இலங்கையில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றங்கள் இல்லாவிட்டாலும் மூன்று மாவட்டங்களிலிருந்து இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இலங்கையின் மொத்தமுள்ள 22 தேர்தல் மாவட்டங்களிலிருந்து 196 பேரும், தேசியபட்டியல் வழியாக 29 பேரும் என மொத்தமாக 225 உறுப்பினர்கள் இந்த தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்கள்.
தேர்தல் மாவட்டரீதியாக தெரிவாகும் உறுப்பினர்கள் அதற்கான வேட்பாளர் பட்டியலில் இடம்பெறவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கை தொடர்பான விவரங்கள் தற்போது தேர்தல்கள் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
இறுதியாக 2010ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டு குறைந்துள்ளது.
அதன்படி 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் யாழ் மாவட்டத்திலிருந்து தெரிவான உறுப்பினர்களின் எண்ணிக்கை ஒன்பதாக இருந்தது. இம்முறை தெரிவாகும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 7 ஆக குறைந்துள்ளது.
இதற்கு மாறாக, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் தலா ஒரு உறுப்பினர் என்கிற ரீதியில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டு 10 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த இரத்தினபுரி மாவட்டத்திலிருந்து இம்முறை 11 பேரும் 7 உறுப்பினர்கள் தெரிவாகியிருந்த நுவரெலியா மாவட்டத்திலிருந்து 8 பேரும் தெரிவாகும் வகையில் இந்த மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
ஆண்டுதோறும் தேர்தல் வாக்காளர் பதிவேடு தேர்தல்கள் ஆணையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் மாவட்ட ரீதியான வாக்காளர் எண்ணிக்கையைக்கொண்டு தேர்தல்கள் ஆணையாளரால் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படுவதாக தேர்தலகள் செயலகம் கூறுகின்றது.
2014ஆம் ஆண்டு வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையிலேயே இந்த கணிப்பீடு அமைவதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம். ஏ மொஹமட் தெரிவித்திருக்கிறார்.