ஆபிரிக்க நாடான கமெரூனினிலுள்ள பாபூட் பிராந்திய மன்னரான இரண்டாம் அபும்பிக்கு சுமார் 100 மனைவியர் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த மனைவியரில் 72 பேர் அவரது தந்தையின் மனைவியர் என்பது குறிப்பிடத்தக்கது.
கமெரூனில் பலதார திருமணங்கள் சட்டபூர்வமாகவுள்ள நிலையில் பாரம்பரிய கிராமப்புற பிரதேசங்களிலுள்ள ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்வது வழமையாகவுள்ளது.
அங்கு ஒருவர் எத்தனை திருமணம் செய்துகொள்வது என்பதில் வரையறை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தந்தை 1968 ஆம் ஆண்டு உயிரிழந்ததையடுத்து இரண்டாம் அபும்பி பாபூட் பிராந்திய மன்னரானார்.
அங்கு மன்னர் ஒருவர் இறக்கும் பட்சத்தில் புதிதாக மன்னராகப் பொறுப்பேற்பவர் அவரது மனைவியர் அனைவரையும் தனது மனைவியராக பொறுப்பேற்பது வழமையாகும்.
இந்நிலையில், தனது தந்தையின் மரணத்தையடுத்து ஆட்சிப்பொறுப்பை ஏற்ற இரண்டாம் அபும்பி, தனது தந்தையின் மனைவியரான முன்னாள் மகாராணிகளை தனது மனைவியராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதன் மூலம் அவர் மொத்தம் 500 பிள்ளைகளுக்குத் தந்தையானார்.
இது தொடர்பில் இரண்டாம் அபும்பியின் மூன்றாவது மனைவியான கொன்ஸ்ரன்ஸ் மகாராணி தெரிவிக்கையில், மேற்படி பாரம்பரிய பலதார மனைவியர் நடைமுறையானது வெற்றிகரமானதாக அமைந்துள்ளதாக கூறினார்.