முன்னர் வன்னியில் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட நிறைய நகைச்சுவை துணுக்குகள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையானவை.
விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு படையணிகள் குறித்த துணுக்குகளிருந்தன. பொதுமக்கள் குறித்தானவையும் இருந்தன.
விடுதலைப்புலிகள் போல பாவனைகாட்டிக் கொண்டு திரியும் பொதுமக்கள் பற்றியவையும் இருக்கின்றன.
இந்த வகையினர் குறித்தும் நகைச்சுவை துணுக்ககள் உருவாகியிருக்கின்றது என்பது எதனைக் குறிக்கின்றதென்றால், இந்த வகையானவர்களும் கணிசமான எண்ணிக்கையில் இருந்திருக்கிறார்கள் என்பதையே.
ஊருக்குள் நடக்கும் கொடுக்கல் வாங்கல் பிரச்சனைகளை தீர்க்க, கடன்காரணை வெருட்ட, கலர்ஸ்காட்ட என நிறைய இளைஞர்கள் இப்படித் திரிந்தார்கள்.
அதிகம் ஏன், சிலர் பெண்களை கவிழ்ப்பதற்கும் இப்படித் திரிந்தார்கள். எனக்குத் தெரிந்த நிறைய நண்பர்கள் இப்படித் திரிந்தார்கள்.
இயக்கங்களின் ஆரம்ப நாட்களிலேயே இது உருவாகியிருக்கலாம். ஆனால் இது ஒரு பெரும் போக்காக நான்காம் கட்ட ஈழப்போர்க்காலத்திலேயே உருவானது.
இப்படியான வேடங்கட்டுபவர்கள் மீது புலிகளிற்கு பயங்கர ஆத்திரமிருந்தது. போராளியென்று ஒரு பொதுமகன் கூறித் திரிவதை அறிந்தாலோ அல்லது காரியம் சாதித்தாலோ அவர்கள் கடுமையான தண்டனை வழங்கத் தவறுவதேயில்லை.
அனேக சந்தர்ப்பங்களில் தண்டனையை பொறுக்க முடியாமல் வேடங்கட்டியவர் உண்மையாகவே இயக்கமாகி விடுவார். அப்படியென்றால்த்தான் தண்டனையிலிருந்து தப்பலாம்.
இப்படி வேடங்கட்டியவர்கள் நிறையப் பேரை எனக்குத் தெரியும். ஆனால் அவர்கள் அத்தனைபேருமே ஆண்கள்தான்.
பெண்கள் யாரும் இப்படி வேடங்கட்டியதை நான் அறிந்திருக்கவில்லை. இதனை ஒரு விதிமீறலாகவோ கலாச்சார பாதகமென்ற அடிப்படையிலோ நான் குறிப்பிடவில்லை.
அப்படியொரு தகவல் கிடைத்திருக்கவில்லை என்ற அடிப்படையில் கூறினேன்.
ஆனால் காலம் அப்படியான ஒரு குறையை எனக்கு வைக்கவில்லை. இனி விடுதலைப்புலிகளின் அத்தியாயமே இருக்காதென்ற நிலை உருவாகிக் கொண்டிருக்கும் நிலையில்- புலிகள் இயக்கம் அழிந்து நான்கு வருடங்களின் பின்- பெண்னொருவர் புலி வேடமிட்டதை நான் முதல்முதலாக கண்டேன்.
நானறிந்தவரையில் இப்படி விடுதலைப்புலி வேடங்கட்டிய முதல் தமிழ்பெண்மணி அனந்திதான்.
தேர்தலிற்கு சில நாட்களின் முன்னர், உரையாடலொன்றில் நண்பரொருவர் அனந்தி இயக்கமா எனக் கேட்டார். நான் “மற்றது” என்றேன். அவருக்கு சட்டென முகம் கறுத்துவிட்டது.
இந்த சொல்லிற்கிருக்கும் பலவித அர்த்தங்கள் காரணமாக இருந்திருக்கலாம். விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் மாதிரி பாவனை பண்ணிய ஒருவர் பற்றிய பிரபலமான நகைச்சுவை துணுக்கு – ‘மற்றது’ ஆகும்.
