இலங்கையின் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பினை தொடர்ந்து கட்சிகளின் தேர்தல் தொடர்பான செயற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றுவருகின்றன.அதேவேளை, கட்சி தாவும் வேலைகளும் உட்கட்சி மோதல்களும் ஆரம்பமாகியுள்ளதை காணமுடிகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக கட்சிகளுக்குள் ஆதிக்கம் செலுத்த முனைவோரினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாரிய நெருக்கடிக்குள் செல்லும் நிலையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை எதிர்கொண்டுள்ளது.
இந்த தேர்தலிலே, கிழக்கு மாகாணத்தினை பொறுத்தவரையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலத்த நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீடு தொடர்பில் இன்று கிழக்கு மாகாணத்தின் பிரதான மாவட்டமாகவுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் விமர்சனங்கள் எழுவதை காணமுடிகின்றது.
உதராணமாக, தேர்தலில் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில் மக்களின் கருத்துகள் பெறப்படாமை குறித்து பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.
முன்னைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு மாகாணசபை உறுப்பினர்களும் மூன்று கட்சியை சார்ந்தவர்களும் இம்முறை தேர்தலில் குதிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டாக அறியமுடிகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தினைப் பொறுத்தவரையில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
முஸ்லிம் மற்றும் தமிழ் வாக்காளர்களில் இருந்து இவர்கள் தெரிவுசெய்யப்படுவர். இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்காக இந்த முறை தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடாக எட்டு பேர் களமிறக்கப்படவுள்ளனர்.
பட்டிருப்பு தொகுதியில் இருந்து நான்கு பேரும் மட்டக்களப்பு தொகுதியில் இருந்து இரண்டு பேரும், கல்குடா தொகுதியில் இரண்டு பேரும், களமிறக்கப்படவுள்ளனர்.
இதில் பட்டிருப்பு தொகுதியை பொறுத்தவரையில் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு மாகாணசபை உறுப்பினரும் ஆசிரியர் ஒருவரும் களமிறக்கப்படவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று மட்டக்களப்பு தொகுதியில் மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் கிறிஸ்தவ மதத்தினை சேர்ந்த ஒருவரும் களம் இறங்கவுள்ளதுடன், கல்குடா தொகுதியில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிபர் ஒருவரும் களம் இறங்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தெரிவுகள் தொடர்பில் பல விமர்சனங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்வைக்கப்படுவதை சமூக வலைத்தளங்களிலும் பிரதேச இணையத் தளங்களிலும் மற்றும் பொது நிகழ்வுகளிலும் காணமுடிகின்றது.
பட்டிருப்பு தொகுதியில் ஒரே கிராமத்தில் இரண்டு வேட்பாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர். டெலோவில் ஒரு மாகாணசபை உறுப்பினரும் புளொட்டில் ஆசிரியர் ஒருவரும் ஒரே கிராமத்தில் களமிறக்கப்படவுள்ளமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு மூன்று தடவைகள் இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை வகித்தபோதிலும் புதியவர்களுக்கு சந்தர்ப்பத்தினை வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பிலும் வலியுறுத்தல்கள் விடுக்கப்பட்டுவருகின்றன.
இந்த வலியுறுத்தல்களை கட்சியின் உயர்பீடத்தினை சேர்ந்தவர்களும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நிலைமை சென்றுதாக கட்சி வட்டாரங்களில் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், கடந்த காலத்தில் ஏற்பட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியில் தாங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்ததன் காரணமாக இன்றும் தாங்கள் தான் இருக்கவேண்டும் என்றும் வேறு யாருக்கும் சந்தர்ப்பம் வழங்கமுடியாது என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் ஒரே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இவ்வாறான நிலையில் மட்டக்களப்பு தொகுதி மற்றும் பட்டிருப்பு தேர்தல் தொகுதிகளில் புதியவர்களை உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கை பலமடைந்து வருகின்றது.
பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் உலக தமிழர் பேரவையுடன் தொடர்புபட்ட முக்கிய உறுப்பினர் ஒருவரை களமிறக்கும் பணிகளில் பொது அமைப்புகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை கேட்டுள்ளனர்.
இதேபோன்று மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் படுவான்கரை பிரதேச மக்களினால் கல்வி அதிகாரி ஒருவரை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கைகள் விடுக்கப்பட்டுவருகின்றன.
கடந்த கால யுத்தம் காரணமாக மிகவும் மோசமான நிலையில் இன்னும் மீளமுடியாத நிலையில் உள்ள படுவான்கரை பிரதேசத்தில் அங்கே இருந்து செயற்படக்கூடிய ஒருவரை நியமிக்கவேண்டும் என தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த கல்வி அதிகாரியை வேட்பாளராக நியமிக்கவேண்டும் என பரவலாக பொது அமைப்புகள் வேண்டுகோள் விடுத்துவருகின்றன.
இந்த வேண்டுகோளானது படுவான்கரையில் இருந்து இன்று எழுவான்கரை வரை வந்துள்ளது. குறித்த கல்வி அதிகாரியை நியமிக்கவேண்டும் என அறுபதுக்கும் மேற்பட்ட அமைப்புகள் தமிழரசுக் கட்சியின் தலைவருக்கு மகஜர்களை அனுப்பியுள்ளன.
குறிப்பாக மட்டக்களப்பு நகரில் உள்ள அமைப்புகளில் பெரும்பாலான அமைப்புகள் குறித்த கல்வி அதிகாரியை வேட்பாளராக நியமிக்குமாறு கட்சி தலைமைகளிடம் கோரிக்கை விடுத்துவருகின்றன.
இவ்வாறான நிலையில் சில மாகாணசபை உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் தமக்கு வேட்பாளர் அனுமதி தராவிட்டால் வேறு கட்சிகளில் இணைந்து போட்டியிடுவதற்கு தயாராகிவருவதாக நம்பகரமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் தோன்றியுள்ள இந்த நிலைமைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கப்போகின்றது என்பதை பொறுத்தே அதன் எதிர்காலத்தினை தீர்மானிக்கமுடியும்.
குறைந்தது நான்கு ஆசனங்களைப்பெற்றுக்கொள்ளவேண்டும் என்று முனைப்புக்காட்டிவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதன் நகர்வுகளை எவ்வாறு முன்கொண்டுசெல்லப்போகின்றது என்பதை பொறுத்திருந்தே பார்க்கவேண்டிய நிலையுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் இந்த முறை தமிழர்களின் வாக்குகள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்துசெல்லக்கூடிய நிலையிருக்கின்றது.
முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை தவிர அனைத்து தலைமைகளும் களமிறங்கவுள்ள நிலையில் முஸ்லிம் மக்களின் வாக்குகள் பிரிந்துசெல்வதற்கான வாய்ப்புகள் அவர்களைப்பொறுத்த வரையில் அரிதாகவே உள்ளன.
ஆனால் தமிழர்களுக்கு பெரும் நெருக்கடியான நிலையினை தோற்றுவிக்ககூடிய நிலைமைகள் தற்போது தோற்றம் பெற்றுவருகின்றன.
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தனியாக போட்டியிடுகின்றது. அதேபோன்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பல தமிழர்கள் களமிறங்கவுள்ள நிலையில் தமிழ் தேசிய முன்னணியும் இம்முறை மட்டக்களப்பில் போட்டியிடுவதற்கான வேலைத்திட்டங்களை மேற்கொண்டுவருகின்றது.
அத்துடன் பல குழுக்களும் சுயேட்சையாக களமிறங்கவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.
இந்த நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளே அவர்களின் வாக்குகள் பிரிந்துசெல்லாமல் தடுப்பதற்கான இருக்க முடியும்.
இன்று மக்கள் மத்தியில் தோன்றியுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்பான அதிருப்தியை இல்லாமல் செய்வதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும்.
மட்டு.மைந்தன்