இடதுசாரி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாதவர்களும், அதே நேரம் தாம் தீவிர வலதுசாரிகள் என்பதை மறைத்துக் கொள்ளும் பலர் இன்றும் உள்ளனர். உலகில் உள்ள எல்லா அரசியல் அமைப்புகளிலும் இடதுசாரியம், வலதுசாரியம் இருக்கும்.

வலதுசாரிக் கட்சிகளுக்குள் இடதுசாரியம் இருக்கும். இடதுசாரிக் கட்சிகளுக்குள் வலதுசாரியம் இருக்கும். (அரசியல்) விஞ்ஞானமும் அப்படித்தான் வரையறுக்கிறது.

“வியாபாரிகளால் வீழ்ந்த என் தலைவனுக்கு வீர வணக்கம்…” என்று, புலிகளின் தீவிர விசுவாசி ஒருவர் தனது தலைவர் பிரபாகரனின் மரணத்திற்கு அஞ்சலி செலுத்தி வந்தார். அதில் உண்மையும் இருக்கிறது.

ஆரம்பத்தில் தன்னை ஒரு இடதுசாரி இயக்கமாகக் காட்டிக் கொண்ட புலிகள், பிற்காலத்தில் வலதுசாரிகளாகி, சிறு முதலாளிகளையும் வளர்த்து விட்டதன் விளைவு அவர்களது அழிவுக்கு வித்திட்டது.

ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் இயக்கம் ஒன்றை கட்டி வளர்ப்பது அதிகச் செலவு பிடிக்கும் விடயம். உலகத் தீவிரவாத இயக்கங்கள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கைகளை படித்தால் ஓர் உண்மை புலனாகும்.

அந்த இயக்கங்கள் எவ்வாறு தமது நிதித் தேவையை பூர்த்தி செய்து கொள்கின்றன என்று விபரமாக ஆராய்ந்திருப்பார்கள்.

புலிகளுக்கு எங்கிருந்து நிதி கிடைக்கிறது, அது எந்த வகையில் பரிமாற்றம் செய்யப்படுகின்றது என்பன போன்ற முழு விபரங்களையும் சி.ஐ.ஏ. போன்ற மேற்கத்திய உளவு நிறுவனங்கள் கணித்து வைத்திருந்தன.

அது அவ்வளவு கடினமான விடயமாக இருக்கவில்லை. பெருமளவு நிதி வழங்கிய புலம்பெயர்ந்த தமிழர்கள் மேற்கத்திய நாடுகளில் வாழ்ந்தனர்.

வர்த்தக முயற்சிகளில் ஈடுபட்ட புலிகளின் முகவர்கள், சர்வதேச முதலாளித்துவ பொருளாதார வலைப்பின்னலை பயன்படுத்திக் கொண்டார்கள்.

கொழும்பிலும் புலிகளின் நிதியில் உருவாக்கப்பட்ட வர்த்தக நிறுவனங்கள் இயங்கின. சில தனியார் நிறுவனங்களிலும், கொழும்பு பங்குச் சந்தையிலும் புலிகளின் முதலீடு இருந்ததாக சந்தேகிக்கப் பட்டது. இதிலே முக்கியமான விடயம், சர்வதேச மூலதனத்திற்குள் அகப்பட்ட பணத்தின் மூலத்தை கண்டுபிடிப்பதும் தடை செய்வதும் மிகவும் இலகு.

அது மட்டுமல்ல, புலிகள் உருவாக்கிய முதலாளிகள், என்ன தான் தீவிர புலி விசுவாசிகளாக வேஷம் போட்டாலும், பணத்தின் மந்திர சக்திக்கு கட்டுப்பட்டிருந்தனர்.

இறுதியில், சந்தர்ப்பம் பார்த்து, தம்மை வளர்த்து விட்ட புலிகளை காட்டிக் கொடுக்கவும், கைவிடவும் தயங்கவில்லை. என்ன இருந்தாலும், முதலாளிகளின் பிறவிக் குணம் மாறுமா?

எது எப்படி இருந்த போதிலும், புலிகளால் இடதுசாரியத்தை முற்றாக கழற்றி விட முடியவில்லை. “துப்பாக்கி முனையில் இருந்து அதிகாரம் பிறக்கிறது….”, “மரம் ஓய்வை விரும்பினாலும் காற்று அதை விடுவதில்லை…” போன்ற மாவோவின் மேற்கோள்கள், தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைகளில் எதிரொலித்தன.

“முதலில் கிராமப் புறங்களை விடுதலை செய்து, நகரங்களை சுற்றி வளைக்கும்” மாவோயிச போர்த்தந்திரம் புலிகள் நடத்திய போர்களின் அடிநாதமாக இருந்தது.

