிடம் அகப்பட்டு விடுவேனோ? என்ற பயத்தில் அங்கிருந்து தப்பியோடினேன்” என்று பாணந்துறை நகரத்தில் பழக்கடை பெண் வர்த்தகர் ஒருவரைக் கொலை செய்த சந்தேக நபர் பொலிஸாருக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.
இச்சம்பவத்தில் பாணந்துறை கிரன பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான துஷாரி வாசனா விஜயரட்ண என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவருடன் இரகசிய உறவு முறைகளைப் பேணி வந்தவர் என்று கூறப்பட்ட 54 வயதான வசந்த காமினி என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து பாணந்துறை பொலிஸார் நடத்திய விசாரணைகளின் அடிப்படையில் துஷாரி வாசனா விஜயரட்ண பாணந்துறை கிரன பிரதேசத்தை சேர்ந்தவள்.
பல வருடங்களுக்கு முன் துஷாரி இராணுவத்தில் பணியாற்றி வந்த ஹேமந்தவை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து கொண்டாள்.
எனினும், அந்த வாழ்க்கை அவளுக்கு நிரந்தரமாக அமையவில்லை. இளம் வயதிலேயே துஷாரியை மூன்று பிள்ளைகளுடன் விட்டு விட்டு இவ்வுலக வாழ்விலிருந்து நிரந்தரமாகப் பிரிந்து விட்டார் ஹேமந்த.
அதன்பின் பழ வியாபாரமே அவளுடைய வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதற்கு கைகொடுத்தது. ஒரு தனி மனுஷியாய் அல்லும் பகலும் அயராது உழைத்து பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கினாள் துஷாரி.
இவர்களில் மூத்த மகள் திருமணம் முடித்த கையோடு கணவருடன் துஷாரியின் வீட்டிலேயே தங்கிவிட்டாள். எனவே இரு மகன்மார்கள், மகள், மருமகன் என்று துஷாரியின் குடும்பச் சக்கரம் நகர்ந்தது.
இந்நிலையில் தான் பாணந்துறை கிரன பிரதேசத்தில் துஷாரியின் பழக்கடையிலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவிலிருந்த மருந்துகள் விற்பனை நிலையத்தின் உரிமையாளரான வசந்த காமினியின் அறிமுகம் கிடைத்தது.
வசந்த காமினி திருமணமாகி இரு பிள்ளைகளுடன் மனைவியைச் சட்டரீதியாக விவாகரத்து செய்து தனது இரு பிள்ளைகளுக்கும், மனைவிக்கும் ஜீவனாம்சமாக மாதம் 18,000 ரூபாவைக் கொடுத்து வருபவன் ஆவான்.
ஆரம்பத்தில் தனது உடலில் காணப்பட்ட உபாதையொன்றுக்கு மருந்து வாங்குவதற்காகவே துஷாரி முதன்முதலில் வசந்தவின் மருந்து விற்பனை நிலையத்துக்கு சென்றிருக்கின்றாள்.
அதன்பின் வசந்தவின் வசீகரமான பேச் சில் வெகுவாகக் கவரப்பட்ட துஷாரி, அடிக்கடி மருந்துகளை வாங்குவதற்கு வசந்தவின் மருந்து விற்பனை நிலையத்துக்கே செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாள்.
இந்நிலையில், துணையைப் பிரிந்து வாழ்ந்த இருவருக்குமிடையில் புதியதொரு உறவு துளிர் விட ஆரம்பித்தது. துஷாரி பல மணி நேரங்களை வசந்தவின் மருந்து விற்பனை நிலையத்தில் கழிப்பதும், வசந்த பல மணி நேரங்களை துஷாரியின் பழக்கடையில் கழிப்பதுமாய் இருந்தார்கள்.
அதுமட்டுமின்றி, வசந்த துஷாரி சொல்வதற்கெல்லாம் தலையாட்டுபவனாகவிருந்ததுடன், நாளடைவில் துஷாரியே கதியென்று அவளிடம் தஞ்சமடைந்தான்.
தனது மருந்து விற்பனை நிலையத்தை விட்டு விட்டு துஷாரியுடன் இணைந்து பழக்கடையை நடத்தியது மட்டுமின்றி, வசந்த துஷாரியின் வீட்டிலேயே தங்கினான்.
அதன்பின் இருவரும் திருமணம் செய்யாமலே ஒரே வீட்டில் கணவன்,மனைவியாக வாழ்ந்து வந்தனர். இதனைத் துஷாரியின் பிள்ளைகள் மூவரும் நன்கு அறிந்தவர்களாகவிருந்தனர்.
