தனது பொறுப்பிலிருந்த பெருந்தெருக்கள் அமைச்சின் ஊடாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 28 வீதிகளை நிர்மாணிப்பதற்காக தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடியை மாத்திரமே செலவுசெய்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குறிப்பிட்ட இந்தப் பணத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள பெருந்தெருக்கள் அனைத்தையும் நிர்மாணிக்கமுடியால் போனது மட்டுமல்ல, 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றியும் இன்னமும் புரியாதுள்ளது.
இந்தப் பணம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் பிரதமர் கூறினார்.
கண்டி இராஜசிங்க வித்தியாலயம் மற்றும் கலகா பத்ராவதி மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற பசுமை பூமி காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு பேசும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்தப் பகுதியிலிருந்து ஒரு நபர் கடந்த வாரம் எனக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் வத்தேகம – மாத்தளை வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்ததாகவும், எனினும் இதுவரை அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை யென்றும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டி ருந்தார்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ஷவினால் ஆரம்பிக்கப் பட்ட வீதி அபிவிருத்தி நடவடிக்கைகள் யாவும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் இது உண்மையென் றும் இந்த அரசாங்கத்தினால் என்ன செய்யப்பட்டுள்ளது என்ற கேள்வியை யும் அந்தக் கடிதத்தில் அவர் கேட் டிருந்தார்.
இதனையடுத்து வீதி அபிவிருத்தி தொடர்பாக என்ன நடந்திருக்கிறது என்பதைப் பற்றி விசாரணை மேற்கொண்டு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு நான் நிதி அமைச்சுக்குப் பணிப்புரை வழங்கியிருந்தேன்.
அதன்படி அந்த அறிக்கை எனக்குக் கிடைத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 2014ஆம் ஆண்டு நிதி அமைச்சர் என்ற ரீதியில் அந்த அமைச்சுக்கு ஒரு இலட்சத்து 43 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியிருந்தார்.
இதற்கு மேலதிகமாக வத்தேகம – மாத்தளை, ஹசலக்க – ஹந்துன்கமுவ வீதிகள் உட்பட 27 வீதிகளை அபிவிருத்தி செய்ய தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து 5500 கோடி ரூபாவை கடனாகப் பெற்றுள்ளார்.
தேசிய சேமிப்பு வங்கி நிதியமைச்சின் கீழ் இருப்பதால் நிதியமைச்சர் என்ற ரீதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது அமைச்சின் ஊடாக வங்கிக்குப் பணிப்புரையொன்றை வழங்கி இந்தப் பணத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.
வீதி அபிவிருத்திக்காகக் பெற்றுக்கொண்ட பணத்தில் 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்பது பற்றி மஹிந்த ராஜபக்ஷ பதில் அளிக்க வேண்டும். அவர் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தவுடன் அதற்கு மாற்றுப்பதிலையும் வழங்க நான் ஆயத்தமாக இருக்கிறேன்.
தேசிய சேமிப்பு வங்கியில் வைப்புச் செய்துள்ள பொது மக்களின் பணத்தை வீதி அபிவிருத்திக்கு எனக் கூறி அதனைப் பெற்றுக்கொண்டு வீதி அபிவிருத்திக்கு அப்பணத்தைப் பயன்படுத்தாமல் வேறு தேவைகளுக்காக பணத்தை செலவு செய்துள்ளார்.
இந்தப் பணத்தை எதற்கு செலவு செய்துள்ளார் என்பது எமக்குத் தெரியாது. ஹெலிக்கொப்டர் பயணங்களுக்கு செலவுசெய்யப்பட்டதா அல்லது தன் சல்கள் கொடுப்பதற்கு பயன்படுத்தப் பட்டதா என்பதும் தெரியவில்லை என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.
கடந்த தேர்தலின்போது நிதி ஒதுக்கப் படாமல் வாக்குறுதிகள் அள்ளிக் கொடுக்கப்பட்டுள்ளன. அப்படியில்லை யானால் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பணத்தை ஒதுக்கிவிட்டு வேறு தேவைகளுக்காக அவை செலவுசெய்யப் பட்டிருக்க வேண்டும். நிதி அமைச்சின் செயலாளர் எனக்கு கையளித்துள்ள அறிக்கையில் இவ்வாறான விபரங்கள்தான் அடங்கியிருக்கின்றன.
நாட்டில் வீதி அபிவிருத்திகள் தேவைதான். அபிவிருத்தியென்பது வீதிகளை அபிவிருத்தி செய்வது மாத்திரமல்ல. தொழிற்சாலைகள், வீடமைப்புகள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதுமாகும்.