ஓவ்வொரு சொல்லிற்கும் காலத்தை பொறுத்தும், சூழலைப் பொறுத்தும் அர்த்தங்கள் மாறுபட்டுக் கொண்டேயிருக்கின்றன.
விடுதலைப்புலிகளின் முக்கியமானதும் இரகசியமானதுமான் ஓரிரு பிரிவுகளை சேர்ந்தவர்களை பொதுமக்கள் அப்படி அழைத்தனர். இதனை விளங்கப்படுத்திய பின்னர்தான் அவர் இயல்பிற்கு வந்தார்.
வடமாகாணசபை வேட்பாளர் பட்டியல் வெளியானதிலிருந்தே இந்தக் கேள்வியை பலரிடமிருந்து எதிர்கொண்டேன். நாளாக நாளாக இந்தக் கேள்வி அதிகரித்துக் கொண்டே சென்றது.
காரணம், தேர்தலை அண்மித்த நாட்களில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியாகத்தான் அனந்தி தன்னை முன்னிறுத்த முயன்று கொண்டிருந்தார். இதற்கு யாழ்ப்பாணத்திலும், புலம்பெயர்ந்த சூழலிலுமுள்ள ஊடகங்கள் நிறைய உதவின.
அவர் விடுதலைப்புலிகளின் பிரதிநிதியல்ல என்றால், போராளிகள் அதற்கெதிராக ஏன் ஒரு சொல்தன்னும் சொல்லவில்லை என்ற கேள்வி எழலாம்.
சமகால ஈழச்சூழலில் இப்படியான எதிர்க்குரல் சாத்தியமேயற்ற விடயம். தேர்தல் சமயத்தில் முன்னாள் விடுதலைப்புலிகள் சிலரை கொண்டு வந்து இராணுவம் அனந்திக்கெதிரான ஆர்ப்பட்டம் ஒன்றையும் நடத்தியது.
அது தன்னெழுச்சியானது அல்ல. மாறாக இப்படியான பொதுவேலைத்திட்டங்களில் தன்னெழுச்சியாக ஒன்று திரள்வதற்கான அல்லது ஒரு அமைப்பாக இணைந்து குறைந்தபட்சம் பத்திரிகை அறிக்கையொன்றை வெளியிடுவதற்கான வாய்ப்பு இல்லையென்பதும், அந்த மனநிலையில் முன்னாள் போராளிகள் இல்லையென்பதும் கவனிக்கத்தக்க யதார்த்தங்கள்.
ஆரம்பத்தில் அனந்தி தன்னை காணாமல் போனவர்களின் பிரதிநிதியாகத்தான் முன்னிறுத்த தொடங்கினார்.
அவரது கணவரான முன்னாள் திருகோணமலை அரசியல்துறை பொறுப்பாளர் எழிலன் யுத்தத்தின் இறுதியில் படையினரிடம் சரணடைந்து காணாமல் போயுள்ளார்.
விடுதலைப்புலிகளின் முதல்மட்ட தலைவர்கள் பெரும்பாலானவர்கள் குடும்பமாக மரணித்து விட்டதும், சரணடைந்த காணாமல்போன இரண்டாம், மூன்றாம் மட்ட முக்கியஸ்தர்களின் மனைவியரை விட ஒப்பீட்டளவில் படித்த துடிதுடிப்பானவராக அனந்தி இருந்ததும், தொடர்ந்தும் உள்நாட்டில் தங்கியிருந்ததும் அவருக்கு பிரகாசமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தன.
இவை எல்லாவற்றையும் விடவும் மிக முக்கியமான நூதனமான இன்னொரு காரணமுமுண்டு. புலிகள் அமைப்பின் முக்கியமான அல்லது ஆபத்தானவர்கள் அல்லது மீளவும் அமைப்பொன்றை ஒருங்கிணைக்கவல்லவர்கள் என அரசாங்கம் நம்பும் தளபதிகளின் உயிர்பிழைத்த மனைவியர் இராணுவப்பாதுகாப்பில் அல்லது கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
இந்த வகையானவர்களை பொது அரங்கில் தலைகாட்ட அனுமதிக்காமல் வைத்திருப்பதும், புலிகள் அமைப்பிற்குள் வெகு சாதாரணமானவர்களாகவும், ஊடகங்களுடன் தொடர்புபட்டிருந்தமையினால் இல்லாத கிறிஸ்பூதம் போல ஊதிப்பெருப்பிக்கப்பட்ட தயா, எழிலன் போன்ற அரசியல்துறை உறுப்பினர்கள் அல்லது அவர்களின் மனைவியர் முன்னிலைக்கு வந்தார்கள். அல்லது கருத்துச் சொல்பவர்கள் ஆனார்கள்.

யுத்தத்தில் எற்பட்ட மரணங்களும் காணாமல் போதல்களும் ஒவ்வொரு வீடுகளிலும் தீராத துயரமாகவும், வாழ்வில் மீளெழ முடியாத சறுக்கல்களாகவும் இருக்கின்றன.
இந்த இழப்புக்களும் துயரங்களும் போரில் ஈடுபட்ட, பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்கள் யாருக்குமே எந்த பயனையும், முதலீட்டையும் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. சில தென்னிந்திய மற்றும் புலம்பெயர் தமிழர்களை தவிர.
பிரபாகரனின் உறவினர்கள் தொடங்கி யுத்தத்தின் இறுதிநாளில் கட்டாயமாக படைக்கு சேர்க்கப்பட்டவனின் குடும்பம் வரை தாயகத்தில் இருக்கும் யாருக்கும் எந்த முதலீட்டையும் கொடுக்கவில்லை.
துரதிஸ்டமாக இவர்கள் அத்தனை பேரின் முதலீட்டையும் அனந்தி ஒருவர் மட்டுமே அனுபவிக்கட்டும் என காலம் ஒரு விசித்திரமான கதையெழுதியிருக்கிறது. காணாமல் போன தனது கணவனை முன்வைத்து அனந்தி இரண்டு முதலீட்டை செய்திருந்தார்.
முதலில் அவர் சுவிற்சர்லாந்து செல்வதற்கு முயன்றார். அது வெற்றியளிக்காதென்று தெரிந்தபோது, ஏதாவதொரு ஐரோப்பிய நாட்டிற்காகவது சென்றுவிட முயன்றார்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக எப்பொழுதாவது அனந்திவிடும் ஓரிரண்டு அறிக்கைகள் போதிய அடித்தளத்தை ஏற்படுத்தியிருக்கவில்லை.
அதனால் அவரை நம்பி பெரும்தொகை பணத்தை முதலிட புலம்பெயர்ந்தவர்கள் யாரும் தயாராகவில்லை. அதன் பின்னர் அவர் சில காலம் காத்திருக்க வேண்டியதானது.
மாகாணசபை தேர்தலின் வடிவத்தில் அவருக்கு காலம் கனிந்தது. கிளிநொச்சிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அனந்தியை வேட்பாளராக சிபரிசு செய்தார்.
அனந்தி மாகாணசபை உறுப்பினராகும்வரை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்குள் இருந்த விடுதலைப்புலியாக சிறிதரனே இருந்தார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பினர், யாழ்ப்பாணத்து ஊடகக்காரர்கள், மற்றும் தமிழ்ச்சனங்களில் பெரும்பாலனவர்கள் அப்படித்தான் பார்த்தார்கள்.
அதற்கு காரணமுமண்டு. நாடாளுமன்ற உறுப்பினரின் மைத்துனன்தான் தளபதி தீபன். அதனால் அவரை விடுதலைப்புலிகளின் ஒரு பிரதிநிதியாக அல்லது தொடர்புபட்டவராகத்தான் சனங்கள் பார்த்தார்கள். அல்லது பார்க்க வைக்கப்பட்டார்கள்.
ஏனெனில் நமது தமிழ் ஊடகவியலாளர்கள் அப்படித்தான் ஒரு பிம்பத்தை கட்டியமைத்தார்கள். அல்லது அவர்கள் உண்மையிலேயெ அப்படித்தான் நினைத்தார்கள்.
இதுதான் அனந்தி விடயத்திலும் நடந்தது. ஒப்பீட்டளவில் சிறிதரனை விடவும் அனந்தி விடுதலைப்புலி ஒருவருக்கு நெருக்கமானவர். சிறிதரனிற்கு மச்சான்தான் இயக்கமென்றால், அனந்திக்கு கணவனே இயக்கம்.
இதனால் யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்கள் அவரை விடுதலைப்புலி என்றுதான் நினைத்தார்கள். அதனை விட எழிலனை விடுதலைப்புலிகளின் மாபெரும் தளபதி என்றும் நினைத்தார்கள். யாழ்ப்பாணத்து ஊடகவியலாளர்களின் கதையே இப்படியிருந்தால், புலம்பெயர் தமிழக ஊடகங்களை பற்றி கதைக்கவே வேண்டியதில்லை. ஆனந்தவிகடனில் அருள்எழிலன் கூட பிரபாகரன் ரேஞ்சில் அனந்தியை பில்டப் செய்திருந்தார்.
கூரையற்ற வீட்டிற்குள் வானத்தை பார்த்து படுத்திருந்த போது வானம்பிளந்து செல்வம் கொட்டியதை ஒத்த மாபெரும் அதிஸ்டம்தான் அனந்திக்கு அடித்தது.
விடுதலைப்புலிகளை செய்திகளாக மட்டும் அறிந்த பெருந்தொகை ஊடகவியலாளர்கள், விடுதலைப்புலிகளின் பிரதிநிதியென்று சொல்லத்தக்க உருப்படியான யாரும் வெளியில் இல்லாமை, விடுதலைப்புலிகளின் அழிப்புடனான பெரும் இனப்படுகொலை குறித்த மாறாத காயம் எல்லாம் அனந்திக்கு வாய்ப்பாகிவிட்டது.
கணிக்க முடியாத வேகத்தில் பாய்ந்து கொண்டிருக்கும் காட்டாறு ஒன்றிற்குள் விழுந்த சிறு எறும்மைப்போலத்தான் அவரிருந்தார். உண்மையில் வேட்பாளரான பின்னர் எதுவும் அனந்தியின் திட்டமிடலில் நடந்ததில்லை.
அந்த வேகத்திற்கு ஈடுகொடுப்பதற்காக வேகத்திற்கேற்ப தன்னை மாற்றியமைத்துக் கொண்டிருந்தார். இதனால் தாராளமாக பொய்கள் சொன்னார். இல்லாதவற்றிற்கு உரிமை கொண்டாடினார். அவரது பொய்களை தங்கள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டு ஊடகவியலாளர்கள் அலைந்த திரிந்தார்கள்.
அனந்தி குறித்த விளம்பரங்களை பிரசுரிக்கவே கூடாது என உதயன் நிர்வாகத்திற்கு கட்டளையிட்டிருந்தார்.
இந்த சூழ்நிலையில்த்தான் நியூ யப்னா இணையத்தளம் அனந்தியின் முதலாவது விளம்பரத்தை இலவசமாக பிரசுரித்தது. அதன் பின்னான நாட்களில் அனந்தி ஒரு இரகசிய பேச்சவார்த்தையை சரவணபவனுடன் நடத்த விரும்பினார்.
ஓரு ஊடகவியலாளர்தான் இருவருக்குமான தூதராக இருந்தார். அதன் பின்னர் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டனர். (ஆரம்பத்தில் இப்படித்தான் விக்னேஸ்வரனை உதயன் எதிர்த்தது.
விக்கி முதலமைச்சர் வேட்பாளராவது உறுதியானதும், சரவணபவன் பல்டியடித்து விக்கியுடன் சமரசமொன்றிற்கு வந்தார்.
அதாவது விக்கியை உதயன் ஆதரிப்பதாகவும், வடமாகாணசபையின் விளம்பரங்களை உதயனிற்கு வழங்குவதாகவும்) அனந்திக்கும் சரவணபவனிற்குமிடையில் ஏதாவது உடன்பாடுகள் எட்டப்பட்டதா என்பது தெரியவில்லை. ஆனால் அந்த சந்திப்பு நடந்ததற்கு மறுநாளில் இருந்து அனந்தியை உதயன் கேள்விக்கிடமின்றி ஆதரித்தது.
அந்த நாட்களில் உதயனில் அனந்தியின் பேட்டி ஒன்று வெளியானது. ஓப்பீட்டளவில் பிற பேட்டிகளை விட சில வெளிப்படையான கேள்விகள் அதில் கேட்கப்பட்டிருந்ததுதான். ஆனால் அனந்தி அந்த பேட்டியில் நிறைய பொய்கள் சொல்லி அவற்றை கடந்து சென்றுவிட்டார்.
அவரது கணவன் கட்டாய ஆட்சேர்ப்பில் ஈடுபட்டது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்வியை திமிர்த்தனமாக கடந்து சென்றார்.
கட்டாய ஆட்சேர்ப்பு நடந்த நாட்களில் அதில் ஈடுபட்ட பொறுப்பாளர்களின் மனைவிமார் இவைபற்றிய கவலைகளின்றி திமர்த்தனமாக நடந்து கொண்ட எண்ணற்ற சம்பவங்களைக் கண்டிருக்கிறேன்.
அந்த நாட்களில் அனந்தியும் அப்படி இருந்திருக்கலாம். ஆனால் நான்கு வருடங்கள் கழிந்த பின்னரும்- தனது கணவரை இழந்த பின்னரும்- அது குறித்த சுயவிமர்சனங்கள் எதுவுமின்றி அவர் இருக்கிறார் என்பதுதான் அதிர்ச்சியானது.
கட்டாய ஆட்சேர்ப்பிற்கு விடுதலைப்புலிகள் சொன்ன அத்தனை நியாயங்களையும் அவர் அந்த பேட்டியில் சொன்னார். உச்சபட்சமாக, ஒரு தொகுதி போராளிகள் போராடிக் கொண்டிருக்க பெரும்பகுதியானவர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாதென்றார். தனது கணவன் அப்படியான பணிகளில் ஈடுபட்டிருக்கவில்லை என்றார்.
தமிழ்ச்செல்வன் மரணமான பின்னர்தான் தனது கணவன் ஆட்சேர்ப்புடன் தொடர்புபட்ட கொள்கை முன்னெடுப்புப் பிரிவில் இணைந்தார் என்றார்.
இவை அத்தனையும் பொய்கள்.
1998ம் ஆண்டு எழிலனுடன் கொள்கை முன்னெடுப்புப் பிரிவில் இணைந்த போராளியொருவர் இந்தப் பேட்டியை படித்துவிட்டு திறந்த வாய் மூட முடியாமல் இருந்தார். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த காலத்தில் பெரும்பகுதியை ஆட்சேர்ப்பதிலேயே எழிலன் செலவிட்டார்.
யுத்தகால நினைவுகள் குறித்து ஏற்கனவே நான் எழுதிய கதைகளிலும், கட்டுரைகளிலும் எழிலன் தவிர்க்க முடியாத பாத்திரமாக உள்ளார்.
யுத்தத்தின் இறுதிநாட்களில் மாபெரும் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட விடுதலைப்புலிகளின் ஒரு சில பெயர்களை சொல்லும்படி கேட்டால் அதில் நிச்சயம் எழிலனது பெயரும் இருக்கும்.
சிறார்கள் பெண்கள், இளைஞர்களை கட்டாயமாக படைக்கிணைத்தது, சனங்களை தப்பிச் செல்லவிடாமல் தடுத்தது, தப்பிசெல்ல முயன்றவர்களை சுட்டுக் கொன்றது போன்ற மூன்று குற்றச்சாட்டுக்களை என்னால் தயக்கமில்லாமல் எழிலன் மீது சுமத்த முடியும்.
ஏற்கனவே ‘குற்ற உணர்வு’ என்ற பெயரில் எனது வலைத்தளத்தில் இது பற்றிய பதிவுகள் உள்ளன. அந்த நடவடிக்கையில் ஒருவர் உயிரிழந்ததுடன் நான்கு பேரளவில் துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்தப்பட்டனர்.
மாத்தளன் கப்பலடி கலவரத்தை எழிலன் தலைமையிலான அணிதான் அடக்கியது. இதில் நான்கு பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நீளமான வாளொன்றுடன் எழிலன் அந்த வீதியில் திரிந்ததை கண்டிருக்கிறேன்.
வலைஞர்மடம் குருசடிச்சந்தியில் தப்பிச் செல்ல முயன்ற சனங்கள் தடுத்து நிறுத்தபட்டிருந்தார்கள். எழிலனும் தங்கனும்தான் அந்த சம்பவத்தில் பொறுப்பாக இருந்தவர்கள்.
கைக்குழந்தையொன்றுடன் வந்த இளம்தாயொருவர் தனது குழந்தைக்கு பால்மா இல்லையென்றும், மக்களை இப்படி மனிதத்தன்மையற்ற முறையில் தடுக்கலாமா என்றும் ஆவேசமாக நியாயம் கேட்டுக் கொண்டிருந்தார்.
அப்பொழுது எழிலன் தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை உருவி அந்தத் தாயின் நடுநெற்றியில் இரண்டு சூடு வைத்தார். இவையெல்லாம் மேலோட்டமான உதாரணங்கள். முழுமையான விசாரணைப்பட்டியல் அல்ல. ஆனால் அனந்தி பொய் கூறுகிறார் என்பதற்கான உதாரணங்களாகத்தான் சுட்டிக்காட்டினேன்.
இதேபோலத்தான் அனந்தி தேர்தலின் பின்பாக வெளியிட்ட இரண்டு அறிக்கைகளையும் கவனித்தவர்களிற்கு இன்னொரு விடயம் புலப்படும்.
மாவீரர்கள், போராளிகள், காயமடைந்தவர்கள் சார்பாக தனக்கு வாக்களித்த மக்கள் என்ற வசனம் பாவித்திருந்தார். உண்மையில் இதைப்போன்ற அயோக்கியத்தனம் எதுவுமில்லை.
என்னைக் கேட்டால் அனந்தியை விடவும், விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்பதற்கு தயா மாஸ்ரர் பொருத்தமானவர் என்பேன். ஆனால் இவர்கள் இருவரையும் விட மிகப்பொருத்தமான ஒராயிரத்திற்குமதிகமானவர்கள் கைவிடப்பட்டவர்களின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள் என்பதே யதார்த்தம்.
கணவன் விடுதலைப்புலி என்பதாலேயே ஒருவர் விடுதலைப்புலிகளின் பிரதிநிதி ஆகிவிட முடியுமென்றால் ஈழத்தமிழர்களின் முக்கால்வாசிப்பேர் புலிகளின் பிரதிநிதிகள்தான்.
உண்மையை சொன்னால் அனந்தி இவையெதனதும் பிரதிநிதியல்ல. அவர் காணாமல் போனவர்களை தேடுபவர்களின் பிரதிநிதி என்பதில் எனக்கு எந்த தயக்கமுமில்லை. அந்த அடையாளம் ஒன்றுக்கு மட்டுமே உரிமை கோருவதுதான் நியாயமானதும்.
இதில் இன்னொரு சுவாரஸ்யமான முரணும் உள்ளது. அனந்தியும் அனந்தி சார்ந்த கூட்டமைப்பும் சர்வதேச போர்க்குற்ற விசாரணையை கோரியுள்ளன. கூட்டமைப்பின் விஞ்ஞாபனத்திலும் விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
ஒருவேளை விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்கள் விசாரிக்கப்பட்டால் அதில் முதல் தொகுதி குற்றவாளிகளில் எழிலனும் சந்தேகமின்றி இடம்பெறுவார்.
இப்பொழுது கணவனை இழந்த அனந்தி, புகைப்படத்துடனும் கண்ணீருடனும் கணவனிற்காக நீதி கேட்டு போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்துவதைப்போலவே, இறுதியுத்தத்தில் கட்டாயமாக படைக்கிணைக்கப்பட்ட, கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் நீதி கேட்டால் எழிலனும் விசாரிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டுமல்லவா. இது எவ்வளவு பெரிய முரணான விடயம்.
எழிலனின் செயல்களிற்காக அனந்தியை பொறுப்புக் கூற கேட்பது நியாயமற்றது என யாராவது கருதலாம். உண்மைதான்.
