தனது 3 மகள்மாரின் கல்விக்காக பணத்தை வீணடிக்க விரும்பாத தந்தை யொருவர், அவர்களைக் கழுத்தை நெரித்து படுகொலை செய்த சம்பவம் பாகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் புதன்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
இரட்டையர்களான சஷ்மானுக்கும் அமானுக்கும் வயது 7 ஆகும். அதே சமயம் பிஸாவின் வயது 5 ஆகும்.
சம்பவ தினம் இர்ஷாத் தமது ஒரே மகனை மட்டும் அழைத்துக் கொண்டு திருமண வைபவமொன்றுக்கு செல்லுமாறு தனது மனைவி ஷபானா நாஸை(35 வயது) வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் மனைவியோ தமது மகனுடன் இளைய மகளான இரண்டு வயதுக் குழந்தையையும் தன்னுடன் அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் ஷபானா பொலிஸாருக்கு அளித்த வாக்குமூலத்தில், தனது கணவர் தமது மகள்மாரால் எதுவித பிரயோசனமும் இல்லை எனவும் குடும்பமே பட்டினியால் இறக்கும் நிலை ஏற்படப்போவதாகவும் அதனால் அவர்களை கொல்லப் போவதாகவும் கூறி வந்ததாக தெரிவித்தார்.
“எனது கணவர் எனது மகள்மார் பாடசாலைக்கு செல்கையில் ஒரு சதத்தைக் கூட கொடுத்ததில்லை.
எனது பெற்றோரே அவர்களுக்கான பாடசாலைக் கட்டணங்கள், பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைகள் என்பவற்றுக்கு ஏற்படும் செலவைப் பொறுப்பேற்றிருந்தனர்” என்று கூறிய ஷபானா, தமது கடைசி மகள் பிறந்தது முதற் கொண்டு கணவரின் மகள்மார் மீதான வெறுப்பு நிலைமை மோசமானதாக கூறினார்.
ஷபானா தற்போது தனது எஞ்சி யுள்ள இரு பிள்ளைகளுடன் தனது பெற்றோரின் வீட்டில் வாழ்கிறார்.