திருமணம் நடைபெறும் இடத்திற்கு குதிரை வண்டிகளிலோ அலங்கார ஊர்திகளிலோ தாம் அழைத்து வரப்படுவதையே மிகச் சிறந்த வழிமுறையாக மேற்குலக நாடுகளைச் சேர்ந்த மணமகள்மார் கருதுவது வழமை.
ஆனால் பிரித்தானிய வேல்ஸை சேர்ந்த ஜெனி பக்லெப் (58 வயது) என்ற மணமகளோ தனது திருமணத் தின் போது திருமணம் நடைபெறும் இடத்திற்கு சவப்பெட்டியொன்றில் வந்திறங்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்தத் திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
ஜெனி பயணம் செய்த சவப்பெட்டியானது அறுவடை இயந்திரத்துடன் இணைக்கப்பட்டு மோட்டார் சைக்கிள் ஒன்றால் இழுத்துச் செல்லப்பட்டது.
மோட்டார் சைக்கிள் அபிமானியான தனது சகோதரர் ரொஜரை கௌரவப்படுத்தும் வகையிலேயே ஜெனி இவ்வாறு விநோதமான முறையில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.
மண்டையோடுகள் மற்றும் எலும்புக்கூடுகள் என்பவற்றில் ஆர்வம் காட்டி வந்த ரொஜர், அத்தகைய வடிவமைப்புகளைக் கொண்ட பொருட்களை அலங்காரப் பொருட்களாக சேகரிப்பதில் ஈடுபட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
ரொஜர் பயணம் செய்ய முடியாத நிலையில் கடும் சுகயீனமுற்றிருந்ததால் அவர் வசித்த இடத்திற்கு அருகிலேயே ஜெனியின் திருமணம் இடம்பெற்றது.
முதலில் ரொஜரே சவப்பெட்டியுடனான அறுவடை இயந்திரத்தை இழுத்து வரும் மோட்டார் சைக்கிளை செலுத்துவதாக இருந்தது. எனினும் அவரது மோசமான உடல் நிலை காரணமாக அவரது மனைவி அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார்.
ஜெனி தனது சவப்பெட்டியில் திருமணம் நடைபெறும் இடத்திற்கு வரும் திட்டத்தை மணமகனான கிறிஸ்தோப்பர் லொக்கெட்டிற்கு (51 வயது) கூட தெரிவிக்காது இரகசியமாக வைத்திருந்துள்ளார்.
இதன் காரணமாக திருமணம் நடைபெறும் இடத்திற்கு கொண்டு வரப்பட்ட சவப்பெட்டியில் ஜெனி இருப்பதைக் கண்டதும் மணமகன் உட்பட அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.