ரணில் ஆட்சியைக் கவிழ்த்து நிமல் தலைமையில் புதிய அரசு அமைக்க சுதந்திரக் கட்சி திட்டம்
பொதுத் தேர்தலுக்கு முன்னதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களுடனான அவசரச் சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்றது.
20 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பில் எழுந்துள்ள நெருக்கடி நிலை மற்றும் 19 ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து எழுந்துள்ள நெருக்கடிகள் பற்றியும் இன்றைய சந்திப்பில் ஆராயப்பட்டது.
அத்துடன் தற்போதைய அரசியல் நிலைமைகள் தொடர்பாகவும் சுதந்திரக் கட்சிக்குள் உருவாகியுள்ள முறுகல்களை நிவர்த்திப்பது குறித்தும் இன்றைய சந்திப்பில் கலந்துரையாடித் தீர்வுகாண முனைப்புக்காட்டப்படது.
கொழும்பு7 இல் உள்ள இலங்கை மன்றக்கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் கட்சி முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பதவியிலிருந்து நீக்குவது எனவும், அதன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் நிமர் சிறிபால டி சில்வாவைப் பிரதமராகக் கொண்ட அரசாங்கத்தை அமைப்பது எனவும் இச்சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளது.
அதன்பின்னரே பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தலை நடத்த வேண்டும் எனவும் இந்தக் கூட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டதாக கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகிந்தவுடன் பேச்சு நடத்த 6 உறுப்பினர் கொண்ட குழு: சுதந்திரக் கட்சி தீர்மானம்
16-05-2015
மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுக்களை நடத்தி பொதுத் தேர்தலுக்கு முன்னர் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக்குழு ஒன்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுவின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவல்லை.