யுத்தம் முடிவுக்கு வந்து ஆறு ஆண்டுகளாகிவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்தில் பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் இடம்பெறவில்லை. அவ்வப்போது சிறு சிறு ஆர்ப்பாட்டங்களே இடம்பெற்றன.
பொதுவாக காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறும், கபளீகரம் செய்யப்பட்ட தமது பூர்வீக நிலங்களை மீள ஒப்படைக்குமாறு கூறியுமே ஆர்ப்பாட்டங்கள் நடந்தன.
ஆனால், இந்தளவு பெரிய அளவில் ஆர்ப்பாட்டமொன்று இதுவரை இடம்பெறவில்லை என்று கூறுமளவுக்கு படுகொலை செய்யப்பட்ட வித்தியாவுக்கு நீதி வேண்டி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
பாடசாலை மாணவிகள், யாழ். வர்த்தக சமூகம், புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள் என பலதரப்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதற்குப் பிரதான காரணம், புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை அனைவரின் நெஞ்சங்களையும் ஒரு கணம் புரட்டிபோட்டது என்று கூறலாம்.
இதுவரை காலமும் வெளியூர்களிலும் அயல்நாடான இந்தியாவிலும் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்றதை கேள்வியுற்று பெருமூச்சடைந்த மக்களுக்கு தமது கொல்லைப் புறத்திலேயே இவ்வாறான சம்பவமொன்று இடம்பெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடபகுதி மக்களைப் பொறுத்தமட்டில் கலாசாரம், பாரம்பரியங்களை வெகுவாகப் போற்றிப் பாதுகாத்து வருபவர்கள். அது மாத்திரமன்றி, தமது குடும்பங்கள், தமது பிள்ளைகள் மிகுந்த கட்டுகோப்புக்குள் வாழ வேண்டும் என எதிர்பார்ப்பவர்கள். இது தவறும் பட்சத்தில் அதனை தாங்கிக் கொள்ளும் மனநிலை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறது என்பதே யதார்த்தமாகும்.
வடபகுதியைச் சேர்ந்த பெற்றோர், மாணவி வித்தியாவிற்கு ஏற்பட்ட துயரத்தை தங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட துயரமாகக் கருதி வெகுவாக வெகுண்டெழுந்துள்ளனர்.
அப்பாவி மாணவி வித்தியா கடந்த 13 ஆம் திகதி பாடசாலை சென்ற நிலையில் மறுநாள் சடலமாக மீட்கப்பட்டிருந்தாள். அவளைக் கடத்தி சென்ற காமுகர்கள் அவளது கையை பின்புறமாகக் கட்டியும், கால்கள் இரண்டையும் இரு வேறு மரங்களில் பிணைத்துக் கட்டியும் வாயில் சீலையை அடைந்தும் ஒருவர்பின் ஒருவராகப் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
இந்தக் கொடூரக் காட்சியை அந்தக் காமுகர் கூட்டம் வீடியோவாகப் பதிவும் செய்துள்ளது இதனை சமூக வலைத் தளங்களில் பார்த்த மக்கள் அதிர்ச்சியால் உரைந்துபோயுள்ளனர்.குடிபோதையிலிருந்த அந்தக் காமுகர்களின் அரக்கத்தனமான பசிக்கு அந்த இளம் மொட்டு இரையாகி கசங்கி மடிந்து போயுள்ளாள்.
ஆனால், அந்தப் பிஞ்சு மலரை நசுக்கி கசக்கிய காமுகர்களோ கொஞ்சம் கூட மனிதாபிமானமற்ற நிலையில் அவளை தங்கள் வெறி தீரும் மட்டும் அனுபவித்து விட்டு வெறும் பூச்சியைப் போல் கொன்றொழித்துள்ளனர்.
அந்தக் காமுகர்களின் கையில் சிக்கி அவள் உயிர் பிரிந்தாலும் மறுகணமே அவளை படுபாதகமாகக் கொன்ற சந்தேக நபர்கள் சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். இந்தக் கொடூர காமுகர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்.
வித்தியாவுக்கு நடந்தது போன்று மற்றுமொரு சம்பவம் இனி இந்த மண்ணில் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதாலேயே வடக்கிலுள்ள பொதுமக்களும் சரி, மாணவ சமூகமும் சரி கிளர்ந்தெழுந்துள்ளனர்.
