சடலம் இருந்த இடத்திற்கு அருகே ஒற்றையடி பாதையிருந்தது. அந்த பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணியும் சடலத்திற்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியும் இருந்தது.
கைகள் இரண்டும் தலைக்குமேல உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன.
இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவரது கழுத்துப்பட்டி கழுத்தை இறுக்கிய வண்ணம் காணப்பட்டது.
மரத்தில் கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன என்று மாணவி வித்தியா படுகொலை வழக்கில் நேற்று சாட்சியமளித்த ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியிருந்த பொலிஸ் இன்பெக்டர் காமினி ஜயவர்த்தன தெரிவித்தார்.
நான் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றுகின்றேன்.
இந்த சம்பவம் இடம்பெற்ற போது நானே குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியாவேன் என சாட்சியத்தை ஆரம்பித்த காமினி ஜயவர்தனவிடம் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜரான சட்டவாதி குமார் ரத்தினத்தால் 2015.05.14 ஆம் திகதி நடந்த விடயங்களை தெளிவுபடுத்துமாறு வினவப்பட்டது.
இதனையடுத்து காமினி ஜயவர்தன பொலிஸ் பதிவுப் புத்தகத்தையும் கையில் வைத்துக் கொண்டு முழுமையாக சாட்சியமளிக்க ஆரம்பித்தார்.
எமக்கு காலை 8.15 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு வந்த தொலைபேசி அழைப்பூடாகவே தகவல் கிடைத்தது. அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கியூ.பி.பெரேரா, 17 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் பெரேராவின் தலைமையில் நானும் குழுவினரும் அங்கு சென்றோம். பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அந்த இடம் இருந்தது. புங்குடுதீவு – ஆலடி சந்தியில் இருந்து இடது புறத்தே அந்த இடம் உள்ளது.
பாதையில் இருந்து 500 மீற்றர் தூரத்துக்குள்ளேயே அனைத்தும் இடம்பெற்றிருந்தது. பாதையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் சடலம் கிடந்தது.
நாம் அந்த இடத்துக்கு சென்ற போது மழை பெய்து ஓய்ந்திருந்தது. அத்துடன் ஜே/28 கிராம சேவகரும் அங்கிருந்தார். அங்கு பலர் கூடியிருந்தனர்.
சடலம் சிவலோகநாதன் வித்தியா என அவரின் சகோதரர் எம்மிடம் அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தை குற்றப் பிரதேசமாக பிரகடனம் செய்து பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சடலம் இருந்த இடத்துக்கு அருகே ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தது. அந்த பாதை சேறாகியிருந்தது.
அந்த பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற பாதணி ஒன்று இருந்தது. சடலத்துக்கு அருகே மாணவியின் துவிச்சக்கர வண்டியிருந்தது.
அந்த துவிச்சக்கர வண்டியின் பின் பக்கமாக மாணவியின் புத்தகப் பையும் கிடந்தது. அதன் அருகே மாணவியின் சிவப்பு நிற குடையும் காணப்பட்டது. சடலமானது முகம் வானத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும்படியாக இருந்தது.
கைகள் இரண்டும் தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. தலை முடி கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரிப்பன் பட்டியினாலேயே அது கட்டப்பட்டிருந்தது.
மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன. உள்ளாடைகளும் கழற்றப்பட்டிருந்தன.
மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவரின் கழுத்துப் பட்டி கழுத்தை இறுக்கிய வண்ணம் இருந்தது. அலரி மரத்தில் கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன. வாய்க்குள் ஏதோ திணிக்கப்பட்டிருந்தது.
நிர்வாணமான சடலத்தின் மேல் பகுதி கழற்றப்பட்ட சீருடையால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த சீருடையில் இரத்தக் கறைகள் இருந்தன. வயிறும் கீழ் இரகசிய பிரதேசமும் அம்மாணவி அணிந்திருந்த கழற்றப்பட்ட கீழாடையினால் ( உட் பாவாடை ) மறைக்கப்பட்டிருந்தன. கால்கள் சுமார் 180 பாகை கோணத்தில் விரிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தன.
இடது கால் மாணவியின் சீருடையின் வெள்ளை நிற இடுப்புப் பட்டியினால் கட்டப்பட்டிருந்தது. மற்றைய கால் அவரின் கறுப்பு நிற மார்புக் கச்சையின் பட்டிகளால் கட்டப்பட்டிருந்தது.
இந் நிலையில் நான் சடலத்தை கறுப்பு நிற பொலித்தீனால் மூடினேன். பின்னர் யாழ். தடயவியல் பிரிவினருக்கு தகவல் வழங்கினோம். அத்துடன் வித்தியாவின் தாய், அண்ணன் உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துகொண்டோம்.
ஸ்தலத்தில் இருந்த தடயப் பொருட்களையும் கைப்பற்றினோம். யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தல்களுக்கு அமைய நாம் சடலத்தை சட்ட வைத்திய அதிகாரியின் சோதனைக்கு உட்படுத்தவும் உதவினோம். பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய செயற்பட்டோம். அது தொடர்பில் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றுக்கு அறிக்கையும் சமர்ப்பித்தோம்.
