∗ வித்தியாவின் கொலை விவகாரம் வேண்டுமென்றே யாழ். பிராந்தியத்தில் அமைதியின்மை குழப்புவதற்காக வெளிநாட்டு சக்திகளால் திட்டமிட்டு செய்யப்பட்டதா?
∗ பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த படுகொலை வழக்கின் விசாரணைகள் கொண்டு செல்லப்பட்டதன் காரணம் என்ன??
சிவலோகநாதன் வித்தியா. இன்று இந்த பெயரை அறியாதவர்கள் இருக்க முடியாது. பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் வித்தியாவின் சடலமானது கடந்த மே மாதம் 14 ஆம் திகதி மீட்கப்பட்டது.
அதனுடன் தொடர்புடைய ஒன்பது சந்தேக நபர்கள் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நான்காம் மாடியில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.
உண்மையில் தற்போது, இந்த பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விசாரணைகள் மற்றொரு கோணத்திற்கு திருப்பப்பட்டுள்ளது.
இதனையே பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைகள் இடம்பெறுவது உறுதி செய்கின்றது.
அப்படி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் இந்த படுகொலை வழக்கின் விசாரணைகள் இடம்பெறுவதானது உண்மையில் ஆரோக்கியமான விடயமாகும்.
அதனூடாக வித்தியா பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்படுவதற்கான உண்மைக் காரணி, அதனுடன் தொடர்புபட்டவர்கள் அவர்களது பின்னணி, கொடூர சம்பவத்தின் பின்னணி என அனைத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளக் கூடியதாக இருக்கும்.
சாதாரணமாக கைது செய்யப்பட்டதன் பின்னர் 24 மணி நேரமோ அல்லது 48 மணி நேரமோ தடுத்து வைத்து இத்தகைய பரந்த விசாரணையொன்றை முன்னெடுப்பது என்பது கடினமானது.
30 நாள் தடுப்புக் காவலில் வைத்து சந்தேக நபர்களை விசாரிக்கும் போது பல விவகாரங்கள் தொடர்பிலும் கொடூரத்தின் பின்னணி தொடர்பிலும் வெளிப்படுத்த முடியுமாக இருக்கும்.
இவர்களில் சிலர் தம் மீதான குற்றச் சாட்டுக்களை மறுக்கின்றனர்.
எனினும் இந்த ஒன்பது பேர் தொடர்பிலும் பொலிஸாரின் சந்தேகம் பலமாக உள்ள நிலையில் இன்னும் சிலருக்கும் இதனுடன் தொடர்பு உள்ளதாக அவர்கள் சந்தேகிக்கின்றனர்.
அதனல் தற்போது சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்கும் போது அந்த தகவல்களை பொலிஸார் வெளிப்படுத்திக்கொள்ள எதிர்பார்க்கின்றனர்.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச் சட்டத்தின் 2 (1) ஏ பிரிவின் கீழேயே தற்போது இந்த ஒன்பது சந்தேக நபர்களும் தடுப்பில் எடுக்கப்பட்டுள்ளனர்.
வாய் மொழி மூலம், சைகைகள், காட்சிகள் அல்லது வேறு எந்தவொரு முறைகளிலும் வன்முறைகளை தூண்டுவோர் தொடர்பில் இந்த சட்டப் பிரிவு பேசுகின்றது.
அப்படியானால் வித்தியாவின் கொலை விவகாரம் வேண்டுமென்றே இன நல்லுறவுகளை சீர்குலைத்து, யாழ். பிராந்தியத்தில் அமைதியின்மை ஒன்றை ஏற்படுத்த சந்தேக நபர்கள் முனைந்தனரா என்பது குறித்து பலத்த சந்தேகம் புலனாய்வுப் பிரிவினருக்கு இருக்கின்றது.
ஏற்கனவே வித்தியாவின் படுகொலைக்கு பின்னர் யாழ்.பிராந்தியத்தில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகள் கூட இவ்வாறான சந்தேகங்களுக்கு காரணமாக இருக்கலாம்.
அந் நிலைமைகள் ஏற்பட பிரதான காரணமாக கருதப்படும் வித்தியாவின் படுகொலை தொடர்பிலான சந்தேக நபர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணைகளுக்காக எடுக்கப்பட்டுள்ளமை கொலை விசாரணையின் ஒரு திருப்பமாகவே கருதப்படவேண்டியதாகும்.