சந்தேக நபர்கள் எந்த வகையிலும் தப்பித்துவிடக் கூடாது, சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி அவர்கள் தப்பித்துவிட இடமளித்து விடக்கூடாது என்பதில் இந்த நாட்டு மக்கள் அனைவருமே ஒருமுகமாகத் தமது எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
சாதாரணமாக பட்டப்பகலில் பாடசாலைக்கு சென்றுவர ஒரு மாணவிக்குப் போதுமான பாதுகாப்பு இல்லையென்றால், ஒரு பெண் எவ்வாறு வெளியில் நடமாடுவது என்ற ஏக்கம் வடபகுதியிலுள்ள அனைவரின் மத்தியிலும் நிறைந்து போயுள்ளது.
கடந்த காலங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இடம்பெற்ற சம்பவங்களால் ஏலவே மக்கள் மிகுந்த விரக்திக்கு ஆளாகியிருந்தனர்.
இந்த நிலையிலேயே வித்தியாவின் வன்புணர்வும் படுகொலையும் அனைவரையும் கிளர்ந்தெழச் செய்துள்ளது.
பதினெட்டே வயதான வித்தியா எதிர்காலக் கனவுகளை சுமந்தவாறு பாடசாலைக்குப் புறப்பட்டு சென்ற வேளையில், இவ்வாறு ஒரு விபரீதம் நிகழும் என்று அவள் ஒரு போதும் எண்ணியிருக்க மாட்டாள். ஆனால், ஈவிரக்கமற்ற காமுகர்களின் கரங்களில் சிக்கி வெறுமனே அவலமாக அவளது ஆன்மா பிரிந்து போயுள்ளது.
இந்த வேதனையை அவள் அணுஅணுவாக அனுபவித்து இறுதியில் நிசப்தமாகிவிட்டாலும், இன்னும் அது மக்கள் மத்தியில் ஆக்ரோஷமாக ஒலித்துக் கொண்டிருப்பதையே காணக்கூடியதாக உள்ளது.
குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே அனைத்து மக்களினதும் எதிர்பார்ப்பாகும்.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து யாழ்ப்பாணத்தில் வெகு உணர்வுபூர்வமாகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அதாவது, சந்தேக நபர்கள் 9 பேரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு அதிக பட்ச தண்டனையாக மரணதண்டனை வழங்கப்பட வேண்டும். அது, இவ்வாறான படுபாதக செயல்களில் ஈடுபட எத்தனிக்கும் அனைவருக்கும் சிறந்த பாடமாக அமைய வேண்டும் என்பதே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.
எங்கே நீதி உரிய வகையில் கிடைக்காமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் வடபகுதி மாணவர்கள், இளைஞர்கள், பெற்றோர் ஆகியோர் தமது போராட்டங்களை தீவிரப்படுத்தியதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அதற்குப் பிரதான காரணம், இதில் சந்தேக நபராகக் கருதப்படும் சுவிஸ் பிரஜையொருவர் ஒருவாறு கொழும்புக்குத் தப்பிச் சென்றதும், பின்னர் அவர் வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட சம்பவமேயாகும்.
குறித்த சந்தேக நபர் கொழும்புக்கு எவ்வாறு தப்பிச் சென்றார் என்பது மக்களுக்கு எழுந்த சந்தேகமாகும் இதுவே வன்முறைகள் கட்டுக்கடங்காது செல்ல காரணமாக அமைந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நி லையில் எப்படியாவது அவரை கைது செய் யவேண்டும் என்று மக்கள் கொதித் தெழுந்தனர்.
இது தொடர்பில் அவர்கள் பொலிஸ் அதிகாரிகளிடம் நேரடியாகவும் முறைப்பாடுகளை செய்தனர். இறுதியில் மக்களின் அழுத்தம் காரணமாகவே சுவிஸ் பிரஜையான அந்த 9 ஆவது சந்தேக நபரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
எவ்வாறெனினும், வித்தியாவின் படுகொலையின் பின்னணியில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சமூகத்தில் பெரும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதை எடுத்துக் காட்டுகின்றன.