சர்வதேச கம்யூனிசப் புரட்சியாளர்களினால் குறிவைக்கப் படும், பெற்றோலிய குதங்கள், மின் உற்பத்தி நிலையம், துறைமுகம், விமான நிலையம் போன்ற பல பொருளாதார இலக்குகளும் புலிகளின் தாக்குதல்களுக்கு இலக்காகின.

வன்னியில் இரண்டு தசாப்த காலமாக இருந்த, புலிகளின் “de facto தமிழீழம்” சர்வதேச மூலதனம் ஊடுருவ முடியாத பகுதியாக இருந்தது.

நிச்சயமாக, தமது இடதுசாரி அரசியல் நிலைப்பாட்டில் இருந்து புலிகள் அதை தடுக்கவில்லை. வர்த்தக நிறுவனங்கள் மீது செயற்கையான வரி விதிப்பதன் மூலம் தான் பெருமளவு வருமானத்தைப் பெற்றுக் கொண்டனர்.

ஆயினும், இரகசியங்கள் தெரிந்து விடும், பொருளாதாரம் தமது கைகளை விட்டு சென்று விடும் என்ற எச்சரிக்கை உணர்வும் காரணமாக இருந்தது. அந்நிய மூலதனத்தை நிர்வகித்த முதலாளிகள், புலிகள் அளவுக்கு அதிகமான வரி அறவிடுவதாக குற்றஞ் சாட்டினார்கள்.

கொக்கோ கோலா(அல்லது பெப்சி கோலா) நிறுவனம் மட்டும், சில வருட காலம் புலிகள் கேட்ட வரியை கொடுத்து விட்டு வன்னிக்குள் கடை விரித்திருந்தது.

ஆயினும், இறுதிப்போர் தொடங்குவதற்குள் அவர்களும் பின்வாங்கி விட்டிருந்தனர். கொக்கோ/பெப்சி கோலாக்களின் தாயகமான, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேற்பார்வையின் கீழ், பேரழிவை ஏற்படுத்திய யுத்தம் நடந்தது.

போர் முடிந்த பின்னர், சிறிலங்கா இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து விட்டு, பெப்சி கோலா மீண்டும் அதே பிரதேசத்தில் விற்பனையை தொடர்ந்து செய்கிறது.

புலிகளுக்கு கொடுத்த பணத்தை விட, இராணுவத்திற்கு கொடுக்கும் பணம் பல மடங்கு குறைவானது. இதனால் சந்தைப் படுத்தும் செலவினமும் குறைகிறது.

எந்த முதலாளியும் எப்படி செலவைக் குறைக்கலாம் என்று தான் யோசிப்பான். அதற்குப் பெயர் தான் முதலாளித்துவம்.

untitled
புலிகள் ஒரு தடவை, தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளில் “தமிழீழ நாணயம்” அறிமுகப் படுத்தவிருப்பதாக கூறி வந்தனர்.

சிலநேரம், தமிழீழ ரூபாய் நோட்டுகள் அச்சிடப் பட்டிருந்தாலும், எந்தத் தருணத்திலும் புழக்கத்திற்கு விடப் படவில்லை. அதற்குக் காரணம், தமிழ் மேட்டுக்குடி மற்றும் முதலாளிகளின் எதிர்ப்பு என்று நம்பப் படுகின்றது.

தமது சொத்துக்கள் ஒரே நாளில் காணாமல் போய்விடும் என்று அவர்கள் அஞ்சி இருக்கலாம். “100 தமிழீழ ரூபாய் = 120 சிறிலங்கா ரூபாய்” என்று செயற்கையான பெறுமதி நிர்ணயித்திருந்தமை குறிப்பிடத் தக்கது.

முதலாளித்துவ பொருளாதாரத்தில், நாணயத்தின் பெறுமதியையும் சந்தை தான் தீர்மானிக்கிறது. வட கொரியா போன்ற, “ஸ்டாலினிச – சர்வாதிகார நாடுகள்” தான், நாணயப் பரிமாற்றத்தை தாம் நினைத்தவாறு தீர்மானிக்கின்றன. (அமெரிக்க டாலருடனான, வட கொரிய வொன்னின் பெறுமதி, செயற்கையாக கூட்டி வைக்கப் பட்டுள்ளது.

சந்தையில் அது பல மடங்கு குறைவானது. கருப்புச் சந்தையில் மட்டும் உண்மையான பெறுமதி தெரிய வரும்.) ஆகவே, தீவிர வலதுசாரிகளான போலித் தமிழ் தேசியவாதிகள் சிலர், வட கொரியாவை வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

இடதுசாரிகளின் கனவான “தமிழீழ வைப்பகம்” என்ற தனியான வங்கித் துறை, புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் சிறப்பாக இயங்கி வந்தது.

இருப்பினும், சிறிலங்கா அரசுக்கு சொந்தமான இலங்கை வங்கி, மக்கள் வங்கிக் கிளைகளும் அப்படியே இருந்தன.