நீதிவானின் கட்டளைக்கு அமைய சடலத்தை பிரேத பரிசோதனைக்ளுக்காகவும் ஒப்படைத்தோம். அதன்படி கைப்பற்றப்பட்ட தடயப் பொருட்களை நீதிமன்றுக்கு கையளிக்கின்றேன். எனக் கூறி மாணவி வித்தியா அணிந்திருந்ததாக கூறப்படும் உள்ளாடைகள் உள்ளிட்ட பல தடயப் பொருட்கள் மன்றுக்கு ஒப்படைக்கப்பட்டன.
சட்ட வைத்திய அதிகாரி மயூரன் சாட்சியம்
இதனையடுத்து யாழ்.போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி யூ.மயூரன் சாட்சியமளித்தார். அவர் சந்தேக நபர்களின் இரத்த மாதிரிகள் அனைத்தையும் அறிக்கையுடன் மன்றுக்கு சமர்ப்பித்ததுடன் தடயப் பொருட்களாக வித்தியாவின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட நான்கு மாதிரிகளையும் குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தவாறே மன்றுக்கு சமர்ப்பித்தார்.
இதனையடுத்தே ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் தற்போதைய மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுமான பிரதான பொலிஸ் பரிசோதகர் கியூ.பீ.பெரேரா சாட்சியமளித்தார்.
ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர் நாம் மூவரைக் கைது செய்தோம். பூபாலசிங்கம் இந்திரகுமார், பூபாலசிங்கம் ஜெயகுமார் , பூபாலசிங்கம் தவகுமார் ஆகியோரையே அவ்வாறு கைது செய்தோம்.
அவர்கள் பிரதிவாதிகள் கூட்டில் முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவதாக உள்ளனர். (அடையாளமும் காட்டுகின்றார்.). அவர்களை கைது செய்து விசாரித்த போது ஒரு சட்டையை நாங்கள் கைப்பற்றினோம்.
அதன் பின்னர் அதில் இரத்தக் கறை இருந்தது. தொடர்ந்து நாம் தேடிய போது இன்னுமொரு மஞ்சள், கறுப்பு நிறம் கலந்த டீ சேட்டையும் கைப்பற்றினோம்.
அதில் தோள்கட்டுப்பகுதியில் சிவப்பு நிற கறை ஒன்று இருந்தது. அவ்விரண்டையும் நான் மன்றுக்கு சமர்ப்பிக்கின்றேன் என சான்றுப் பொருட்களை சமர்ப்பித்தார்.
இதனையடுத்து சாட்சிக் கூண்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனிதப் படுகொலைகள் தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிஸாந்த டீ சில்வா ஏறி சாட்சியமளித்தார்.
நான் 18 வருடங்களாக குற்றப் புலனாய்வுப் பிரிவில் சேவையாற்றுகின்றேன்.
தற்போது நான் பொலிஸ் பரிசோதகர் தர அதிகாரி. கூட்டுக் கொள்ளை தொடர்பிலான பிரிவின் பொறுப்பதிகாரி.
இந்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாரே ஆரம்ப கட்ட விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் தற்போது நாம் விசாரணைகளை செய்து வருகின்றோம்.
இந் நிலையில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையம், யாழ்.பொலிஸ் நிலையம், சட்ட வைத்திய அதிகாரியிடம் உள்ள சான்றுகள், இன்னும் இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் உள்ள சான்றுகளை அரச இரசாயன பகுப்பாய்வாளருக்கு அனுப்புமாறு நான் மன்றுக்கு கோரிக்கை முன்வைக்கின்றேன்.
அந்த சான்றுகளை அரச இரசாயன பகுப்பாய்வாளர் ஒப்பிட்டுப் பார்த்து சந்தேக நபர்களினது டீ.என்.ஏ.உடனான தொடர்பு குறித்து எமக்கு அறிக்கையிட வேண்டும்.
அது தொடர்பில் ஒரு வினா பத்திரத்தையும் இணைத்துள்ளேன். அது 5 கேள்விகளைக் கொண்டது. அந்த கேள்விகளுக்கான பதிலாக பரிசோதனை முடிவுகள் குறிப்பிடப்பட வேண்டும்.
அத்துடன் சந்தேக நபர்களது வங்கிக் கணக்குகளும் அவர்களது உறவினர் களது என சந்தேகிக்கப்படும் இரு வங்கிக் கணக்குகளையும் பரிசீலிக்க எமக்கு அனுமதி வேண்டும். என்றார்.
இதனையடுத்து நேற்றைய மரண விசாரணை நிறைவுக்கு வந்த நிலையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேலதிக விசாரணை அறிக்கை மன்றுக்கு சமர்ப்பிக்கப் பட்டு சந்தேக நபர்கள் ஒன்பது பேரையும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கவும் அனுமதி பெறப்பட்டது.