இதேவேளை, திடீரென வெடித்த வன்முறைகளும் நீதிமன்றம் மீதான தாக்குதலும் பொது மக்களை கவலையடைய செய்துள்ளன.
எங்கே வித்தியாவின் படுகொலைக்கு நீதி கிடைக்காமல் திசைமாறிச் சென்று விடுமோ என்ற ஏக்கம் குறித்த மக்களை சூழ்ந்துள்ளது. கடையடைப்பு, ஆர்ப்பாட்டப் பேரணி என்று ஆரம்பித்த சம்பவங்கள், பின்னர் வன்முறைகளாக மாறி பொலிஸாருக்கு எதிராகக் கல்வீச்சு நடத்தும் அளவுக்கு சென்றுள்ளன.
இதனையடுத்து பொலிஸாரும் பதிலுக்கு நடத்திய கண்ணீர்ப்புகைத் தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமாத்திரமன்றி, இச்சம்பவத்தை பார்வையிடச் சென்றவர்கள் உட்பட பலர் கல்வீசித் தாக்கினார்கள் என்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
வித்தியாவின் படுகொலையும் அதனை தொடர்ந்து இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களும் வடபகுதியில் அதன் இயல்பு நிலையை பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். யாழ். குடா நாட்டை சேர்ந்த அனைத்துப் பாடசாலை மாணவர்களும் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது மாத்திரமன்றி, தமது பாதுகாப்பை உறுதி செய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதுமாத்திரமன்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இதனை கண்டித்து ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்றுள்ளன.
இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், எந்தவித வேறுபாடுகளுமின்றி முஸ்லிம் மாணவ, மாணவிகளும் வீதிகளில் இறங்கி தமது எதிர்ப்பை வெளியிட்டுள்ளமையாகும்.
இந்தவிதமான ஈனச்செயல்கள் எந்தவித பாகுபாடுமின்றி நாட்டின் ஒட்டுமொத்த சமூகத்துக்கே பாதிப்பு என்ற ரீதியில் மக்கள் சக்தி ஒன்றிணைந்து தமது எதிர்ப்பை காட்டி வருவதே உண்மையானதாகும்.
அனைத்து தரப்பினர்களினதும் ஒட்டுமொத்தமான வேண்டுகோள், புங்குடுதீவு மாணவியின் படுகொலையின் சூத்திரதாரிகள் நீதியின் முன் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதனை எந்த சக்தியும் திசைதிருப்பி அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துக்கொள்ள இடமளிக்கக் கூடாது என்பதேயாகும்.
இதேவேளை, புங்குடுதீவு மாணவி மீதான பாலியல் வல்லுறவு, படுகொலை ஆகியவற்றுடன் தொடர்புடைய 9 பேருக்கும் பொதுமக்கள் முன்னிலையில் மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
மாணவியின் படுகொலை தொடர்பில் குடா நாட்டில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலையின் பின்னணியில் ஆயுதக்குழுவே செயற்பட்டு வருகின்றது.
இதனைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் அசமந்தப் போக்கையே கடைப்பிடித்து வருகின்றனர். புலிகளின் காலத்தில் இத்தகைய பாலியல் வல்லுறவுகள் இடம்பெற்றதில்லை. அப்படி நடந்திருந்தால் 24 மணித்தியாலங்களுக்குள் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கில் இடம்பெற்று வரும் பல்வேறு சம்பவங்களுக்கு ஆயுதக்குழுக்களே காரணம் என சுட்டி காட்டியிருக்கும் பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், இவற்றை முற்றாக ஒழித்துக் கட்டுவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கோரியிருக்கின்றார்.
இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இச்சம்பவம் தொடர்பில் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டிருந்ததுடன், மாணவி வித்தியாவின் படுகொலைக்கு காரணமான சூத்திரதாரிகள் எந்த வகையிலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பித்துச் செல்ல இடமளிக்கக்கூடாது.
அதேவேளை, வன்முறைகளின் பின்னணியில் இதனைத் திசைதிருப்ப முற்படும் சக்திகளுக்கு இடமளிக்கக்கூடாது என திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தது.
