காஞ்சிபுரம்: சாலையோரமாக நடந்து சென்ற பெண் மீது கார் மோதியதில் அந்த பெண்ணும், 7 மாத கைக்குழந்தையும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கை, கால் முறிந்த நிலையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இந்த பதற வைக்கும் சம்பவம் காஞ்சிபுரத்தில் நடந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் அமுதபெட்டி தெருவில் வசித்து வந்தவர் செல்வி. அவருக்கு யுவஸ்ரீ என்ற 7 மாத கைக்குழந்தை ஒன்று உள்ளது.
அப்போது, வேகமாக வந்த கார், செல்வி மீது மோதியது. இதில் குழந்தை யுவஸ்ரீயும், செல்வியும் சில மீட்டர் தூரத்துக்கு தூக்கி வீசப்பட்டனர். கார் மின்னல் வேகத்தில் பறந்து சென்றது.
பலத்த காயம் அடைந்த செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கை, கால் உடைந்த நிலையில் உயிருக்கு போராடிய குழந்தை யுவஸ்ரீயை உடன் வந்த உறவினர்கள், காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள தாய் சேய் நல மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டது. அங்கு குழந்தை யுவஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது, கைக்குழந்தையுடன் பெண் தூக்கி வீசப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது.
போக்குவரத்து காவல்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் இந்த விபத்து குறித்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆனால், வீடியோ வெளியானதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விபத்தை ஏற்படுத்திய வினோத் கண்ணன் என்பவர் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
உடனடியாக அவருக்கு நீதிமன்றம் ஜாமீனும் வழங்கிவிட்டது. காஞ்சிபுரம் மாவட்டம், தாமல் பகுதியை சேர்ந்தவர் வினோத் கண்ணன் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ வெளியானது குறித்து பத்திரிகையாளர்கள், விஷ்ணுகாஞ்சி காவல் நிலையத்துக்கு சென்றனர். இது குறித்து இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியிடம் விவரம் கேட்க முயன்றனர். ஆனால், காவல்துறையினர் தரப்பில் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
போக்குவரத்து காவல்துறையினரால் வெளியிடப்பட்ட இந்த வீடியோவை பார்த்து காவல்துறையினர் 4 நாட்களாக விசாரணை நடத்தாமல் இருந்தது ஏன்? என்ற சந்தேகம் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது.