சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் தலைகள் துண்டிக்கப்பட்டு, அந்தத் தண்டனை திங்கள்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, இந்த ஆண்டில் மட்டும் சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

சவூதி அரேபியாவுக்கு தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளைக் கடத்தி வந்ததாக சிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கும், கொலைக் குற்றத்தில் ஈடுபட்டதாக சவூதி அரேபியர் ஒருவருக்கும் திங்கள்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

சவூதி அரேபியாவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாக உயர்ந்திருப்பதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு முழுவதும் 87 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் பாதியிலேயே அந்த எண்ணிக்கையைக் கடந்து, தற்போது 100 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது சர்வதேச மனித உரிமை அமைப்புகளை கவலையடையச் செய்துள்ளது.

சவூதி அரேபியாவில் கொலைக் குற்றவாளிகள் மட்டுமின்றி, போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டப்படுபவர்களுக்கும் தலையைத் துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது.

இது சர்வதேச சட்டத்துக்கு எதிரானது எனக் கூறப்படுகிறது.

முன்கூட்டியே திட்டமிட்டு, கொடிய முறையில் கொலைக் குற்றம் செய்தவர்களுக்கு மட்டுமே மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சர்வதேசச் சட்டம் வரையறை செய்துள்ளது.

ஆனால், சவூதி அரேபியச் சட்டத்தின்படி, கொலை மட்டுமின்றி, பாலியல் பலாத்காரம், கொள்ளை, போதைப் பொருள் கடத்தல், இஸ்லாம் மதத்தைக் கைவிடுவது ஆகிய குற்றங்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

சவுதி வரலாற்றிலேயே அதிகபட்சமாக கடந்த 1995-ம் ஆண்டு 192 பேரின் தலைகளை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டு நிலைமையை வைத்து பார்க்கும்போது அந்த சாதனையை இந்த ஆண்டு மிஞ்சி விடக்கூடும் என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version