ஆரம்பத்தில் இந்த படுகொலை விவகாரம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் பின்னர் அவ்விசாரணைகள் யாழ்.பிரதிப் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கு அமைய அமைக்கப்பட்ட உதவி பொலிஸ்பரிசோதகர் ஒருவரின் கீழான விசேட குழுவிடம் கையளிக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கீழ் இடம்பெற்ற விசாரணைகளில் இருவர் முதல் மூன்று சந்தேக நபர்களும் விசேட பொலிஸ் குழுவின் விசாரணைகளில் 5 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்ட நிலையில் ஒன்பதாவது சந்தேக நபராக கருதப்படும் சுவிஸ் குமார் என அறியப்படும் சசிகுமார் வெள்ளவத்தையில் வைத்து வெள்ளவத்தை பொலிஸாரினாலும் கைது செய்யப்பட்டிருந்தனர்.
எனினும் ஒன்பதாவது சந்தேக நபர் வெள்ளவத்தையில் கைதாக முன்னரேயே பொது மக்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் கொடுத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், பொலிஸாருக்கு எதிரான விசேட விசாரணையொன்று பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டே வருகின்றது.
அதனைவிட நீதிவானின் உத்தரவுக்கு அமைய புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழுவொன்றும் ஒன்பதாவது சந்தேக நபர் தொடர்பில் விசேட விசாரணையொன்றினை முன்னெடுத்துள்ளது.
இத்தகைய கைதுகளின் பின்னரேயே வித்தியா படுகொலை விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கு அமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை மற்றும் மனிதப் படுகொலை தொடர்பிலான விசாரணைப் பிரிவுக்கு கையளிக்கப்பட்டது.
அந்த பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் நிசாந்த டீ சில்வா தலைமையிலான விசேட பொலிஸ் குழு இது தொடர்பில் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
இந் நிலையிலேயே இந்த படுகொலை தொடர்பிலான விசாரணைகள் பயங்கரவாத செயலாக கருதப்பட்டு பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக வித்தியா படுகொலை செய்யப்பட்ட விதம் மிகவும் கொடூரமானவை.
ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்ற வித்தியாவின் மரண விசாரணைகளின் போது இது தொடர்பில் முதன் முதலில் விசாரணைகளை நடத்திய ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி ஜயவர்தன அளித்த சாட்சியம் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
எமக்கு காலை 8.15 மணியளவில் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசி ஊடாகவே தகவல் கிடைத்தது.
அப்போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகர் கிவ்.பி.பெரேரா, 17 வயது மாணவி ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக என்னிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து பிரதான பொலிஸ் பரிசோதகர் பெரேராவின் தலைமையில் நானும் குழுவினரும் அங்கு சென்றோம்.
பொலிஸ் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் அந்த இடம் இருந்தது. புங்குடு தீவு ஆலடி சந்தியில் இருந்து இடது புறத்தே அந்த இடம் உள்ளது.
பாதையில் இருந்து 500 மீற்றர் தூரத்துக்குள்ளேயே அனைத்தும் இடம்பெற்றிருந்தன. பாதையில் இருந்து 15 மீற்றர் தூரத்தில் சடலம் கிடந்தது.
நாம் அந்த இடத்துக்கு சென்ற போது மழை பெய்து ஓய்ந்திருந்தது. அத்துடன் ஜே /28 கிராம சேவகரும் அங்கிருந்தார். அங்கு பலர் கூடியிருந்தனர்.
சடலம் சிவலோகநாதன் வித்தியா என அவரின் சகோதரர் எம்மிடம் அடையாளம் காட்டினார். அதனைத் தொடர்ந்து அப்பிரதேசத்தை குற்றப் பிரதேசமாக பிரகடனம் செய்து பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சடலம் இருந்த இடத்துக்கு அருகே ஒற்றையடிப்பாதை ஒன்று இருந்தது. அந்த பாதை சேறாகியிருந்தது.
அந்த பாதையின் வலது புறத்தே வெள்ளை நிற சப்பாத்து ஒன்று இருந்தது. சடலத்துக்கு அருகே மாணவியினது துவிச் சக்கர வண்டியிருந்தது.