புங்குடுதீவு மாணவிக்கு நீதி கோரி நடைபெற்று வந்த அமைதிப் போராட்டங்களைக் களங்கப்படுத்தும் வகையில் வன்முறைகளைத் தூண்டிவிடுவதில் சில சக்திகள் ஈடுபட்டுள்ளமையை வன்மையாகக் கண்டிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.
கைது செய்யப்பட்ட ஈனச்செயல் புரிந்த கொலையாளிகளைத் தங்கள் கைகளில் தரவேண்டுமென்று வன்முறையில் ஈடுபடுவது அந்த மாணவிக்கு அத்தகைய ஈனச்செயல்களுக்கு நீதி கிடைக்காமற் போவதற்கே இச்செயல் இட்டுச் செல்ல முயற்சிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
வித்தியா விவகாரத்தை அரசியல்மயப்படுத்தி அதன்மூலம் எத்தரப்பினரும் இலாபமடைய முனையக்கூடாது என்பதும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இங்கு வித்தியாவின் படுகொலையானது எந்தளவு தூரம் மனித நாகரிகமற்ற படுபாதகச் செயல் என்ற ஒரே காரணத்திற்காகவே அனைத்து மக்களும் கிளர்ந்தெழுந்துள்ளனர்.
இன்று வித்தியாவிற்கு ஏற்பட்ட நிலைமை நாளை மற்றுமொருவருக்கு ஏற்படாது என்பதில் என்ன நிச்சயம் என்பதே அவர்கள் மனதில் எழுந்துள்ள கேள்வி. அதன் பிரதிபலிப்பாகவே அனைத்து மக்களும் ஓரணியில் குரல் கொடுத்து வருகின்றனர்.
பாதுகாப்புக்குப் பொறுப்பானவர்களும் இந்த யதார்த்தத்தை உணர்ந்துகொள்ள வேண்டும். மக்களின் அச்சம் தங்கள் பாதுகாப்புக்கு எந்த வகையிலும் பங்கம் ஏற்பட்டுவிடக் கூடாது. அதனை பாது காப்புக்கு பொறுப்பானவர்கள் உறுதி செய்யவேண்டும் என்பதும் அதில் அவர்கள் அசமந்தமாக இருந்துவிடக் கூடாது என்பதுமேயாகும்.
எனினும், துரதிஷ்டவசமாக வடக்கில் ஏற்பட்ட வன்முறைகள் சற்று பாரதூரமான சூழ்நிலையையும் விரும்பத்தகாத சம்பவங்களையும் கூடவே உருவாக்கிவிட்டன.
வித்தியாவின் படுகொலை தொடர்பில் நீதிகோரி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் எவ்வாறு வன்முறையாக வெடித்தது என்பது பலரது கேள்வி. வன்முறையை இதற்குள் கட்டவிழ்த்து விட்டவர்கள் யார் என்று மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
மறுபுறம், இது போராட்டத்தின் திசைமாற்றமாக இருக்கலாம் என்பதும் பலரது சந்தேகம். மாணவர்கள், இளைஞர்கள் எனப் பலதரப் பட்டவர்களும் மிகவும் நிதானமான முறையிலேயே போராட்டத்தை ஜனநாயக வழியில் மேற்கொண்டனர்.
நிலைமை இவ்வாறிருக்க, எங்கிருந்து வந்தது இந்த திடீர் தாக்குதல் என்ற கேள்வி எழுகின்றது. இந்த விடயத்தில் வடபகுதி மக்கள் மிகவும் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும்.
வன்முறையை தூண்டி மீண்டுமொரு அடக்குமுறைக்குள் மக்களை வைத்திருக்க ஏதேனும் சக்திகள் ஈடுபடுகின்றனரா? என்ற சந்தேகமும் எழவே செய்கின்றது.
காமுகர்களின் பிடியில் கசங்கிப் பலியானாலும் வித்தியா பல கேள்விகளை விட்டுச் சென்றுள்ளாள் என்பதே யதார்த்தம்.
வித்தியாவின் படுகொலை வாயிலாக குற்றவாளிகளுக்கு கிடைக் கும் தண்டனை குடா நாட்டில் மாத்திரமன்றி, முழு தீவகத்திலும் இனி ஒரு வித்தியா உருவாகாதிருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆர்.பி