ஆனால் போர்க்குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரது மனைவி, போர்க்குற்றங்கள் என வகைப்படுத்தப்படும் விதத்தில் கொல்லப்பட்ட அல்லது காணாமல் போகச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நீதி கேட்கும்பொழுது- பொதுவெளியில் வந்து அரசதரப்பின் போர்க்குற்றங்கள் தொடர்பாக குரல் கொடுக்கும்பொழுது, தனது தரப்பு குறித்த சுயவிமர்சனங்கள் இருப்பது அவசியமானது.
பாதிக்கப்பட்டவர்கள் அவரிடமிருந்து அரசியல் அறமாக இதனை எதிர்பார்ப்பதில் தவறில்லை. இந்த விடயத்தில் அவர் என்ன நிலைப்பாடு எடுக்கிறார் என்பதிலேயே அவரது கோரிக்கைளின் வலுவும் உண்மைத்தன்மையும் உள்ளன.
இதனை குறைந்தபட்ச அறமாகத்தான் அவரிடமிருந்து இப்போதைக்கு எதிர்பார்க்கலாமே தவிர, பொறுப்புக்கூறும்படியான வற்புறுத்தல்களை செய்வதற்கு உகந்த காலமாக இதனை நான் கருதவில்லை.
ஏனெனில், இதேவிதமான அல்லது இதனிலும் அதிகமான குற்றங்களை செய்த தரப்பு எந்தச் சங்கடங்களுமின்றி, விசாரணைகளுமின்றி இருக்கும் பொழுது அனந்தியை அல்லது விடுதலைப்புலிகளை மட்டும் பொறுப்புக் கூறக் கேட்பது அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையானதாக அமைந்து விடலாம்.
ஆனால் இவை பற்றிய நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியதை ஒரு தார்மீக அறமாக யாரும் அவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.
விடுதலைப்புலிகளின் போர்க்குற்றங்களையும் விசாரிக்க வேண்டுமென தமிழ்தேசிய கூட்டமைப்பு கோரியிருந்தது. அப்படியொரு நிலைப்பாட்டை தமிழ்தேசிய கூட்டமைப்பு எடுத்தமைக்கும் அனந்தியின் தெரிவிற்குமிடையில் எப்படியான சமன்பாட்டையிட்டு நிரப்புவதென தெரியவில்லை.
விடுதலைப்புலிகளுடனான நெருங்கிய உறவிருப்பதாக உள்ளுரில் காண்பிக்க வேண்டிய தேவை தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு இருந்தது.
அதாவது கூட்டமைப்பென்பது விடுதலைப்புலிகளின் தொடர்ச்சி என்பது மாதிரியான பிம்பமொன்றை உருவாக்கினார்கள்.
இது பல சமயங்களில் இராணுவத்தை கோபமூட்டியது. தேர்தலில் இராணுவம் நிகழ்த்திய வன்முறைகள் மிக மோசமானவை மட்டுமல்ல. தண்டிக்கப்பட வேண்டியவையும்தான்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான இராணுவத்தின் ஒவ்வாமை எல்லோரும் அறிந்ததுதான். கூட்டமைப்பிற்குள்ளேயே சில தரப்பை மென்மையாகவும், சில தரப்பை தீவிரமாகவும் இராணுவம் கையாண்டதன் பின்னணி இதுதான்.
முன்னர் எங்களுடன் போராளியாக இருந்த நண்பர் ஒருவர் இப்பொழுது லண்டனில் வாழ்கிறார். தேர்தல் சமயத்தில் தொலைபேசியில் பேசினார்.
கூட்டமைப்பின் பிரச்சாரத்தை பார்க்கும்போது, தமிழிழ விடுதலைப்புலிகளின் கூட்டங்கள் மாதிரியே இருப்பதாக கூறினார். அப்படித்தான் இருந்தன கூட்டமைப்பின் உள்ளுர் பிரச்சார கூட்டங்கள்.