அந்த துவிச் சக்கர வண்டியின் பின் பக்கமாக மாணவியின் புத்தகப் பையும் கிடந்தது. அதன் அருகே இளம் சிவப்பு நிறத்தினாலான மாணவியின் குடையும் காணப்பட்டது. சடலமானது முகம் வானத்தைப் பார்த்த வண்ணம் இருக்கும் படியாக இருந்தது.
கைகள் இரண்டும் தலைக்கு மேலே உயர்த்தப்பட்டு கட்டப்பட்டிருந்தன. தலை முடி கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரிப்பன் பட்டியினாலேயே அது கட்டப்பட்டிருந்தது.
மாணவியின் ஆடைகள் அகற்றப்பட்டிருந்தன. உள்ளாடைகளும் கழற்றப்பட்டிருந்தன.
மாணவியின் இடது காதிலிருந்து இரத்தம் வழிந்திருந்தது. அவரின் கழுத்துப் பட்டி கழுத்தை இறுக்கிய வண்ணம் இருந்தது. அலரி மரத்தில் கால்கள் இழுத்து கட்டப்பட்டிருந்தன. வாய்க்குள் ஏதோ திணிக்கப்பட்டிருந்தது.
நிர்வாணமான சடலத்தின் மேல் பகுதி கழற்றப்பட்ட சீருடையால் மறைக்கப்பட்டிருந்தது. அந்த சீருடையில் இரத்தக் கறைகள் இருந்தன.
வயிறும் கீழ் இரகசிய பகுதியும் அம்மாணவி அணிந்திருந்த கழற்றப்பட்ட கீழாடையினால் ( உட் பாவாடை ) மறைக்கப்பட்டிருந்தன. கால்கள் சுமார் 180 பாகை கோணத்தில் விரிக்கப்பட்டு கட்டப்பட்டிருந்தன.
இடது கால் மாணவியின் சீருடையின் வெள்ளை நிற இடுப்புப் பட்டியினால் கட்டப்பட்டிருந்தது. மற்றைய கால் அவரின் கறுப்பு நிறத்தினாலான மார்புக் கச்சையின் பட்டிகளால் கட்டப்பட்டிருந்தன.
பின்னர் யாழ். தடயவியல் பிரிவினருக்கு தகவல் வழங்கினோம். அத்துடன் வித்தியாவின் தாய், அண்ணண் உள்ளிட்டவர்களிடம் வாக்கு மூலங்களையும் பதிவு செய்துகொண்டோம் என அந்த பொலிஸ் பரிசோதகர் சாட்சியமளித்திருந்தார்.
அந்த சாட்சியங்களின் படி வித்தியா மிகக் கொடூரமான முறையிலேயே பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.
மரணசாட்சியத்தின் போது வித்தியாவின் அண்ணன் நிசாந்தன் தனது தங்கை சடலமாக கிடந்த முறைமையை விபரிக்கச் சொன்னபோது நெஞ்சுவலியால் துடித்து வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது, சாட்சியம் அளிக்கும் போது தாய் சரஸ்வதியும் மயங்கி விழுந்தமையும் வித்தியாவின் கொடூர கொலையில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
தற்போது வித்தியாவின் படுகொலை தொடர்பிலான விசாரணைகளை வெறுமனே தனியான கொலையாகவோ அல்லது பலாத்கார விடயமாக மட்டுமோ நோக்க முடியாது.
இதன் பின்னணியில் திட்டமிட்ட செயற்பாடுகள் இருக்கலாம். மேலும் சந்தேக நபர்களும் இருக்கலாம். இந்த தகவல்களே சந்தேக நபர்களுக்கு எதிரான பயங்கரவாத தடைச் சட்டத்தின் 30 நாள் தடுப்புக் காவல் தீர்மானமும் உத்தரவும் எமக்கு சொல்லும் செய்தியாகும்.
எது எப்படி இருப்பினும் யாரும் இல்லாத போது கல்வி கற்கச் சென்ற மாணவியை அடர்ந்த காட்டுக்குள் கொடூரமாக வன்புணர்ந்து படுகொலை செய்த கொடூரர்களை சட்டத்தின் எந்தவொரு பிரிவூடாகவேனும் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்பதே பொது மக்களின் எதிர்பார்ப்பாகும்.
எம்.எப்.எம்.பஸீர்