இருவரும் அதிகாலை 4.30 மணிக்கு எழுந்து பழக்கடையை திறப்பதற்காக சென்று, இரவு 8 மணியளவில் தான் மீண்டும் வீட்டுக்கு வருவார்கள்.
இருவருக்கும் தேவையான உணவினை மகன்மார்கள் தான் வீட்டிலிருந்து கொண்டு வந்து கொடுப்பார்கள். மேலும் வசந்த தனது வங்கி கணக்கில் சேமித்து வைத்திருந்த பணத்தை கொண்டு துஷாரியின் பழக்கடையை மேலும் சிறப்பாக நடத்த உதவினான்.
இருப்பினும், நாட்கள் செல்லச் செல்ல துஷாரி காரணமே இல்லாமல் வசந்த மீது கோபத்தைக் காட்டினாள்.
எனினும், அவள் ஏதோ மனக்குழப்பத்தில் இருக்கின்றாள் போலும் என்று பல சமயங்களில் வசந்த பொறுமை காத்தான்.
எனினும் துஷாரி மாறவே இல்லை. மென்மேலும் வெறுப்பையும், கோபத்தையும் வசந்த மீது கொட் டித் தீர்த்தாள்.
போலியாக மகன்மார்கள் இருவரையும் திட்டுவது போல் ஆரம்பித்து, இறுதியில் வசந்தவை தான் நன்கு திட்டித் தீர்ப்பாள்.
இந்நிலையில், அன்று வாரத் தின் கடைசி நாள் சரியாக மே மாதம் 9ஆம் திகதி, இரவு 8.30 மணியிருக்கும்.
துஷாரியும், வசந்தவும் சேர்ந்து கடையின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக்கொண்டிருந்தார்கள். அப்போது துஷாரி வழமையை விட சற்று அதிகமாக வசந்த மீது கோபப்பட ஆரம்பித்தாள்.
அதுமட்டுமின்றி, மிகுந்த பசியுடன் இருந்த வசந்தவை பற்றி சற்றும் சிந்திக்காது தனியாக சாப்பிட்டு விட்டு கெஷியர் நாற்காலியில் அமர்ந்துகொண்டாள்.
பின் வசந்தவிடம் ”தயவுசெய்து நீ இங்கு இருந்து சென்று விடு, என்னால் பழக்கடையில் தனியாக வியாபாரம் செய்ய முடியும்.
இன்றுடன் எங்கள் இருவருக்குமிடையிலான உறவு முறிந்து விட்டது” என்றெல்லாம் கூறியுள்ளாள்.
ஆனால், வசந்தவினால் அவ்வளவு சீக்கிரமாக துஷாரியை விட்டுச் செல்ல முடியாமையினால் தொடர்ந்து துஷாரியுடன் முரண்பட்டுள்ளான்.
எனி னும், துஷாரி எதற்கும் உடன்படாமையினால், ஆத்திரத்தில் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு சன நடமாட்டம் இல்லாமையினால், பழம் வெட்டும் கத்தியை எடுத்து கெஷியர் நாற்காலியில் அமர்ந்திருந்த துஷாரியைக் குத்துவதற்குச் சென்றான்.
எனினும், துஷாரி அவனிடமிருந்து தப்பித்துக்கொள்ள பலவாறு முயற்சித்த போது வசந்தவின் கை விரல்களில் ஒன்று முதலில் துண்டிக்கப்பட்டது.
இதனால் மேலும் ஆத்திரமடைந்த வசந்த, துஷாரியை நிலத்தில் தள்ளி விட்டு கத்தியால் பல தடவைகள் ஓங்கி அவள் வயிற்றில் குத்தினான்.
அதன்பின் சில மணி நேரங்கள் துஷாரி வலியால் துடித்தவாறே இறந்து விட்டாள். எனவே, மேலும் அவ்விடத்தில் நின்றுகொண்டிருந்தால், பொலிஸாரிடம் அகப்பட்டு விடுவேனோ என்ற பயத்தில் வசந்த பழக்கடையின் முன்கதவை உட்புறமாகப் பூட்டி விட்டு,
துஷாரியின் கையடக்கத் தொலைபேசியையும் குப்பைக்கூடைக்குள் போட்டு விட்டு, கையோடு கொலைக்கு பயன்படுத்திய கத்தியையும் எடுத்துக் கொண்டு கடையின் பிற் புறக்கதவு வழியாக வெளியில் வந்து பிற்புறக் கதவையும் பூட்டிவிட்டு தன்னுடைய மருந்து விற்பனை நிலையத்தை வந்தடைந்தான்.