தங்கள் மகன்களையும் மகள்களையும் கொடுமைப்படுத்தி நிர்வாணமாக்கி சுட்டும் வெட்டியும் கொன்ற, அசைக்க முடியாத கோட்டையை நிஜத்திலும், மனதிலும் கட்டியிருந்தவர்களை தோற்கடித்த இராணுவத்தின் மீது பிரயோகிக்க முடியாத கோபத்துடனிருந்த மக்களின் முன்பாக அன்று வந்த சம்பந்தனில் தொடங்கி இன்று வந்த விக்னேஸ்வரன் வரை அத்தனை பேரும் உங்கள் பிள்ளைகளை கொன்றவர்களை விசாரணைக்குட்படுத்த எங்களிற்கு வாக்களியுங்கள் எனக் கேட்டனர்.
போர்க்குற்றம் தொடர்பான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என உள்ளுரில் வலியுறுத்தினார்கள்.
உயர்பாதுகாப்பு வலயங்கள் காரணமாக இடம்பெயர்ந்து வாழ்பவர்களின் அகதி முகாம்களிற்கு சென்று இராணுவத்தை வடக்கிலிருந்த வெளியேற்ற எங்களிற்கு வாக்களியுங்கள் என்றார்கள். காணி பொலிஸ் அதிகாரங்களை அடைந்தே தீருவோம் என்றார்கள்.
உலகின் புகழ்பெற்ற குளிர்பான தயாரிப்பு நிறுவனங்களின் உற்பத்தி இரகசியங்கள் இரகசியமானவை. எந்தெந்த பொருட்களை எந்தெந்த விகிதத்தில் கலப்பதென்ற சூட்சுமத்தில்த்தான் அனைத்துமே தங்கியுள்ளது.
உண்மையை சொன்னால் கூட்டமைப்பும் வெற்றிகரமான வர்த்தக நிறுவனம்தான். அவர்களது வெற்றிக்கு பிரதான காரணமாக இருப்பது அபரிமிதமான கலவைதான்.
தமிழீழ விடுதலைப்புலிகள் கொஞ்சம், அவர்களை நிராகரிப்பது கொஞ்சம், போர்க்குற்ற விசாரணை கொஞ்சம், அரசுடன் இணங்கி செயற்படுவது கொஞ்சம், அரசை எதிர்ப்பது கொஞ்சம், ஐக்கிய இலங்கைக்குள் சுயாட்சி கொஞ்சம், தனிநாட்டு கோரிக்கை கொஞ்சம் கலந்த கலவை மக்கள் மத்தியில் சக்கைப்போடு போட்டது. இதற்கு அனந்தியும் அவர்களிற்கு உதவினார்.
வாக்குப்பெறுவதற்கான கருவியாகவே தன்னை கூட்டமைப்பு பயன்படுத்தியதென்ற அதிருப்தி அனந்திக்கு தேர்தலின் பின்னர்தான் ஏற்பட்டது.
தமிழீழ விடுதலைப்புலிகள் அழிந்ததன் பின்னர் இது ‘மற்றது’களின் காலம். யாரெல்லாம் புலியாக இருக்கவில்லையோ அவர்கள் புலிகளாக வேடமிட்டுள்ளனர்.
யாரையெல்லாம் புலிகள் சூசையுடன் பார்த்தார்களோ அவர்கள் புலிகளின் காதலர்களாக கூறிக் கொள்கிறார்கள்.
ஒருவகையில் பார்த்தால் இது கூத்தாடிகளின் காலம். அதனால்த்தான் கூட்டமைப்பு புலிவேடமிட்டது. அனந்தி புலியானார்.
உண்மையை சொன்னால் அனந்தி விடுதலைப்புலிகளின் பிரதிநிதியேயல்ல. அவர் இரண்டே இரண்டு தரப்பின் பிரதிநிதிதான். ஓன்று காணாமல் போனவர்கள்.
மற்றது, காணாமல் போகச் செய்தவர்கள். இரண்டு எதிரெதிர் தரப்பின் பிரதிநிதியாக பாத்திரம் வகிக்க வேண்டிய முரணை காலம் அவருக்கு உருவாக்கியுள்ளது.
(தேவை கருதி இக் கட்டுரை மீள்பிரசும் செய்யப்படுகிறது.)