எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட தயார் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
வீரகெட்டிய – மெதமுலனவில் இன்று இடம்பெற்ற விசேட மக்கள் சந்திப்பில் வைத்தே அவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
எனினும், எந்த கட்சியில் இணைந்து தாம் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்ற விடயத்தை முன்னாள் ஜனாதிபதி வெளியிடவில்லை.
எந்தவித சவால்கள் மற்றும் எதிர்தரப்பினரின் அச்சுறுத்தல்கள் இருந்த போதும் தாம் பொதுமக்களின் பலத்துடன் மீண்டும் அரசியலில் ஈடுபடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாம் ஆட்சி செய்த காலத்தில் அரசியலமைப்புக்கு ஏற்றவகையிலேயே செயற்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எனவே. புதிய அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில் தாம் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தலின் போது தமக்கு ஆதரவளித்த பெரும்பான்மை மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் அமைச்சர்கள், அரச பிரதானிகள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் மெதமுலனயில் கூடியிருந்தனர்.
பொது தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடுமாறு முன்னாள் ஜனாதிபதியை கோருவதற்காக முன்னாள் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களுடனான வாகன பேரணி இன்று காலை தெவிநுவர விஷ்னு தேவாலயத்தில் இருந்து ஆரம்பமானது.
அத்துடன் முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஜீ.எல்.பீரிஸ், குமார வெல்கம, மகிந்தானந்த அலுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்த்தன, எஸ்.எம் சந்ரசேன, ஆர்.துமிந்த சில்வா, ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மாலனி பொன்சேகா, பவித்ரா வன்னியாராச்சி, கமலா ரணதுங்க, ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.
இதுதவிர, டி.பி. ஏக்கநாயக்க, ஜொன்ஸ்டன் பெர்ணாண்டோ, கேஹலிய ரம்புக்வெல்ல, சந்திம வீரக்கொடி, விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்த்தன, நிஷாந்த முத்துஹெட்டிகம, திஸ்ஸ கரலியத்த, மனுஷ நாணயக்கார, ஆகிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் மெதமுலனயில் கூடியிருந்தனர்.
இதனிடையே, திஸ்ஸ விதாரன, சரண குணவர்த்தன, உள்ளிட்ட மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சப்ரகமுவ மாகாண முதலமைச்சர் மஹிபால ஹேரத், வட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம் ரஞ்சித் உள்ளிட்ட மாகாண மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இதுதவிர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் இன்று மெதமுலனவிற்கு சென்றிருந்தமை விஷேட அம்சமாகும்.
இதன்போது, அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, தம்மிடம் மக்கள் நம்பிக்கை மாத்திரமே இருப்பதாக குறிப்பிட்டார்.
முன்னாள் ஜனாதி;பதி மகிந்த ராஜபக்ஷ, பொது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் இன்று அறிவிப்பு ஒன்றை விடுத்தார்.
எனினும், எந்த கட்சியில் அவர் போட்டியிடவுள்ளார் என்பது தொடர்பில் இன்னும் ஸ்திர பதில் வெளியாகவில்லை.
இது தொடர்பில் எமது செய்தி சேவை முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அலுத்கமகேவை தொடர்பு கொண்டு வினவியது.
அதற்கு பதிலளித்த அவர் முன்னாள் ஜனாதிபதி ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளதாக குறிப்பிட்டார்