மக்கள் தமது பணத்தை தமிழீழ வங்கிகளில் வைப்புச் செய்ய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யப் பட்டது. ஈழத்திற்கு வெளியே “தமிழ் தேசிய இன மான உணர்வு” உறுதியாக இருப்பது போன்று தெரிந்தாலும், தமிழீழ வங்கிகளில் தமது பணத்தை இட்டவர்களின் எண்ணிக்கை குறைவு. தவிர்க்க முடியாத காரணங்களினால் “சிங்கள வங்கிகளின்” சேவைகளை தான் அதிகமாக பயன்படுத்தினார்கள்.

ஏன் என்ற கேள்விக்கான விடை மிகவும் எளிது. வெளிநாட்டில் வாழும் உறவினர் அனுப்பும் பணத்தை எந்த வங்கியில் பெற்றுக் கொள்வது? உலகில் எந்த நாட்டிலும் அங்கீகரிக்கப் படாத தமிழீழ வங்கிக்கு, யாரும் பணம் அனுப்ப முடியாது.

இலட்சக் கணக்கான ஈழத் தமிழர்களின் உறவினர்கள், மேற்கத்திய நாடுகளில் வாழ்கிறார்கள் என்பதை இங்கே குறிப்பிடத் தேவையில்லை. போர் நடந்த காலங்களில், வெளிநாட்டுப் பணம் தான் உள்ளூர் மக்கள் பலரின் வயிற்றை நிரப்பப் பயன்பட்டது.

அந்நிய செலாவணி தான், உள்ளூர் பொருளாதாரத்தின் உந்துசக்தியாகவும் இருந்தது. தமிழ் மக்களுக்கு வந்த வெளிநாட்டுப் பணத்தை மாற்றிக் கொடுத்த சிறிலங்கா வங்கிகள் தான், மறுபக்கத்தில் அரசின் போர்ச் செலவினங்களுக்கு கடன் வழங்கின. மூலதனத்தின் தன்மைகளில் அதுவும் ஒன்று. நாய் விற்ற காசு குரைக்காது.

இலங்கையில் இருக்கும் அமெரிக்க தூதுவராலயம் அனுப்பிய இரகசிய கேபிள்களில் தமிழீழ வைப்பகம் பற்றியும் குறிப்பிடப் பட்டிருந்தது. (பார்க்க: விக்கிலீக்ஸ்) அமெரிக்கா, வெளிப்படையாக சிறிலங்காவின் வங்கிகளை ஆதரித்ததை கேபிளில் வாசிக்கக் கூடியதாக உள்ளது.

அதற்கு, “ஊடுருவும் தன்மை கொண்ட பொருளாதாரம்” (Transparency) என்று, மேற்கத்திய நாடுகளால் அடிக்கடி சொல்லப் படும் காரணத்தை தான் அமெரிக்காவும் சுட்டிக் காட்டியது.

அதாவது, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப் பட்ட, சிறிலங்கா வங்கிகளை, சர்வதேச மூலதனம் நினைத்த நேரத்தில் கட்டுப்படுத்த முடியும். தமிழீழ வங்கிக்குள் என்ன நடக்கிறது என்று பார்க்க முடியாது. இதனை அமெரிக்க தூதுவராலயம் மிகத் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

ஆரம்ப காலங்களில், தமது இயக்கத்தை மார்க்சியம் வழிநடத்துவதாகவும், சோஷலிசத் தமிழீழத்திற்காக போராடுவதாகவும் சொல்லிக் கொண்ட புலிகள், தமது இடதுசாரி பாரம்பரியத்தை தொடர்ந்தும் பேணி வந்திருந்தால், இன்று வரைக்கும் நிலைத்து நின்றிருக்கலாம்.

ஆனால், கொள்கையை விட நிதி மூலதனம் முக்கியம் என்று கருதி, “தமிழ் தேசிய” முதலாளிகளை உருவாக்கி விட்ட பலனை உணர்ந்து கொள்வதற்குள் காலம் கடந்து விட்டது.

தமிழீழக் கட்டுமானத்தில் முக்கிய பங்காற்றுவார்கள் என்று நம்பப் பட்ட தமிழ் தேசிய முதலாளிகள், இறுதிப் போரில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து நடந்தார்கள்.

அதன் விளைவு, இன்று எல்லோருக்கும் தெரிந்த வரலாறாகி விட்டது. சர்வதேச மூலதனத்தின் பாதையில் தடைக்கல்லாக நின்ற “இடதுசாரி புலிகள்” அழிக்கப் பட்டனர். “வலதுசாரி தமிழ் தேசிய முதலாளிகள்”, சிங்கள அரசுடன் கூட்டுச் சேர்ந்து, சர்வதேச மூலதனத்தில் ஐக்கியமாகி விட்டனர்.

-கலையரசன்-

Share.
Leave A Reply

Exit mobile version