அதன்பின் கத்தியை மருந்துகள் விற்பனை நிலையத்தின் ஒரு மூலையில் ஒளித்து வைத்து விட்டு முதல் மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் கொடுப்பதற்கென்று சேமித்து வைத்திருந்த 18,000 ரூபாவை எடுத்துக் கொண்டு பாணந்துறை நகரத்தை வந்தடைந்தான்.
பின் அங்கிருந்து அநுராதபுரத்திலுள்ள அவனுடைய அண்ணனின் வீட்டுக்குச் சென்று நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் தன் அண்ணனிடம் கூறியுள்ளான்.
அதற்கு அவன் அண்ணன், “நீ செய்தது பெரும் தவறு. தயவுசெய்து இங்கு இருக்காமல் அநுராதபுர பொலிஸில் சென்று சரணடை. இல்லையென்றால், நானே உன்னை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைப்பேன்” என்று கூறியுள்ளான்.
இதனால் பெரும் குழப்பமடைந்த வசந்த அண்ணனுக்குத் தெரியாமல் கதிர்காமத்திலுள்ள நண்பர் ஒருவர் வீட்டுக்குச் சென்று அங்கு ஒரு நாள் தங்கியுள்ளான்.
இருப்பினும், அவனுடைய மனச்சாட்சி அங்கும் அவனை நிம்மதியாக இருக்க விடவில்லை. எனவே, பொலிஸாரிடம் சரணடைவோம் என்ற எண்ணத்தில் வசந்த மீண்டும் அநுராதபுர நகரத்துக்கு வந்த போதே பாணந்துறை பொலிஸாரிடம் கையும் களவுமாக அகப்பட்டான்.
இதன்போது துஷாரியின் பிள்ளைகள் மூவரும் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
சம்பவம் நடைபெற்ற தினமான 9ஆம் திகதி சனிக்கிழமை வெகு நேரமாகியும் வழமையாக வீட்டுக்கு வரும் தாய் துஷாரியும், வசந்தவும் வீடு திரும்பாமையினால் பிள்ளைகள் மூவரும் அவர்களுடைய கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கு அழைப்புகளை ஏற்படுத்திய போதும் இருவரின் தொலைபேசி இலக்கத்திலிருந்தும் “பாவனையாளரிடமிருந்து பதில் ஏதும் கிடைக்கவில்லை” என்ற வாடிக்கையாளர் சேவை நிலையத்தின் பதில் மட்டுமே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து துஷாரியின் மூத்த மகள் தன் கணவனை பழக்கடைக்குச் சென்று பார்த்து வருமாறு அனுப்பினாள்.
அவனும் வீ்ட்டிலிருந்து சுமார் 6 கிலோ மீற்றர் தொலைவிலுள்ள பழக்கடைக்குச் சென்று பார்த்த போது வழமைக்கு மாறாக கடையின் முன் கதவு உட்புறமாக தாழ்ப்பாளிடப்பட்டிருந்தது டன், பின் கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது.
எனவே மாமியார் எங்காவது பயணம் சென்றிருக்க வேண்டும் என்று நினைத்தவாறு வீட்டுக்கு வந்து தன் மனைவியிடம் அங்கு கண்டவற்றைக் கூறியுள்ளான்.
எனினும், அவளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே, தன் தம்பிமார்களிடம் இது பற்றித் தெரிவிக்க, அவர்கள் இருவரும் பழக்கடையை திறந்து பார்க்கும் போது தாய் இரத்த வெள்ளத்தில் உயிரற்ற நிலையில் சடல மாகக் கிடந்துள்ளாள்.
இதனைத் தொடர்ந்து பாணந்துறை குற்றப்பிரிவு பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு அநுராதபுரத்துக்கு சென்று 3 நாட்கள் தங்கியிருந்து நடத்திய தேடுதலின் பயனாகவே 13ஆம் திகதி வசந்த காமினியை கைது செய்ய முடிந்தது.
தொடர்ந்து பாணந்துறை பொலிஸாரின் விசாரணையில் வசந்த காமினி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு ஒப்புதல் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதுடன், தொடர்ந்து 28ஆம் திகதி வரை விளக்கம றியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எது எவ்வாறாயினும், எத்தகைய பிரச் சினைகளாகவிருந்தாலும் இருவரும் சமரசமாகப் பேசி ஒருவரின் நிலையை இன்னுமொருவர் புரிந்துகொண்டிருந் தால், இன்று இத்தகையதொரு நிலைமை இருவருக்கும் ஏற்பட்டிருக்காது.
-வசந்தா அருள்ரட்ணம்-