சேலம்: “எனக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது என குத்தி கொலை செய்தேன்’ என்று ஆட்டையாம்பட்டியில் பள்ளி மாணவியை கொலை செய்த வாலிபர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சேலம் அருகே உள்ளது ஆட்டையாம்பட்டி கிராமம். இங்குள்ள வீரபாண்டி காலனியை சேர்ந்தவர் லாரி டிரைவர் ரவி. இவருக்கு தாரணி (17), கவுசல்யா (12) என்ற மகள்களும், கோவிந்தராஜ் (14) என்ற மகனும் உள்ளனர்.

தாரணி, வீரபாண்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்–2 படித்து வந்தார்.

அவர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது, தாரணி வீட்டின் அருகில் வசிக்கும் 9 ஆம் வகுப்பு வரை படித்துள்ள கூலி வேலைக்கு செல்லும் லோகநாதன் (22) என்ற வாலிபர் அவரை வழி மறித்துள்ளார். இதில் அதிர்ச்சி அடைந்த தாரணி, அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளார்.

ஆனால் லோகநாதன், தாரணியின் கையை பிடித்துக் கொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ள கூறி கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

ஆனால் தாரணி இதற்கு மறுப்பு தெரிவித்து இருக்கிறார். உடனே லோகநாதன், மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து தாரணியை சரமாரியாக குத்தி உள்ளார். இதில் தாரணி ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் விழுந்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்துவிட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். இதை பார்த்ததும் லோகநாதன் அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

இந்த தகவல் அறிந்து தாரணியின் தந்தை ரவி மற்றும் உறவினர்களும் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.

உடனே தாரணியை மீட்டு அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் தாரணி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் பற்றி தாரணியின் பெற்றோர் ஆட்டையாம்பட்டி போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து, சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுப்புலட்சுமி தனிப்படை அமைத்தார். தனிப்படை போலீசார், தலைமறைவாக இருந்த லோகநாதனை இன்று கைது செய்தனர். மேலும், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியையும் பறிமுதல் செய்த போலீசார், அவர் மீது கொலை, மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட லோகநாதன், போலீசாரிடம் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில், ”நான் தாரணியை கடந்த ஒரு வருடமாக காதலித்து வருகிறேன். ஆனால் தாரணி என்னை காதலிக்கவில்லை.

இருந்தும் என் காதல் பற்றி தாரணியிடம் பல முறை கூறியும் அவள் எனது காதலை ஏற்கவில்லை. கடந்த 6 மாதத்திற்கு முன் தாரணியின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டேன். ஆனால் தாரணியின் பெற்றோர், எனக்கு தாரணியை தர மறுத்துவிட்டனர்.

அதன் பின்னரும் தாரணியை சந்தித்து எனது ஆசையை கூற முயன்றேன். ஆனால் முடியவில்லை. இந்நிலையில் நேற்று தாரணியை சந்தித்து என்னை திருமணம் செய்துகொள்ள கூறினேன்.

ஆனால் அவள் அப்போதும் மறுப்பு தெரிவித்தார். இதனால் எங்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அதில் கோபம் அடைந்த நான், எனக்கு கிடைக்காத தாரணி வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என்று கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டேன். ஆனால், போலீசார் என்னை பிடித்து கைது செய்துவிட்டனர்” என்று கூறி இருக்கிறார்.

இந்த கொலை சம்பவம் வீரபாண்டி, ஆட்டையாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Share.
Leave A Reply

Exit mobile version