இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவ போக்குவரத்து விமானம் விழுந்து நொறுங்கிய இடத்திலிருந்து இதுவரை 140 சடலங்கள் மீட்கப்பட்டிருப்பதாக அந்நாட்டின் காவல்துறை தெரிவித்துள்ளது.
அந்த விமானத்தில் பயணம் செய்த யாருமே உயிர் பிழைக்கவில்லை. அவர்கள் தவிர விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்த 20 பேரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இந்த விமானம் பறக்கத்துவங்கிய சிறிது நேரத்தில் நிகழ்ந்த இந்த விபத்துக்கான காரணம் என்ன என்பது இன்னமும் உறுதியாகத் தெரியவில்லை.
இந்த விமானம் வானில் பறக்கத்துவங்கிய சிறிது நேரத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமான ஓட்டி மீண்டும் விமானநிலையத்துக்கு திரும்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாகாவும் அடுத்த சில நிமிடங்களில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷிய இராணுவத்தின் பழசாகிப்போன தளவாடங்கள், வாகனங்கள் அனைத்தையும் மறு ஆய்வுக்குட்படுத்தவேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி ஜோகோ விதோதோ உத்தரவிட்டிருக்கிறார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் இந்தோனேஷிய இராணுவ விமானம் விபத்துக்குள்ளாவது இது நான்காவது முறை.